search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை: சமாதானம் பேசுவது போல் அழைத்து வெறிச்செயல்- 2 பேர் கைது
    X

    காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை: சமாதானம் பேசுவது போல் அழைத்து வெறிச்செயல்- 2 பேர் கைது

    • காதல் விவகாரத்தில் விஜய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
    • இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 18-வது தெருவில் அண்ணாநகர் கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து இன்று காலை பயங்கர அலறல் சத்தம் கேட்டது.


    உடனே அப்பகுதி மக்கள் அங்கு ஓடிச் சென்றனர். அப்போது வீட்டில் இருந்து 2 பேர் கீழே இறங்கி தப்பி ஓடினர். உள்ளே சென்று பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது வீட்டின் மாடியில் உள்ள கூரை செட்டுக்குள் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடனடியாக கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜய் (வயது 25) என்பதும், அவரை சாந்திநகர், அண்ணாநகரை சேர்ந்த சிம்சோன் என்ற புஷ்பராஜ், அவரது நண்பரான சிவா ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் காதல் விவகாரத்தில் விஜய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    புஷ்பராஜின் சகோதரி ஒருவர் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் விஜயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    விஜய் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விஜயுடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

    இந்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன் விஜயை பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு சென்றார். அங்கு விஜயின் குடும்பத்தினரிடம் திருமணம் செய்வதற்காக சம்மதம் கேட்டுள்ளார்.

    அப்போது விஜயின் குடும்பத்தினர் இருவீட்டார் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற வேண்டும் கூறி அந்த பெண்ணை மீண்டும் நெல்லைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் மனம் உடைந்த அந்த பெண் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை காப்பாற்றி அறிவுரை கூறினர்.

    இந்நிலையில் தனது சகோதரியின் இந்த முடிவுக்கு விஜய் தான் காரணம் என கருதிய அவரது அண்ணன் புஷ்பராஜ் விஜயை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

    அதன்படி விஜயிடம் சமாதானம் பேசலாம் எனக்கூறி நெல்லைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதனை நம்பிய விஜய் இன்று காலை ரெயில் மூலம் நெல்லை வந்துள்ளார்.

    நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து விஜயை புஷ்பராஜ் தனது நண்பரான சிவா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு வீட்டின் மாடியில் சமாதானம் பேசிய போது விஜய்க்கும், புஷ்பராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசம் அடைந்த புஷ்பராஜ், சிவா ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயை வெட்டினர்.

    மேலும் அங்கு கிடந்த கட்டிட கழிவுகள் மூலமும் விஜயை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புஷ்பராஜ், சிவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×