என் மலர்
தமிழ்நாடு
உங்கள் வீட்டு பிள்ளையாக துணை நிற்பேன்- உதயநிதி ஸ்டாலின்
- இந்தியாவிலேயே விளையாட்டு துறையில் தமிழகம் சாதனைகள் படைத்து வருகிறது.
- மகளிர் சுயமரியாதையாக வாழ வேண்டும்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் இன்று காலை விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 288 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. விளையாட்டு துறையில் சாதிக்கக்கூடிய வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசு சார்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தோம். விரைவில் முதலமைச்சர் கைகளால் விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு வேலை வழங்கி வாக்குறுதியை உறுதி செய்வோம்.
இந்தியாவிலேயே விளையாட்டு துறையில் தமிழகம் சாதனைகள் படைத்து வருகிறது. பலவிதமான விருதுகளை தமிழக விளையாட்டு துறை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநில விருது தமிழகத்திற்கு கிடைத்தது பெருமைக்குரியது.
புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து வழங்குவது தான் திராவிட மாடலின் தனித்துவம்.
மகளிர் சுயமரியாதையாக வாழ வேண்டும். யாருடைய ஆதரவும் இல்லாமல் தலை நிமிர்ந்து வாழ்வதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டது அவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. பெரியார் கண்ட கனவை கலைஞர் கருணாநிதி இதன் மூலம் சாத்தியபடுத்தினார்.
இதுவரை மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.92 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அரணாக நின்று காத்து வருகிறார். இன்று 3000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கை மேம்படும்.
நான் உங்கள் வீட்டு பிள்ளையாக துணை நிற்பேன்.
மாற்றுத்திறனாளிகளின் சிரிப்புதான் திராவிட மாடலின் வெற்றி. மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் செயற்கை கால்கள் வழங்கப்படுகிறது. நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து நலத்திட்டங்களை வழங்குகிறோம்.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. திராவிட மாடல் என்றால் என்ன என சிலர் கேட்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல்.
நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் விடியல் பயண திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இதன் மூலம் இதுவரை 580 கோடி பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.
அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகிறது. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
மகளிர் வளர்ந்தால் மாநிலம் வளரும். மக்களோடு மக்களாக கைகோர்த்து இந்த அரசு செயல்படும். முதலமைச்சர் உங்கள் குடும்பத்தின் ஒருவராக துணையாக இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.