search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
    • ஒற்றை காட்டு யானை ஒன்று செம்மேடு கிராமத்திற்குள் புகுந்தது.

    பேரூர்:

    கோவை ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஊருக்குள் வரும் யானைகள் குடியிருப்புகள், கடைகளை சேதப்படுத்துவதோடு, விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு பயரிடப்பட்டிருக்கும் பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பூண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று செம்மேடு கிராமத்திற்குள் புகுந்தது.

    அங்கு நீண்ட நேரமாக சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அங்குள்ள தினகரன் என்பவரது மளிகைக் கடையின் முன் பகுதியை உடைத்து உள்ளே இருந்த இரண்டு 25 கிலோ அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து போட்டு தின்றது.யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்து அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்த யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு காட்டு யானை அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது. வனத்தை விட்டு வெளியேறும் யானை கூட்டங்கள் அடிக்கடி குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்துகிறது.

    எனவே யானை நடமாட்டத்தை கண்காணித்து யானை ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • ரெயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.
    • 60 நாட்கள் என்பது, எளிதாக அனைவருக்கும் மனதில் நிற்கக் கூடிய நாட்களாகும்.

    குனியமுத்தூர்:

    சென்னை, கோவை உள்பட பெரு நகரங்களில் தங்கியருக்கும் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    அவ்வாறு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான். இதற்காக ரெயிலில் முன்பதிவு செய்து விடுவார்கள்.

    இப்படி ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்பே அதாவது 4 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பயணிக்க முடியும் நிலை இருந்தது. பயணிகளும் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து, பயணித்து வந்தனர்.

    இந்த நிலையில், ரெயில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த நடைமுறையானது வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ரெயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து போத்தனூர் ரெயில் பயணிகள் சங்க பொதுச் செயலாளரும், சேலம் ரெயில்வே கோட்ட பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் கூறியதாவது:-

    ரெயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். பொதுவாக ரெயில் பயணம் செய்ய விரும்புவர்கள் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக்கிங் செய்து, பிளாக் செய்து விடுவதால், அவசர தேவைகளுக்காக செல்பவர்களுக்கு அது கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் ஏஜென்ட்கள் இதுபோன்று அதிகப்படியான டிக்கெட் புக்கிங் செய்து விட்டு, கடைசி நேரத்தில் அதனை கேன்சல் செய்து விடுவதும் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பயணிகள் மட்டுமே.

    மேலும் நீண்ட நாட்களுக்கு முன்பு புக்கிங் செய்யும்போது ஒரு சிலருக்கு மறதி ஏற்பட்டு, பயணிக்கும் நாட்களையும் தவற விடும் சூழலும் உள்ளது.

    தற்போது முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 60 நாட்களாக குறைக்கப்படும் என்ற ரெயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு வரவேற்க கூடியதாகும்.

    60 நாட்கள் என்பது, எளிதாக அனைவருக்கும் மனதில் நிற்கக் கூடிய நாட்களாகும். மேலும் தேவையற்றவர்கள் புக்கிங் செய்து வைத்திருப்பது குறையும். ரெயில்வே துறையின் இத்தகைய முடிவு ரெயில் பயணிகளுக்கு முற்றிலும் நன்மையே ஆகும். பயணிகள் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குளத்தின் ஒரு பகுதியில் அரை ஏக்கரில் நங்கூரம் (ஆங்கரிங் மெத்தடு) முறையில் சோலார் பேனல்கள் மிதக்கவிடப்பட்டு உள்ளது.
    • ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாநகராட்சி சார்பில் தமிழகத்திலேயே முதல் முதலாக உக்கடம் பெரியகுளத்தில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 45 லட்சத்தில் ஜெர்மன் நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து சோலார் மூலம் மின்சாரம் எடுக்க குளத்துக்குள் சோலார் பேனல்களை மிதக்க விடும் பணி தொடங்கியது. இதற்காக இந்த குளத்தின் ஒரு பகுதியில் அரை ஏக்கரில் நங்கூரம் (ஆங்கரிங் மெத்தடு) முறையில் சோலார் பேனல்கள் மிதக்கவிடப்பட்டு உள்ளது.

