என் மலர்
இந்தியா
விமானத்தில் ரூ.3.5 கோடி கஞ்சா கடத்தல்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
- சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கஞ்சாவின் மதிப்பு ரூ.3 கோடியே 50 லட்சம் ஆகும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 4 விமான நிலையங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரக்கூடிய விமானங்களில் பயணிகள் சிலர் சட்டவிரோத பொருட்களை கடத்திக் கொண்டு வருவது அதிகளவில் நடந்து வருகிறது.
அதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் உடமை களை தீவிரமாக சோதனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் பாங்காங்கில் இருந்து கொச்சி வந்த விமானத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் கொச்சி விமான நிலையத்திற்கு பாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் பயணித்து வந்த விமானிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்களது உடமைகளும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.
அப்போது மலப்புரத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர் தனது டிராலி பேக்கினுள் தின்பண்டங்களுக்கு மத்தியில் கலப்பின கஞ்சாவை மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
13 கிலோ எடையுள்ள அந்த கலப்பின கஞ்சா இரண்டு பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.3 கோடியே 50 லட்சம் ஆகும். அதனை அவர் தாய்லாந்தில் இருந்து கடத்தி கொண்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து உஸ்மானை சுங்கத் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.