search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மத்திய ஜெயிலில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கைதிகள்
    X

    கோவை மத்திய ஜெயிலில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கைதிகள்

    • ஆத்திரம் அடைந்த 2 கைதிகளும் போலீசாரை சரமாரியாக தாக்கினர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ள ஒரு கைதி நேற்று மாலை டவர் பிளாக் பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசிடம், நான் மேலதிகாரியை பார்க்க வேண்டும் என கூறினார். இதனை அவர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

    தொடர்ந்து அந்த வாலிபர் ஜெயில் அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை மீண்டும் அறைக்குள் செல்லும்படி போலீசார் கூறினர். அப்போது அவருடன் மேலும் ஒரு கைதியும் சேர்ந்து கொண்டார்.

    தொடர்ந்து அவர்கள் ஜெயிலில் இருந்து தப்ப முயன்றனர். அப்போது அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 2 கைதிகளும் போலீசாரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து தகவலறிந்த சிறை வார்டன்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து கைதிகளை சமரசப்படுத்தி மீண்டும் சிறை அறையில் அடைந்தனர்.

    இதற்கிடையே கோவை சிறைச்சாலையில் போலீசார் தாக்கப்பட்டது குறித்து ஜெயில் வார்டன் மனோரஞ்சிதம் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் ஜெயில் அறையில் இருந்து வெளியே வந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டது ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் அருகே உள்ள முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீம் (வயது 32) என்பதும், அவருக்கு உடந்தையாக இருந்து போலீசாரை தாக்கியது கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, புதுத் தெருவை சேர்ந்த அப்துல் சலீம் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாக ஆசிப், அப்துல்சலீம் ஆகியோர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×