என் மலர்
கேரளா
- அதானி ஊழலில் ஈடுபட்டது நாட்டுக்கே தெரியும்.
- பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு. எனக்கு எந்த கவலையும் இல்லை.
புதுடெல்லி:
மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
இதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட பிறகு ராகுல்காந்தி முதல் முறையாக இன்று மதியம் 1 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி, தொழில் அதிபர் அதானி இடையேயான தொடர்புகள் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டேன். பாராளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதன் எதிரொலியை உணருகிறேன். தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன்.
நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக இதற்கு முன்பு நான் பலமுறை தெரிவித்துள்ளேன். அதானி குழுமம் தொடர்பாக நான் கேள்வி எழுப்பியதால் தான் பிரச்சினைகள் தொடங்கின.
ராணுவம், விமானத்துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடனேயே முன் வைக்கிறேன். பா.ஜ.க. மந்திரிகள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.
பிரதமர் மோடி, தொழில் அதிபர் அதானி இடையேயான தொடர்புகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். பல போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழும முதலீடுகள் நடைபெற்று உள்ளன. அதானி குழும முதலீடுகளில் சீன நபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது.
ஜனநாயகம் பற்றி பேசும் பா.ஜ.க. அரசு, மக்களவையில் பேசுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. இந்திய அரசுக்கு எதிராக நான் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை கேட்டதாக கூறுவது முற்றிலும் தவறு.
மோடி-அதானி உறவு குறித்து நான் கேள்வி கேட்பதை நிறுத்த போவதில்லை. பாராளுமன்றம், ஊடகங்களின் தரவுகளின் அடிப்படையிலேயே நான் கேள்வி எழுப்பினேன்.
ஜனநாயகத்துக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். எனது குரலை ஒடுக்க முடியாது. எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்பட மாட்டேன். அதானி நிறுவனங்களில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்தது யார்? யாருடைய பணம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு பதில் தேவை.
என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மக்களிடம் நியாயம் கேட்பேன். என் மீது வன்முறையை கட்டவிழ்த்தாலும், என்னை சிறையில் அடைத்தாலும் அஞ்ச மாட்டேன்.
நான் இந்தியாவை எந்த இடத்திலும் இழிவுபடுத்தி பேசவில்லை. பா.ஜ.க.வினர் பொய் சொல்கின்றனர். அதானி பற்றி அடுத்த கேள்வி கேட்பதை தடுக்கவே என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர். அதானி பற்றி நான் பேசுவதை கண்டு பிரதமர் மோடி பயப்படுவதை அவரது கண்களில் பார்த்துள்ளேன்.
வயநாடு தொகுதி மக்களுடன் எனது குடும்பம் போன்ற நெருங்கிய தொடர்பு எனக்கு உள்ளது. என்னை தேர்தலில் போட்டியிட அனுமதிக்காவிட்டாலும் எனது பணிகளை தொடர்ந்து செய்வேன். நான் பாராளுமன்றத்திற்கு உள்ளேயோ, வெளியேயோ இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை.
அதானி ஊழலில் ஈடுபட்டது நாட்டுக்கே தெரியும். தொழில் அதிபர் ஒரு ஊழல் நபர் என்பது மக்களின் மனதில் பதிந்துள்ளது. ஊழல் தொழில் அதிபரை பிரதமர் மோடி ஏன் காப்பாற்றுகிறார் என மக்கள் யோசிக்க தொடங்கி உள்ளனர்.
எனக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும். தேசத்தின் ஜனநாயக கட்டமைப்பை பிரதமர் மோடி சிதைக்க பார்க்கிறார்.
பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு. எனக்கு எந்த கவலையும் இல்லை. அதானி நிறுவன முதலீடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் கேள்வி எழுப்பாதது ஏன்?
இங்கிலாந்தில் பேசியதற்காக மன்னிப்பு கேட்கலாமே என்கிறார்கள். ஆனால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் சாவர்க்கர் அல்ல. எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களவையில் எனது குரலை நசுக்கினாலும் மக்களுக்காக எனது குரல் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 27-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது.
- ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (26-ந் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.இருப்பினும் நாளை வேறு பூஜைகள் எதுவும் நடை பெறாது.
மறுநாள் (27-ந்தேதி) காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.
- இளம்பெண் ஒருவர் கடையில் அமர்ந்து மது அருந்தியதும், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இளம்பெண்ணும் அவரது தோழிகளும் சேர்ந்து ஜாலிக்காகவும், சமூக வலைதளத்தில் லைக்குகளை பெற இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மதுபான கடைகளை போல கள்ளுக்கடைகளும் உள்ளன.
இந்த கடைகளில் மாலை நேரங்களில் ஏராளமான தொழிலாளிகள் அமர்ந்து கள்ளுகுடிப்பது வழக்கம். இந்த கடையில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து கள்ளு குடிப்பது போன்ற காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இது தொடர்பான தகவல் போலீசாருக்கும் தெரியவந்தது. அவர்கள் கடையில் அமர்ந்து கள்ளு குடித்த பெண் யார்? என்பது பற்றி விசாரித்தனர்.
இதில் அந்த வீடியோ திருச்சூர் அருகே குண்டேலிகடவு பகுதியில் உள்ள கள்ளு கடை என தெரியவந்தது. மேலும் அங்கு கள்ளு குடித்த பெண் பற்றிய விபரங்களும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில் அவரும், அவரது தோழிகளும் சேர்ந்து ஜாலிக்காகவும், சமூக வலைதளத்தில் லைக்குகளை பெற இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதற்கு பலர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி ஜாமீனில் விடுவித்தனர்.
இளம்பெண் ஒருவர் கடையில் அமர்ந்து மது அருந்தியதும், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை வாபஸ் பெறக்கோரி ஆஸ்பத்திரி ஊழியர்கள் 5 பேர் வலியுறுத்தி உள்ளனர்.
- 5 பேரையும் சஸ்பெண்டு செய்ய சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற நோயாளி பெண் ஒருவருக்கு ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுபற்றிய தகவல் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கவனத்திற்கு சென்றது. உடனே அவர் ஆஸ்பத்திரி ஊழியரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை வாபஸ் பெறக்கோரி ஆஸ்பத்திரி ஊழியர்கள் 5 பேர் வலியுறுத்தி உள்ளனர். இதுவும் சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் சஸ்பெண்டு செய்ய அவர் உத்தரவிட்டார்.
- இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் ‘லிப்ட்’ கேட்டு மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார்.
- சில பெண் கண்டக்டர்களின் படங்களை, பாதிக்கப்பட்ட மாணவியிடம் காட்டினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் அரசு பஸ்களில் பெண் கண்டக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அக்குளம் பகுதியில் ஒரு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் அரசு பஸ்களில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் சென்ற அரசு பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி உள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக அவர்கள் ஏறி உள்ளனர்.
அந்த பஸ்சில் பணிபுரிந்த பெண் கண்டக்டர், டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், 20 ரூபாய் கொடுத்துள்ளார். அந்த நோட்டு கிழிந்து சேதமடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.
அதனை மாற்றி விட்டு வேறு ரூபாய் தருமாறு கண்டக்டர் கேட்டுள்ளார். ஆனால் மாணவி தன்னிடம் வேறு பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த பெண் கண்டக்டர், பணம் இல்லாவிட்டால், பஸ்சில் இருந்து இறங்கி விடு எனக் கூறியதால், மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நேரத்தில் பஸ் பள்ளியில் இருந்து நீண்ட தூரம் வந்து விட்டது. எனவே மாணவி என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். இருப்பினும் அவரை பெண் கண்டக்டர் நடுவழியில் இறக்கி விட்டுள்ளார்.
