என் மலர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய பெய்த சாரல் மழை
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- களக்காடு தலையணையில் இன்று 9-வது நாளாக குளிக்க தடை.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் சாரல் மழை பெய்ததை தொடர்ந்து இன்று காலையிலும் மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு, மூலைக்கரைப் பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
காலையிலும் பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பணிக்கு செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் என பலதரப் பட்டவர்களும் மிகுந்த அவதி அடைந்தனர்.
அதிகபட்சமாக களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 9.20 மில்லி மீட்டரும், அம்பையில் 8 மில்லி மீட்டரும், நாங்குநேரி, சேரன்மகாதேவி, மூலைக் கரைப்பட்டி பகுதிகளில் தலா 7 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மாநகரில் டவுன், பேட்டை, சந்திப்பு, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, சமாதானபுரம், பாளை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலை மீண்டும் மழை தொடர்ந்து வருகிறது.
தொடர் மழை காரணமாக களக்காடு தலையணையில் இன்று 9-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கடனா அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 14 மில்லி மீட்டரும், ராமநதி அணை பகுதியில் 12 மில்லி மீட்டரும், குண்டாறு அணையில் 15 மில்லி மீட்டரும், கருப்பா நதி அணையில் 11.5 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் லேசான சாரல் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
அதிகபட்சமாக செங்கோட்டையில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.தென்காசியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. காலையில் தொடரும் மழை காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், பணிக்கு செல்பவர்களும் மிகுந்த அவதி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகர பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல தேங்கியது. அங்கு அதிகபட்சமாக 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தை பொறுத்த வரை கடம்பூர், காடல்குடி, வைப்பார், சூரங்குடி ஆகிய இடங்களில் கனமழை இரவு முழுவதும் பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூரங்குடி 34 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கழுகுமலை, கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளிலும் விடிய விடிய சாரல் மழை பெய்தது. திருச்செந்தூர், சாத்தான்குளம், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களிலும் சாரல் அடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.