என் மலர்
தமிழ்நாடு
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கிற்கு தமிழக அரசுதான் காரணம்- அன்புமணி ராமதாஸ்
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில் இங்கு மருத்துவ முகாம் நடத்துகிறோம்.
- பாதிப்புக்கு அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. சார்பில் மருத்துவ முகாம் கடலூர் கண்டகாடு பகுதியில் இன்று காலை நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேரில் வந்தார்.
பின்னர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில் இங்கு மருத்துவ முகாம் நடத்துகிறோம். அரசு சார்பில் நடத்த வேண்டியதை நாங்கள் செய்து வருகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் பல மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்கிறேன்.
இந்த மருத்துவ முகாம் என்பது மிக அவசியமானது என மருத்துவர் என்ற முறையில் நான் செய்து உள்ளேன். புயல் தாக்கி ஒரு வாரம் ஆகயும் இன்னும் இந்த பகுதிக்கு சரியான முறையில் நிவாரணம் வரவில்லை. இங்கு மருத்துவர்கள் வரவில்லை. இங்கு வந்து பாதிப்புகள் கணக்கெடுக்க அதிகாரிகள் வரவில்லை. இதுதான் தமிழ்நாட்டின் தலைவிதி.
இந்த புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு இருப்பது இயற்கையானது. இதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இதனால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு சார்பில் முடியும். அதுதான் அரசாங்கத்தின் வேலையாகும்.
ஆனால் அரசின் மெத்தனப்போக்கால் தென்பெண்ணை ஆற்றில் ஒரே நாளில் 1.70 லட்சம் கன அடி வினாடிக்கு தண்ணீர் வெளியேற்றியதால் இந்த மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை தண்ணீர் வீட்டுக்குள் வந்துள்ளது. அப்போது நீங்கள் உங்கள் உயிரை தான் முதலில் காப்பாற்ற வேண்டியது முக்கியம் என்ற நோக்கில் வெளியேறி இருப்பீர்கள்.
ஆனால் முன்கூட்டியே அரசு சார்பில் 6 மணி நேரத்திற்கு முன்பு கூறினால் உங்களை பாதுகாப்பாக வெளியேற்றி உங்கள் பொருட்களை அனைத்தையும் காப்பாற்றி இருக்கலாம். இந்த பாதிப்புக்கு அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் நானும் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டித்து உள்ளோம். இந்த தி.மு.க. அரசு அ.தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் விடப்பட்டபோது விமர்சனம் செய்தார்கள். இதனை விட மோசமானது தி.மு.க. அரசு சாத்தனூர் அணையை திறந்து விட்டதுதான்.
ஆனால் இது அரசு செய்த மிகப்பெரிய தவறாகும். ஒரு பக்கம் தவறு நேரிட்டாலும் அதற்கு மாறாக நிவாரணம் மற்றும் உதவி செய்திருக்க வேண்டும். ஆனால் ரூ.2 ஆயிரம் மட்டும் நிவாரணம் வழங்கினால் மக்கள் என்ன செய்வார்கள்? இந்த பணத்தை வைத்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்வதற்கு சரியாகுமா? ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் முழுவதும் சேதமாகி உள்ளது. இதனை பார்க்கும்போது அரசு ஆணவமாக இந்த நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது.
மேலும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டால் 9-வது மாடியில் இருக்கும் நபர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். தூத்துக்குடியில் வெள்ளம் ஏற்பட்டபோது 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். ஆனால் கடலூரில் வெள்ளம் ஏற்பட்டால் 2 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்குகிறார்கள். இதுதான் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள்.
ஆனால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி போன்ற மக்கள் பாவம் பட்டவர்களா? தூத்துக்குடி, சென்னை மக்கள் புண்ணியம் செய்தார்களா? அங்குள்ள மக்களுக்கு ரூ.6 ஆயிரம். இங்குள்ள மக்களுக்கு ரூ.2 ஆயிரம். அதனையும் தூக்கி போடுகிறீர்கள். மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், நிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் குறித்து பார்வையிட்டு தான் வருகின்றேன். வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நோய் மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என தெரியவில்லை. தி.மு.க. கிளை செயலாளர் மூலம் கணக்கெடுப்பு பணி நடந்துள்ளது. இது வெட்க கேடான செயலாகும். அவர்கள் மூலமாக தான் காசு வரும். அவர்கள் கமிஷன் எடுத்துக் கொள்வார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதனை பார்க்கும் போது மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். தினம் ஒரு மணி நேரம் 2 மணி நேரம் கால்ஷீட் கொடுத்தால் போதாது. சொல்றது புரிகிறதா யாரை சொல்கிறோம் என தெரிகிறதா? இதனை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்துவார்கள். இதுதான் தமிழ்நாட்டில் நடக்கிறது. எங்கு பாத்தாலும் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கடும் கோபமாக அரசை பற்றி குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். எதற்கெடுத்தாலும் காசு லஞ்சம் பெற்றுக் கொண்டு வருகின்றனர். தியாகி செந்தில் பாலாஜி என்ற ஒருவர் உள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். மக்களுக்காக சிறைக்கு சென்று உள்ளார் என நினைப்பு. ஆனால் 400 நாட்கள் ஜெயிலில் இருந்து வந்த அவர் அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் என்ன நடக்கிறது அவருக்கு தெரியுமா? ஆனால் அவருக்கு லஞ்சம் பெறுவது தான் தெரியும். இது போன்ற மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தி.மு.க. போல் போட்டோ பிடித்து செல்வதில்லை. இங்கு சிகிச்சை பெறும் மக்களை தொடர்ந்து பின்பற்றி அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் சரி செய்ய எவ்வளவு பெரிய போராட்டம் நடத்த தயங்க போவதில்லை.
உங்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு அனைத்தையும் அரசு கொடுக்க அழுத்தம் கொடுத்து செய்து கொடுப்போம்.
இவ்வாறு பேசினார்.
அப்போது மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொருளாளர் திலக பாமா , மாநில சொத்து பாதுகாப்பு குழு கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர்கள் சண். முத்து கிருஷ்ணன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், மகேஷ், சமூக முன்னேற்ற சங்கம் தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட தலைவர் தடா. தட்சிணா மூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.