மாணவி தேர்வு எழுதி விட்டு வந்ததால், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் தவிப்புக்குள்ளானார்கள். சுமார் 30 நிமிடம் அவர், அங்கு நின்றபோதும் அடுத்த பஸ் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் 'லிப்ட்' கேட்டு மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார். இதுபற்றி அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
பெண் என பாராமல் நடுவழியில் மாணவியை இறக்கி விட்டது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் அவர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அரசு போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் குழு விசாரணையில் இறங்கியது.
சில பெண் கண்டக்டர்களின் படங்களை, பாதிக்கப்பட்ட மாணவியிடம் காட்டினர். அப்போது ஒரு படம் மீது சந்தேகம் காட்டிய மாணவி, நேரில் பார்த்தால், கண்டக்டரை அடையாளம் தெரியும் என்றார். இருப்பினும் அந்த செயலில ஈடுபட்ட பெண் கண்டக்டர் யார்? என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- நடிகை ஆர்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- முதலில் எனக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது.
திருவனந்தபுரம் :
கேரளாவில் டெலிவிஷன் சீரியல்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆர்யா பார்வதி. இவருடைய தாயார் தீப்தி சங்கர். 47 வயதாகும் தீப்தி சங்கருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அதை தொடர்ந்து நடிகை ஆர்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகள் நடிகையாக கலக்கி வரும் நிலையில், அவரது தாயாருக்கு குழந்தை பிறந்தது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருந்தனர். ஆனால் நடிகை ஆர்யா பார்வதி எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நடிகை ஆர்யா பார்வதி, 8 மாத கர்ப்பிணியான தாயாரின் வயிற்றில் தலை சாய்ந்த நிலையில் எடுத்த புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்றை பதிவு செய்து உள்ளார். அதில், 'எனது தாயார் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும், அதனை என்னிடம் தெரிவிக்க எனது அப்பாவும், அம்மாவும் முதலில் தயங்கினார்கள்.
ஆனால் நீண்ட நாள் மறைக்க முடியாது என்பதால் அதனை தயக்கத்துடன் என்னிடம் தெரிவித்தனர். இந்த செய்தி முதலில் எனக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது. பின்னர் யதார்த்த வாழ்வியலை புரிந்து கொண்டேன். இதற்காக வெட்கப்பட தேவையில்லை என்பதை உணர்ந்த நான் அப்போதே புதிய உறவை வரவேற்க தயாராகி விட்டேன். இப்போது எனது 23-வது வயதில் தங்கை கிடைத்து இருக்கிறாள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என பதிவிட்டு உள்ளார்.
- முதலில் பூனை என்று நினைத்தவர் அருகில் சென்று பார்த்த பின்னர் தான் அது புலி என தெரிந்து கொண்டார்.
- வனத்துறையினர் வரும் முன்பு புலி அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா கரிகாயம் பகுதியை சேர்ந்தவர் சோமராஜன். இவரது வீட்டின் அருகில் ஏராளமான வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. சம்பவத்தன்று காலையில் சோமராஜன், தூங்கி எழுந்து வீட்டின் முன்பக்க கதவை திறந்தார். முற்றத்தில் பூனை போன்ற விலங்கு நிற்பதை கண்டார்.
முதலில் பூனை என்று நினைத்தவர் அருகில் சென்று பார்த்த பின்னர் தான் அது புலி என தெரிந்து கொண்டார். உடனே அவரும் குடும்பத்தாரும் கதவை பூட்டி கொண்டு அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களும் புலியை பார்த்து அலறியடித்து ஓடினர். மேலும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் வரும் முன்பு புலி அங்கிருந்து தப்பியோடிவிட்டது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புலி நுழைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருமண நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு மணமேடையில் நடிகை ஆஷா சரத் நடனம் ஆடினார்.
- நடிகை ஆஷா சரத் ஆடும் காட்சிகளை பார்த்த பலரும் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆஷா சரத்.
தமிழில் கமல் நடித்த 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதுபோல 'தூங்கா வனம்' உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு மணமேடையில் நடிகை ஆஷா சரத் நடனம் ஆடினார்.
