என் மலர்
தமிழ்நாடு
மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்துள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்
- மாணவர்களை புத்தகம் வாசிக்க வைத்து கற்றல் திறனை கண்டறிந்தார்.
- கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் பணம் பெற அவசியம் இல்லை.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருமூச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவர்களை புத்தகம் வாசிக்க வைத்து கற்றல் திறனை கண்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.
பெருமூச்சி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்கள் திறமையுடன் பதில் அளித்தனர். இதனை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்துள்ளது.
கல்வித்துறைக்கு சட்டசபை வரலாற்றிலேயே அதிக நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். வருகிற 2026-ம் ஆண்டுக்குள் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சரி செய்யப்படும்.
ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மிக முக்கியம். அவர் கப்பலின் கேப்டனை போல. ஆசிரியர்கள் அவருடன் இருந்து சிறப்பாக பணியாற்றுவதால் அந்த பள்ளி சிறப்பாக செயல்படுகிறது.
கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் பணம் பெற அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், சமையல் கூடத்தையும் பார்வையிட்டார்.