search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைனுக்கு போர் விமானங்களை அமெரிக்கா வழங்க வேண்டும்- அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்
    X

    உக்ரைனுக்கு போர் விமானங்களை அமெரிக்கா வழங்க வேண்டும்- அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

    • ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த சூழ்நிலையும் இல்லை.
    • மேற்கத்திய போர் விமானங்கள் வழங்குவது உக்ரைன் வெற்றிக்கு உதவும் என்று நம்புகிறோம்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.

    உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம் போரிட்டு வருவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமெரிக்கா எங்களுக்கு ஆதரவு அளிக்கிறது என்பது முழு உலகிற்கும் ஒரு முக்கியமான செய்தியாகும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அமெரிக்கா நம்புகிறது. எங்களுக்கு எப்-16 போர் விமானங்கள் கண்டிப்பாக தேவை. இந்த போர் விமானங்கள்தான் ரஷியாவுக்கு எதிரான உக்ரைன் வெற்றியை தீர்மானிக்கும். உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபரிடம் முறையிட்டு இருக்கிறோம். அது செயல்படுத்தப்படும் என்று அவர் என்னிடம் கூறினார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்த விவாதத்தின் போது, தற்போது போர் விமானங்கள் தேவையில்லை என்று ஜோ பைடனும், அவரது உதவியாளர்களும் கூறினர். அப்போது எங்களுக்கு அந்த போர் விமானங்கள் தேவை என்று கூறினேன்.

    மேற்கத்திய போர் விமானங்கள் வழங்குவது உக்ரைன் வெற்றிக்கு உதவும் என்று நம்புகிறோம். இதனால் எங்களுக்கு போர் விமானங்கள் அவசரமாக தேவை.

    ரஷிய அதிபர் புதினை நம்ப முடியாது என்பதால் அவரை சந்திக்கமாட்டேன். ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த சூழ்நிலையும் இல்லை. ஏனென்றால் புதின் அவரது வார்த்தையை கடைபிடிக்கவில்லை. அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    எங்கள் நாட்டில் இருந்து ரஷிய படைகள் வெளியேற வேண்டும். அதன்பிறகே தூதரக ரீதியாக பேச்சில் சேர முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×