என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிவகாசி அருகே தாய்-மகள் தூக்கு போட்டு தற்கொலை
- மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாப்புக்குட்டி (வயது 41), பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு ஐஸ்வர்யா (19), இந்துமதி (13) என்ற 2 மகள்களும், அருண்குமார் (10) என்ற மகனும் உள்ளனர். இதில் இந்துமதி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பாலமுருகன் வேலைக்கு சென்று விட ஐஸ்வர்யா, அருண் குமாரும் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டனர்.
பள்ளிக்கு செல்லாமல் இந்துமதி மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பாப்புக்குட்டி கண்டித்துள்ளார். இதனால் இந்துமதி விரக்தி அடைந்துள்ளார்.
சிறிது நேரத்திற்கு பின் பாப்புக்குட்டி வெளியே சென்று விட்டார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த இந்துமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த பாப்பு குட்டி மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தான் கண்டித்ததால் மகள் விபரீத முடிவை எடுத்து விட்டதாக நினைத்து பாப்புக்குட்டி கலங்கினார். மகள் சாவுக்கு காரணமாகி விட்டோமே என நினைத்து மனம் வருந்திய பாப்புக்குட்டி தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது நான் இனிமேல் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.
பின்னர் மகள் அருகிலேயே பாப்புக்குட்டியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மனைவி கூறியதை கேட்டு பதட்டம் அடைந்தார். மேலும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து மனைவியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர்கள் யாரும் செல்போனை எடுக்காததால் பாலமுருகன் அவசரம், அவசரமாக வீட்டிற்கு வந்தார்.
அப்போது மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய், மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.