    அதை கண்காணிக்கவும், அவற்றை யாரும் சேதப்படுத்தி விடுவதை தடுக்கவும் அங்கு இரவு நேரத்திலும் தெளிவாக தெரியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அத்துடன் அங்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்திலேயே தண்ணீரில் சோலார் பேனல்களை மிதக்கவிட்டு மின்சாரம் எடுக்கும் முதல் பணி என்பதால் இந்த பணியை நேர்த்தியாகவும், விரைவாகவும் முடித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் தினமும் 154 கிலோ வாட் மின்சாரம் எடுக்க முடியும். இன்னும் 2 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மின்சாரம் தயாரித்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கல்லாறு மற்றும் அதற்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
    • ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    இதனால் கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக மேட்டுப்பாளையம் வனச்சரத்துக்குட்பட்ட கல்லாறு மற்றும் அதற்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

    இந்த கனமழையால், பவானி ஆற்றுக்கு தண்ணீர் வரும் கல்லார் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    வனப்பகுதியில் பெய்த மழையால் செந்நிறத்தில் கல்லாறு ஆற்றில் இதுவரை மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்தது. நேற்று ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பாராங்கற்க்களுக்கு மத்தியில் வளைந்து நெலிந்து இரைச்சல் சப்தத்துடன் தண்ணீர் பாய்தோடி வரும் காட்சிகள் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    சில சுற்றுலா பயணிகள் இந்த ஆற்றுக்கு சென்று அதனை பார்வையிட்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

    இதற்கிடையே இந்த ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் சென்று புகைப்படம் எடுப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சிங்காநல்லூர், புலியகுளம் பகுதிகளில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • டார், வி.பி.என் போன்ற தேடுபொறி தளங்களை பயன்படுத்தும்போது எங்கிருந்து அனுப்புகின்றனர் என்பதை உறுதி செய்ய முடியாது.

    கோவை:

    கோவையில் கடந்த சில நாட்களாக தனியார் பள்ளிகள், ஓட்டல்கள், கல்லூரிகளை குறிவைத்து மர்மநபர்கள் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

    ஈச்சனாரி அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி முதல்வருக்கு வந்த மெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

    செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் அது புரளி என்பது தெரியவந்தது.

    இதேபோல் சிங்காநல்லூர், புலியகுளம் பகுதிகளில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதுகுறித்து அந்தந்த பகுதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் வந்த மெயில் முகவரியை வைத்து எங்கிருந்து மிரட்டல் வந்தது. அதனை விடுத்தது யார்? என விசாரித்து வருகின்றனர்.

    கோவையில் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் கோவை மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. தற்போது போலீசார் தொழில் நுட்ப உதவியுடன், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிந்த நபர்களே இதுபோன்ற மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். டார் எனப்படும் பிரவுசரை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்புகிறார்கள்.

    டார், வி.பி.என் போன்ற தேடுபொறி தளங்களை பயன்படுத்தும்போது எங்கிருந்து அனுப்புகின்றனர் என்பதை உறுதி செய்ய முடியாது.

    உள்ளூரில் இருந்து அனுப்பினாலும் வெளிநாட்டில் இருப்பது போலவே முகவரி காட்டும். இதுபோன்ற மிரட்டல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய தொழில்நுட்ப உதவியுடன் தீவிர விசாரணை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தினசரி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது.
    • மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் பாதையில் 16 குகைகள், 216 வளைவுகள், 250 பாலங்கள் உள்ளன.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    தினசரி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்ய ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் இயக்கப்பட்டது. 1908 அக்டோபர் 15 முதல் ஊட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

    இதனால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ந் தேதி நீலகிரி மலை ரெயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் பாதையில் 16 குகைகள், 216 வளைவுகள், 250 பாலங்கள் உள்ளன.

    ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகளில் மிகவும் நீளமானது என்பது இதன் சிறப்பு அம்சம். நீலகிரி மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் 2005 ஜூலை 15-ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

    இந்நிலையில் இன்று 116-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்றுமுன்தினம் மாலையில் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து நேற்று மாலையும் கோவை மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    கோவை மாநகரில் வடவள்ளி, மருதமலை, தடாகம், கவுண்டம்பாளையம், சிவானந்தா காலனி, ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. மற்ற இடங்களில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் கொட்டி தீர்த்தது.

    மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனியில் இருந்து, சிவானந்தா காலனி வழியாக காந்திபுரம் வரும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது.

    பலத்த மழை காரணமாக அந்த சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வது தடைபட்டது.

    இதற்கிடையே கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 24 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பஸ் பாலத்தில் சிக்கியது. பஸ்சுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால், பயணிகள் வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.

    தீயணைப்பு துறையினர் வந்து, பயணிகளை மீட்டனர். பஸ்சை கிரேன் மூலம் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

    இந்த மழைக்கு கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பாரதி பார்க் ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்லாததால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

    கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மீனா எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள் சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று முறிந்து சாலையில் நின்றிருந்த 2 கார்கள் மீது விழுந்தது.

    தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி கார்களை மீட்டனர்.

