என் மலர்
உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து இது தொடர்பாக புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
- 4 பேரையும் போலீசார் பாளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று 2 பெண்கள் உட்பட 4 பேர் மனு அளிப்பதற்காக வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ளே நுழைந்தவுடன் திடீரென மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்து மண்எண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதை அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் விரைந்து சென்று தீக்குளிக்க முயன்றவர்களிடம் இருந்து மண்எண்ணை பாட்டில் மற்றும் தீப்பெட்டியை பறித்து விட்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தனர். அதன் விபரம் வருமாறு:-
நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் நயினார் முகமது. இவர் தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பழைய தியேட்டரை வாங்குவதற்காக ரூ. 45 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், அந்த தியேட்டர் அருகே இருந்த இடத்தை வாங்கிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், நயினார் முகமது ஒப்பந்தம் செய்திருந்த தியேட்டர் இடத்தையும் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நயினார் முகமது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் தற்காலிகமாக அந்த இடத்திற்கு இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், மேற்கொண்டு அந்த இடத்தில் பணிகள் எதுவும் நடத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை ஒரு கும்பல் அந்த தியேட்டர் வளாகத்துக்கு சென்று பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நயினார் முகமது, தனது மகள் ஜன்னத், மருமகள் அலிமா பேகம் மற்றும் ஒரு உறவினருடன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து இது தொடர்பாக புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவர் முறையிட வந்த நிலையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் பாளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.