என் மலர்
இந்தியா
சபரிமலையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பக்தர்கள்
- காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- கடந்த 22 நாட்களில் காய்ச்சலுக்கு 67 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை தற்போது நடந்து வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு செல்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மழை மற்றும் குளிர் அதிகமாக இருக்கும். அதேபோன்று தான் இந்த ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே சபரிமலையில் மழை மற்றும் பனி அதிகமாக இருந்தது. அவற்றை பொருட்படுத்தாமல் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வந்து சென்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் சீதோஷ்ண நிலை வெவ்வேறாக இருக்கிறது. அதாவது பகல் நேரத்தில் கடும் வெயிலும், மாலைக்கு பிறகு மூடு பனியும் நிலவுகிறது. இதன் காரணமாக பக்தர்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.
காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் ஏராளமான பக்தர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். கடந்த 22 நாட்களில் காய்ச்சலுக்கு 67 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று 78 ஆயிரத்து 36 பேர் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அவர்களில் 14 ஆயிரத்து 660 பேர் ஸ்பாட் புக்கிங் செய்து சபரிமலைக்கு வந்திருக்கின்றனர்.
இன்று பக்தர்கள் கூட்டம் ஓரளவுக்கு அதிகமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு 4,200 முதல் 4,300 பக்தர்கள் வரை மலையேறினர். பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்தார்கள்.