என் மலர்
உள்ளூர் செய்திகள்
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு: இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு
- பெஞ்சல் புயலில் விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது சேறு வீசப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் இருவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பா.ஜ.க. பிரமுகர் விஜயரானி மற்றும் அவரது உறவினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
முன்னதாக,
பெஞ்சல் புயலால் வரலாறு காணாத மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியவில்லை. இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 3-ந்தேதி இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் ஆவேசமாக இருந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் மீதும் சேற்றை வீசியதால் பாதியில் புறப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.