search icon
என் மலர்tooltip icon
    • சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறார்.
    • இரண்டே நாளில் இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேருக்கு மேல் ரசித்துள்ளனர்.

    'ஐ ஷோ ஸ்பீடு' என்ற பெயரில் பிரபலமான யூ-டியூபர் ஸ்ட்ரீமர் . 19 வயது இளைஞரான இவர் பல்வேறு சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இவரை பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

    இவர் சமீபத்தில் வேகமாக ஓடி வரும் காரை, தாவிக்குதித்து தாண்டியபடி வீடியோ பதிவு செய்தார். இவருக்காக, இவரது தந்தை தங்களுக்கு சொந்தமான சொகுசு காரை வேகமாக ஓட்டி வருகிறார். ஓடி வரும் காருக்கு முன்னே தைரியமாக நிற்கும் ஸ்ட்ரீமர் சரியான நேரத்தில் காரை தாவிக்குதித்து, உயரம் தாண்டும் வீரர் போல அந்தப் பக்கம் சாய்ந்துவிடாமல் கம்பீரமாக நிற்கிறார்.

    பின்னர் சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறார். தந்தையுடன் ஹைபை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அந்த வீடியோவை பின்னர் வலைத்தளத்தில் பதிவேற்றினார். "இந்த சாகசத்தை செய்த உலகின் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்க" என்று பேசுகிறார். இரண்டே நாளில் இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேருக்கு மேல் ரசித்துள்ளனர்.

    • கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    • மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தமிழ்மணியின் நேர்காணலை அடிப்படையாக வைத்து கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நடைபெற்று வருகிறது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாட்டுக்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்' என அரசு தரப்பில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி பழங்குடியினர் நலத்துறை இயக்குனரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

    இதை படித்து பார்த்த நீதிபதிகள், 'கல்வராயன் மலைப்பகுதியில் அரசு பள்ளி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என கூறப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பொத்தாம் பொதுவாக கடந்த 10 ஆண்டுகளில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்

    மேலும், 'மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன அவற்றை அகற்ற அரசு முன்வர வேண்டும். தெரு பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கியது போல அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் சாதி பெயர்களை நீக்க நடவடிக்கை எடுங்கள்' என கருத்து தெரிவித்தனர்.

    பின்னர், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கல்வராயன் மலைப்பகுதிக்கு மீண்டும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த குழுவுடன் ஐகோர்ட்டுக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வக்கீல் தமிழ்மணியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அப்போது, வக்கீல் மோகன்தாஸ் ஆஜராகி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    அப்போது அவர், 'பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அரசு 9 கோடி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், ஆனால் அந்த தொகை இன்னமும் முழுமையாக செலவிடப்படவில்லை' என்று கூறி அதுதொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்தார். அதற்கு நீதிபதிகள், 'தங்களது கோரிக்கையை ஏற்கிறோம். அரசு குழுவுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தனியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யலாம்' என்றனர்.

    • வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
    • பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

    ரெயில்வேயில் பாயின்ட்மேன் பணி என்பது அதிகாரி தரத்திலான பணி இல்லை என்றாலும், அது ரெயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். தண்டவாளத்தின் பாயின்டுகளை சரிபார்த்து ரெயிலின் பாதுகாப்பை உறுதி செய்வது இவர்களின் பணி.

    இப்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மத்தியபிரதேசத்தின் ஸ்லீமனாபாத், துண்டி ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சில இடங்களில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு வெள்ளம் தேங்கிக் கிடக்கிறது. பயணிகளை ஏற்றி வந்த ரெயில், தண்டவாளம் தெரியாததால் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த இடத்தில் பாயின்ட்மேன்கள் 3 பேர், ரெயில் முன்பாக தண்ணீரில் தண்டவாளத்தில் நடந்து சென்றபடி ரெயிலை, தங்களை பின்தொடர்ந்து அழைத்து செல்கிறார்கள்.

    பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கு பின்னோக்கி செல்லும்போது உதவியாளர்கள், பின்புற சூழலை சரிபார்த்து வரலாம் வா... வரலாம் வா என்று சொல்லி அழைப்பதுபோல, பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

    • முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.
    • அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இணைப்பு என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி சேர்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், இதை விசாரிக்க அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் குமாரவேல், தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் ஆபிரகாம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.டிடி.டி.ஆர்.சி.) இயக்குனர் உஷா நடேசன் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டு இருந்தார். அதன் அடிப்படையில் பேராசிரியர்கள் முறைகேடாக பணிபுரிந்தது தொடர்பான விளக்கங்களை, கவர்னர் ஆர்.என்.ரவியிடம், அண்ணா பல்கலைக்கழகம் சமர்ப்பித்துள்ளது.

    மேலும் 3 பேர் கொண்ட குழு இந்த முறைகேடு தொடர்பான விசாரணையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்கான ஆவணங்கள் அனைத்தையும் அண்ணா பல்கலைக்கழகம், குழுவிடம் வழங்கியிருக்கிறது.

    அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர், முறைகேடு தொடர்பான அறிக்கையை இந்த குழு தயாரிக்கும் எனவும், அனேகமாக இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த பணிகள் நிறைவு பெற வாய்ப்பு உள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ளார்.
    • மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மத்திய மந்திரி அந்தஸ்து கொண்ட பதவி என்பதால், கூடுதல் வசதிகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட வேண்டும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினரானது முதல் அவருக்கு டெல்லி துக்ளக் லேனில் உள்ள 12-ம் எண் வீடு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதால், அந்த வீட்டை அவர் காலி செய்து தனது தாய் சோனியா வீட்டில் தங்கினார்.