விருந்தினர்களை வரவேற்கும் விதத்தில் நடந்த இந்த நடனத்தை திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினர்.
இதற்கிடையே திருமண விழாவின் வீடியோவை சமீபத்தில் நடிகை ஆஷா சரத் வெளியிட்டார்.
அதில் நடிகை ஆஷா சரத் ஆடும் காட்சிகளை பார்த்த பலரும் அதனை வைரலாக்கி வருகின்றனர். மகளின் திருமணத்தில் தாய் நடனம் ஆடியதற்கு பாராட்டும் குவிகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு விற்க வந்த போது சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் இருந்தார்.
- முதல் பரிசான ரூ.75 லட்சம் சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் கடனாக வாங்கிய சீட்டுக்கு கிடைத்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாபுலால் (வயது 55).
சுமை தூக்கும் தொழிலாளியான இவர் ஆற்றின் குழியில் உள்ள சி.ஐ.டி.யூ. சங்க அலுவலகத்தில் உறுப்பினராக உள்ளார்.
அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்கும் பெண் ஒருவர் ஒவ்வொரு நாளும் இங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்ய வருவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல லாட்டரி சீட்டு விற்க வந்த போது அங்கு சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் இருந்தார். அவரிடம் 2 லாட்டரி சீட்டு வாங்கும் படி அந்த பெண் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை எனக்கூறி அந்த சீட்டுக்களை கடனாக வாங்கி கொண்டார்.
கடனாக வாங்கிய லாட்டரி சீட்டின் குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.75 லட்சம் சுமை தூக்கும் தொழிலாளி பாபுலால் கடனாக வாங்கிய சீட்டுக்கு கிடைத்தது.
இதனை அறிந்து அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். இந்த பணத்தை கொண்டு குடும்பத்தை காப்பாற்றுவேன் என்றார்.
- காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் மக்களிடம் இருந்து வந்தவை.
- ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார்.
வயநாடு :
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் உள்ள தனது வயநாடு தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள கல்பேட்டாவில் அவர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மத்தியில் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் உங்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன். இந்த பா.ஜ.க. ஆட்சியில் பல திட்டங்கள் மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவை வலுவில்லாமல் போய் விடுகின்றன.
ஏனென்றால், அந்த திட்டங்களை வடிவமைப்பதிலும், சிந்திப்பதிலும் பஞ்சாயத்தின் பங்களிப்பு இல்லை.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புறுதி திட்டம் போன்ற காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைப் பாருங்கள். அவற்றை நீங்கள் பா.ஜ.க.வின் திட்டங்களுடன் ஒப்பிடுங்கள்.
அப்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் மக்களிடம் இருந்தும், பஞ்சாயத்துகளிடம் இருந்தும் உருவானது தெரியும். ஆனால் பா.ஜ.க.வின் திட்டங்கள் எல்லாம் அதிகாரவர்க்கத்திடம் இருந்து வருபவை ஆகும்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புறுதி திட்டம், இந்திய மக்களிடம் இருந்து வந்ததாகும். மக்கள் வேலை கேட்டார்கள். அரசு அதற்கு பதில் அளித்தது. இந்த திட்டத்தை பல பங்குதாரர்களுடன் சேர்த்து மேம்படுத்த பல ஆண்டுகள் ஆனது. இந்த திட்டம், மக்களிடம் இருந்து வந்தது. இந்திய மக்களின் ஞானத்தில் இருந்து வந்ததாகும்.
பிரதமர் மோடி இந்த திட்டத்தை கிண்டல் செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் இந்த திட்டத்தை அவர் விரிவுபடுத்தும் நிலை வந்தது.
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். இது அவரது மனதில் இருந்து வந்தது. அவர் நாட்டு மக்களுடன் ஆலோசிக்கவில்லை. அவர் வங்கி அமைப்பினரைக்கூட கலந்து ஆலோசிக்க வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.