என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஹெலிகாப்டர் சகோதரர்களின் சொத்துகளை முடக்க வேண்டும்- உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு
- பொதுமக்கள் பலரின் முதலீட்டு தொகையை பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளனர்.
- வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மதுரை:
துபாயை சேர்ந்த முகமது யூசுப், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் என் மனைவி இந்தியாவில் இருந்தார். அப்போது கும்பகோணத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் என் மனைவியை சந்தித்து வெளிநாடுகளில் செயல்படும் தங்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய என் மனைவி, பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கு மூலம் ரூ.10 கோடி வரை செலுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் கூறியதை போல பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விசாரிக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மோசடி நபர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்பாவி பொதுமக்கள் பலரின் முதலீட்டு தொகையை பல்வேறு வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளனர். அந்த சொத்துகளை முடக்கவும், பணத்தை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான வழக்கின்பேரில் அவர்களின் சொத்துகளை முடக்குவதற்கு தமிழக உள்துறை செயலாளர் 2 மாதத்தில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களின் சொத்துகளை முடக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.