என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிறுவன் தாக்கப்பட்டதை தட்டிக்கேட்ட 2 பேருக்கு கத்திக்குத்து
- சிறுவனை கதவை பூட்டி பலமாக தாக்கி உள்ளார்.
- காரில் ஏன் கிறுக்கி வைத்தாய் என்று திட்டியதாக தெரிகிறது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குரும்பபாளையம் ஆதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுதா. இவர்களது மகன் சத்தியவர்ஷன் (வயது 9). இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்தநிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் சிறுவன் சத்தியவர்ஷனை அழைத்து, காரில் ஏன் கிறுக்கி வைத்தாய் என்று திட்டியதாக தெரிகிறது. அப்போது சத்தியவர்ஷன் நான் எழுதவில்லை எனக் கூறிய நிலையில், அதைக்கேட்காத மோகன், சிறுவனை வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை பூட்டி சத்தியவர்ஷனை பலமாக தாக்கி உள்ளார்.
இதற்கிடையே சிறுவன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததை தொடர்ந்து பெற்றோர்கள், உறவினர்கள் அப்பகுதியில் தேடினர். அப்போது மோகன் வீட்டில் இருந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்கவே, உறவினர்கள் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகிய 2 பேர் மோகன் வீட்டிற்குள் சென்று தட்டிக்கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், கத்தியால் செல்வராஜ், கருப்பாத்தாளை சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த 2 பேரும் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.