search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் ஏமாற்றிய போலி அரசு ஊழியர் கைது
    X

    மாற்றுத்திறனாளியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் ஏமாற்றிய போலி அரசு ஊழியர் கைது

    • பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் 3 ஆண்டுகளாகியும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தனர்.
    • முருகனின் மோசடி குறித்து அவர் நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பனைக்குடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி. இவரது மகன் உதயக்குமார் (வயது 31). மாற்றுத்திறனாளியான இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து காரியாபட்டி பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் சர்வர் வேலை பார்த்து வருகிறார்.

    அப்போது உதயகுமாருக்கு உறவினர் பொட்டப்பச்சேரியை சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் உதய குமாரிடம், தான் திருச்சுழி நெடுஞ்சாலைத்துறையில் வேலை பார்த்து வருவதாகவும், மாற்றுத்திறனாளியான உனக்கு இடஒதுக்கீட்டில் எழுத்தர் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    மேலும் அரசு வேலை பெற உயர் அதிகாரிகளுக்கு ரூ.15 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதயகுமாரிடம் முருகன் கூறி உள்ளார். இறுதியில் அரசு வேலைக்காக முருகனிடம் ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் கொடுக்க உதய குமார் ஒப்புக்கொண்டார்.

    உதயகுமார் அரசு வேலை விவகாரம் தொடர்பாக தனது பெற்றோரிடம் கூறினார். மகன் உதயகுமாருக்கு வேலை கிடைத்தால் போதும் என நம்பிய அவரது தந்தை சுப்பிரமணி நகைகளை அடகு வைத்தும், அதிக வட்டிக்கு கடன் வாங்கியும் பணத்தை ஏற்பாடு செய்தார்.

    பின்னர் 2021-2023 வரை முருகனின் ஜிபே எண்ணிற்கும், அவரது உறவினரான அகிலனிடம் ரொக்கம் மற்றும் கூட்டுச்சதிக்கு உடந்தையாக இருந்த முருகனின் தந்தையான சேகரிடம் ரொக்கப்பணம், மற்றும் அவரது நண்பர்களான சண்முகசுந்தரம், பஷீர்கனி, பிரபு, சூரியன்,ஹேமந்திர விஷ்வா, ஞானவேலன், சண்முகன், சதீஷ்குமார் ஆகியோருக்கு ஜிபே மூலமாகவும், ரொக்கப் பணமாகவும் மொத்தம் ரூ.11 லட்சம் வரை உதய குமார் கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் 3 ஆண்டுகளாகியும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தனர். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதற்கிடையில் உதய குமாரிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். உதயகுமாரிடம் மோசடி செய்த பணத்தை வைத்துக்கொண்டு முருகன் ஆடம்பர வாழ்க்கை, கார், சொத்து, நண்பர்களுடன் போதை மயக்கம் என ஏக சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

    பணத்தை கேட்டு முருகனின் வீட்டிற்கு நடையாய் நடந்து கடும் உளைச்சலுக்கு ஆளான மாற்றுத்திறனாளி உதயகுமார் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். முருகனின் மோசடி குறித்து அவர் நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து உதயகுமார் திருச்சுழி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

    அதன்படி நரிக்குடி போலீசார் முருகன், அவரது தந்தை சேகர், உறவினர் அகிலன் மற்றும் கூட்டுச்சதிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர்களான பொட்டபச்சேரியை சேர்ந்த பிரபு, சூரியன், பசீர்கனி, ஞானவேலன் உள்பட 12 பேர் மீதும் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் மற்றும் கூட்டுச்சதிக்கு உடந்தை என பல்வேறு பிரிவுகளின் கீழ் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர் விசாரணையில் முருகன் நெடுஞ்சாலை துறையில் வேலை பார்த்து வருவதாக பொய் கூறி உதயகுமாரை மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் முருகனை கைது செய்து, மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை சேகர், உறவினர் அகிலன் மற்றும் நண்பர்களான பிரபு சூரியன், ஞானவேலன் உட்பட 11 பேரை நரிக்குடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×