    காந்திபுரம் பகுதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

    கனமழைக்கு தடாகம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள செங்கல் சூளையில் வைக்கப்பட்டிருந்த புகைபோக்கி இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் ஆனைகட்டி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகளும் சேதம் அடைந்தன. பல்வேறு துறை ஊழியர்கள் விரைந்து வந்து சாலையில் கிடந்த செங்கல்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலையில் கனமழை பெய்தது. மழையால் விஜயபுரம், புளியம்பட்டி பகுதிகளில் சாலையோரம் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியாறு போலீஸ் நிலையம் அருகே மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதேபோல் மேட்டுப்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளம், குட்டைகள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பல குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    குன்னூர் அருகே உள்ள சின்ன வண்டிச்சோலை- பேரட்டி சாலையில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் சேதம் அடைந்தது. மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

    குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி, நல்லப்பன் தெருவில் பால்ராஜ் என்பவர் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது.

    பெள்ளட்டி மட்டம், கேத்தி பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் ஊட்டியில் காலநிலையும் மாறி விட்டது. இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. வாகன ஓட்டிகளுக்கு சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர். 

    • கோவை சாய்பாபா காலனி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது.
    • பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதலாகவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது.

    இந்நிலையில், நேற்று கோவை சாய்பாபா காலனி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது. பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    கோவையில் நேற்று தனியார் பேருந்து மூழ்கிய அதே இடத்தில் இன்று மழைநீரில் அரசுப்பேருந்து சிக்கியுள்ளது. பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
    • மாணவர்களுக்கு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை.

    கோவை:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 39-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

    இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

    விழாவில் ஒவ்வொரு மாணவராக அழைத்து பட்டம் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. அப்போது பட்டம் வாங்க வந்த ஆராய்ச்சி மாணவரான பிரகாஷ் என்பவர், கவர்னரிடம் இருந்து பட்டம் பெற்றதும், கவர்னரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவை கவர்னரும் பெற்றுக்கொண்டார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

     

    இதுகுறித்து ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனது பெயர் பிரகாஷ். விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி கிராமம். நான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் ஆராய்ச்சியாளர் (பிஎச்டி) பட்டம் பெற்றேன்.

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் 2 விடுதிகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் அங்குள்ள கழிவறை ஒழுகுகிறது. மாணவர்களுக்கு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை.

    இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் சில துறை மாணவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. வெளியில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு மாணவர்களை விளையாட அனுமதிக்கிறார்கள். நாங்கள் வைவாவில் வெற்றி பெற வேண்டுமென்றால் அவர்கள் கூறுவதை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

    சில பயிற்சியாளர்கள் ஆராய்ச்சி மாணவர்களை அவர்களது வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர். எனக்கு இதனால் பிரச்சினை இல்லை.

    இதுகுறித்து நடவடிக்கை எடுத்து ஆராய்ச்சி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும்.
    • அடுத்தாண்டு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.

    2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

    செய்முறை தேர்வு

    * 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும்.

    * 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும்.

    * 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும்.

    பொதுத்தேர்வு

    * அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும்.

    * அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கும்.

    * அடுத்தாண்டு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.

    பொதுத்தேர்வு முடிவுகள்

    * 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ந்தேதி வெளியாகும்.

    * 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ந்தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • கோவையில் நேற்று நள்ளிரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.

    கோவை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    கோவை மாவட்ட பகுதியில் கடந்த ஒருவாரமாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் இரவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கோவையில் நேற்று நள்ளிரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.

    கோவை பகுதியில் இரவில் மழை பெய்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புதுடெல்லி:

    ரஞ்சிக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. குரூப் டி பிரிவில் தமிழக அணியும், சவுராஷ்டிரா அணியும் கோயம்புத்தூரில் விளையாடி வருகின்றது. டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வசவடா 62 ரன் எடுத்தார்.

    ஜிராங் ஜெனி 34 ,ஷெல்டோன் ஜாக்சன் மற்றும் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் தலா 21 ரன்களை எடுத்ததனர்.

    தமிழக அணி சார்பில் சோனு யாதவ், முகமது, சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்ஷன் 82, ஜெகதீசன் 100, புரதோஷ் பௌல் 49, இந்திரஜித் 40 என ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே சித்தார்த் 38, முகமது 26 ரன்களை எடுத்தனர்.

    இறுதியில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 164 ரன்கள் மெகா முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸ் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி விரைவில் விக்கெட்களை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட்டுக்கு 35 ரன் எடுத்து திணறி வருகிறது. சவுராஷ்டிரா அணி இன்னும் 129 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    தமிழக அணி சார்பில் குஜ்ராப்னீட் சிங் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

    ×