என் மலர்
இந்தியா
உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்கியது
- 414 ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தின் 'நாடஹப்பா' என அழைக்கப்படும் தசரா விழா கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் மன்னர் காலத்தில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா உலக புகழ்பெற்று விளங்குகிறது.
வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கடந்த 414 ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 415-வது ஆண்டாக இந்த ஆண்டு தசரா விழா அக்டோபர் 3-ந்தேதி (அதாவது இன்று) தொடங்கி 12-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலையில் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனையடுத்து அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வெள்ளி தேரில் எழுந்தருளினார்.
இதையடுத்து காலை 9.15 மணி முதல் காலை 9.45 மணிக்குள் சுப விருச்சிக லக்கனத்தில் கன்னட எழுத்தாளர் ஹம்பா நாகராஜய்யா சாமுண்டீஸ்வரி அம்மன் மீது மலர்களை தூவி தசரா விழாவை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
தொடக்க விழாவில் , மன்னரும், மைசூரு-குடகு தொகுதி எம்.பி.யுமான யதுவீர் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூக்களை தூவி வணங்கினார்கள். மாநிலத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இதேேபால் மைசூரு அரண்மனையிலும் பாரம்பரியம், கலாசார முறைப்படி தசரா விழா மற்றும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் தொடங்கியது.
வருகிற 12-ந்தேதி தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்க உள்ளது. முன்னதாக அன்று காலை மைசூரு அரண்மனையில் தலையில் கத்திப்போட்டு ரத்தம் சிந்தும் மல்யுத்த போட்டி நடத்தப்படும்.
இந்த போட்டியில் யாராவது ஒரு வீரரின் தலையில் கத்திப்பட்டு ரத்தம் வடிந்தவுடன் போட்டி முடிவுக்கு வந்துவிடும். பின்னர் மைசூரு அரண்மனையில் பன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் கண்கவர் அலங்கார அணிவகுப்பு வண்டிகளின் ஊர்வலம், கலை குழுவினரின் நிகழ்ச்சிகள் நடக்கும். பின்னர் ஜம்பு சவாரி ஊர்வலம் தொடங்கும்.
இதற்காக யானைகள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும். பின்னர் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளுவார். அவர் எழுந்தருளியதும் தங்க அம்பாரியை சுமந்து கொண்டு யானைகள் ஊர்வலமாக புறப்படும்.
பன்னி மண்டபத்தில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகள் நடக்கும்.