    பின்னர் அவரது எம்.பி. பதவி திரும்ப வழங்கப்பட்டதும், மீண்டும் துக்ளக் லேன் வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அவர் அந்த வீட்டில் குடியேறவில்லை.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ளார். இது, மத்திய மந்திரி அந்தஸ்து கொண்ட பதவி என்பதால், கூடுதல் வசதிகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட வேண்டும்.

    எனவே சுனேரி பாக் சாலையில் உள்ள 5-ம் எண் மாளிகையை ராகுல் காந்திக்கு ஒதுக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதை உறுதிசெய்யும் வகையில் ராகுல் காந்தியின் சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா நேற்று அந்த வீட்டை பார்வையிட்டார். இதை ஏற்பது தொடர்பாக ராகுல் காந்தியின் பதிலுக்கு காத்திருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • அதிமுக இணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.
    • தொண்டர்கள் என்ன பதவி கொடுத்தாலும் அந்த பதவியை ஏற்பேன்.

    சென்னை:

    அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன், அமைப்பு செயலாளர் வெல்லமண்டி நடராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "சிலர் கூட்டத்தில் பேசும்போது தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுக என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சொத்து. அதன் 1½ கோடி தொண்டர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது தான் எனது கடமை'' என்று பேசினார்.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளராக மக்கள் என்னை தேர்ந்து எடுத்தார்கள்.

    இதன் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதை நிரூபித்து இருக்கிறார்கள். சி.வி.சண்முகமும் அதிமுக ஒருங்கிணைவதை விரும்புவதாக சொல்கிறார்கள். அவர் அதிமுக இணையாமல் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று சொல்லி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணமே அதிமுக ஒருங்கிணையாதது தான். இரட்டை இலை சின்னம் இதுவரை இதுபோன்ற தோல்வியை கண்டது இல்லை. அதிமுகவை பதவிக்காக ஒருங்கிணைக்க விரும்பவில்லை. தொண்டர்கள் என்ன பதவி கொடுத்தாலும் அந்த பதவியை ஏற்பேன்.

    பொதுக்குழு தொடர்பான 6 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 6 வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்று தெரிவித்து உள்ளது. அந்த தீர்ப்பு தான் இறுதியானது என்று சொல்லி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். நான் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் எப்போது பொதுச்செயலாளர் ஆனார் என்று நீதிபதி கேட்டு இருக்கிறார். பதில் சொல்ல முடியவில்லை. உடனே வாபஸ் வாங்கிவிட்டு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

    • டொனால்டு டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார்.
    • கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார்.

    பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து போர் குறித்து பேச்சுவார்த்தை நடந்தினார். பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக அமெரிக்க தெருக்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டுஅவரது உருவ பொம்மை மற்றும் அமெரிக்கக் கோடியை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அமைதி பேச்சுவார்த்தையை விரும்புவதாக அமெரிக்கா கூறி வந்தாலும் இஸ்ரேலுக்கு அதிகளவில் அமெரிக்கா நிதி வழங்கிவருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கியுள்ளனர்.

    எனவே தங்களுக்கான சாதக பாதகங்களைக் கணக்கில் வைத்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இன்று டொனால்டு டிரம்பையும் அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். கடைசியாக டிரம்ப் அதிபராக இருந்த சமயத்திலேயே நேதன்யாகு அவரை சந்தித்திருந்தார். இந்நிலையில் வெகு காலம் கழித்து நடந்த இந்த சந்திப்பில் காசாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாடியுள்ளார்.

     

     

    அப்போது இந்த பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர நேதன்யாகுவிடம் டிரம்ப் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு நேதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்றும் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து டிரம்ப் உயிர்பிழைத்த நிலையில் அவரது காதில் குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் குறித்து கேட்டறிந்தார். அப்போது தனது காதில் இருந்த புண்ணை நேதன்யாகுவுக்கு காட்டி விளக்கம் கொடுத்தார் டிரம்ப். 

     

     

    • புற்றுநோய்க்காக 131 அத்தியாவசிய மருந்துகள் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டு உள்ளன.
    • நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதிலளித்து பேசினார்.

    முக்கியமாக, புற்றுநோய் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சம் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

    இதில், ஆண்களில் பெரும்பாலும் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயும், பெண்களில் மார்பக புற்றுநோயும் காணப்படுகிறது.

    புற்றுநோய்க்காக 131 அத்தியாவசிய மருந்துகள் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவை கண்காணிக்கப்பட்டு அரசால் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பொதுவாக பயன்படுத்தும் மருந்துகள் ஆகும்.

    இந்த பட்டியலில் இல்லாத 28 கலவைகளும் உள்ளன. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மற்றும் அரசும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தியுள்ளன.

    இவ்வாறு புற்றுநோய்க்கான மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் சுமார் ரூ.294 கோடி வரை புற்றுநோயாளிகளுக்கு மிச்சமாகிறது.

    இதைப்போல குறைந்த செலவில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    மருத்துவக்கல்வி இடங்களின் எண்ணிக்கையும் 51,348-ல் இருந்து 1.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ உயர்கல்விக்கான இடங்களும் 31,185-ல் இருந்து 72,627 ஆகி இருக்கிறது.

    மருத்துவக்கல்வியின் தரத்திலும் அளவிலும் சமநிலை இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்தவரை விரைவாக செல்ல முயற்சிக்கிறோம். அதே நேரத்தில் மருத்துவர்களின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பவில்லை.

    இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை கூடும் நாள். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கலாம்.

    கும்பம்

    இன்றைய ராசி பலன்

    விடியும்பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் வளர்ச்சி உண்டு. 

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். வேலைப்பளு கூடும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையலாம். தொழில் பங்குதாரர்களால் தொல்லை அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். 

    ×