என் மலர்
உள்ளூர் செய்திகள்
அமராவதி ஆற்றில் 36,000 கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- மழை இடை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.
- அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருப்பூர்:
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
திருப்பூரில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. மதியத்திற்கு பிறகு மழை பெய்யாத நிலையில், இன்று காலை முதல் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் உத்தரவிட்டார்.
காலையில் பெய்யத் தொடங்கிய மழை இடை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது.
சிதலமடைந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறி உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர் மழையால் பொதுமக்கள் பலர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
திருப்பூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, காங்கயம், தாராபுரம், பல்லடம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை தொடர்ந்து நீடித்து வருகிறது.
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இதன் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
நேற்று முதல் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணை முழு கொள்ளளவான 90 அடியை எட்ட ஆரம்பித்தது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் கரையோர கிராம பகுதிகளில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. தற்போது வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நேற்று காலை முதல் அருவியில் தண்ணீர் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.
அத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சூழலும் நிலவியது. அதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கோவில் நிர்வாகம் தடை விதித்தது.
மாலையில் சற்று அதிகரித்த நீர்வரத்து அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது. மேலும் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 2-வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு-18, கலெக்டர் முகாம் அலுவ லகம்-29, திருப்பூர் தெற்கு-24, கலெக்டர் அலுவலகம்-14, அவினாசி-5, ஊத்து க்குளி-16.30, தாராபுரம்-50, மூலனூர்-56, குண்டடம்-22, உப்பாறு அணை-48, நல்லதங்காள் ஓடை அணை-32, காங்கயம்-23.60, வெள்ளகோவில்-35, வட்டமலை கரை ஓடை அணை-38.60, உடுமலை பேட்டை-63, அமராவதி அணை-110, திருமூர்த்தி அணை-135, திருமூர்த்தி அணை ஐ.பி.,-138, மடத்து க்குளம்-90. மாவட்டம் முழுவதும் மொத்தம் 963.50 மி.மீ., மழை பெய்துள்ளது.