என் மலர்
கர்நாடகா
- பிரதமர் மோடி கே.ஆர்.புரம்- ஒயிட் ஃபீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
- விஜய் சங்கல்ப் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை தந்தார். தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார்.
அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிறகு பெங்களூரு வந்த பிரதமர் மோடி கே.ஆர்.புரம்- ஒயிட் ஃபீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் கர்நாடக மாநிலம் தாவனகரே நகரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி சாலை பேரணியில் கலந்துக் கொண்டார். அப்போது மோடியின் வாகன அணி வகுப்பை நோக்கி போலீஸ் பாதுகாப்பை மீறி இளைஞர் ஒருவர் ஓடி வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை மூத்த போலீஸ் அதிகாரி அலோக் குமார் தடுத்து நிறுத்தினார். அவருக்குப் பின்னால் சிறப்புப் பாதுகாப்புக் குழு கமாண்டோவும் ஓடி தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி அலோக் குமார் கூறுகையில், "பாதுகாப்பு மீறல் எதுவும் இல்லை. அந்த இளைஞரை சிறப்புப் பாதுகாப்புக் குழு கமாண்டோவால் தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த நபர் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பசவராஜ் கடகி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பிரதமர் மோடியைப் பார்ப்பதற்காக பேருந்தில் தாவங்கேருக்கு வந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது" என்றார்.
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது இதேபோன்று சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரசின் உண்மையான சொரூபம் என்ன என்பதை நாம் இமாச்சல பிரதேசத்தில் பார்க்கிறோம்.
- தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை என மோடி பேச்சு
தாவனகரே:
கர்நாடக மாநிலம் தாவனகரே நகரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
கர்நாடகாவை வளர்ச்சியடையச் செய்ய வேண்டிய ஒரு மாநிலமாக பாஜக பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ்காரர்கள் பணத்தை பெறும் ஏடிஎம் மிஷினாக கர்நாடகாவை பார்க்கிறது.
காங்கிரசின் உண்மையான சொரூபம் என்ன என்பதை நாம் இமாச்சல பிரதேசத்தில் பார்க்கிறோம். தேர்தலுக்கு முன்பு அவர்கள் பெரிய பெரிய தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்கள். வேலைவாய்ப்பை அதிகரிப்போம், இலவசமாக இதைத்தருவோம், அதைத்தருவோம் என வாக்குறுதிகளை அளித்தார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு பட்ஜெட் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் இல்லை. இதுதான் காங்கிரசின் அரசியல்.
இப்படிப்பட்ட காங்கிரசை நம்ப முடியுமா? பொய் வாக்குறுதிகளை தரும் காங்கிரசை நம்ப முடியுமா? அப்படிப்பட்ட காங்கிரசை கர்நாடகாவில் கால் ஊன்ற விடலாமா? இப்போது வாக்குறுதிகள் என்னவயிற்று? என இமாச்சல பிரதேச மக்கள் அந்த அரசை கேட்கிறார்கள். எனவே கர்நாடக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இமாச்சல பிரதேசத்தில் செய்ததுபோல் இங்கும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடுவார்கள்.
காங்கிரஸ் எனக்கு குழிதோண்டுவது போல் கனவு கண்டுகொண்டிருக்கிறது. அவர்களின் கனவு மோடியின் கல்லறைக்கு குழி தோண்டுவது என்றால் கர்நாடக மக்களின் கனவு மற்றும் உறுதிமொழி என்னவென்றால், மோடியின் தாமரை இங்கு மலரும் என்பதாகும்.
உலகம் இன்று இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது. இந்தியா நமது கர்நாடகத்தை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. உலக முதலீட்டாளர்களை வரவேற்கும் பெங்களூரு ஹப் போன்ற பல ஹப்கள் கர்நாடகாவில் உள்ளன. கொரோனா காலத்தில்கூட அதிக முதலீடுகளை கர்நாடகா ஈர்த்தது. இதற்காக முதலமைச்சரையும் அவரது குழுவினரையும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- டிக்கெட் பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார்.
- மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்களுடன் கலந்துரையாடியபடி பிரதமர் மோடி பயணம் செய்தார்.
பெங்களூரு:
பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை தந்துள்ளார். தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார்.
அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிறகு பெங்களூரு வந்த பிரதமர் மோடி கே.ஆர்.புரம்-ஒயிட் ஃபீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து டிக்கெட் பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார்.
மேலும் மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்களுடன் கலந்துரையாடியபடி பிரதமர் மோடி பயணம் செய்தார்.
- கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
- முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே 24ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.
அதுபோல் ஆம் ஆத்மி கட்சி சார்பில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 கட்சிகளும் யாத்திரை பெயரில் பொதுக்கூட்டங்களை நடத்துகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டது.
கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கட்சி மேலிடம் அமைத்துள்ள தேர்வு குழு ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 9 கட்டங்களாக நடந்தது. இதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக மாவட்ட கட்சி நிர்வாகிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் சிபாரிசு செய்திருந்த பெயர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளி்ல் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு, அதை கட்சி மேலிட வேட்பாளர் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
இதில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வருணா தொகுதியிலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
தேவனஹள்ளியில் முனியப்பா, பெங்களூரு ராஜாஜிநகரில் புட்டண்ணா, ஆர்.ஆர். நகர் குசுமா, பெல்காம் ஊரகத் தொகுதியில் லட்சுமி ஹெப்பால்கர், தாவாங்கேரே தெற்குத் தொகுதியில் சாமனூர் சிவசங்கரப்பா, எம். பி பாட்டீலுக்கு பாபலேஷ்வர் சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.
- 60 முதல் 70 சதவீத போதைப்பொருள் கடல் வழியாக கடத்தப்படுகிறது.
- போதைப்பொருள் கடத்தல் ஒரு தேசிய பிரச்சினை.
பெங்களூரு :
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பெங்களூருவில் 'போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு' தொடர்பான தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 தென் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் அமித்ஷா பேசும்போது கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க போதைப்பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. சுதந்திர தின பவள விழாவையொட்டி 75 நாள் பிரசாரத்தின்போது, 75 ஆயிரம் கிலோ போதைப்பொருளை அழிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு, ரூ.8,409 கோடி மதிப்பிலான 5 லட்சத்து 94 ஆயிரத்து 620 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டு, இலக்கைவிட பன்மடங்கை எட்டி விட்டோம். இதுவரை அழிக்கப்பட்ட மொத்த போதைப்பொருட்களில், போதைப்பொருள் தடுப்பு படை (என்.சி.பி.) மட்டும் ரூ.3 ஆயிரத்து 138 கோடி மதிப்புள்ள ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 363 கிலோ போதைப்பொருளை அழித்துள்ளது.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சகம் மும்முனை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இந்த மும்முனை அணுகுமுறையில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து நிறுவனங்களுக்கும் அதிகாரமளித்தல் மற்றும் அவர்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்குதல் ஆகியவை அடங்கும்.
போதைப்பொருள் கடத்தல் என்பது ஒரு மாநிலம் அல்லது மத்திய அரசுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. இது ஒரு தேசிய பிரச்சினை. அதை சமாளிப்பதற்கான முயற்சிகள் தேசிய மற்றும் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும். போதைக்கு எதிரானது போராட்டம் மட்டுமல்ல, அரசால், மக்களால் இந்த பிரச்சினையை சமாளிக்க, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விழிப்புணர்வு கூட்டங்களை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.
போதைப்பொருளின் ஒட்டுமொத்த வலையமைப்பையும் ஒடுக்க, போதைப்பொருள் வழக்குகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை முழுமையாக அணுக வேண்டும். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2006-2013-ம் ஆண்டில் மொத்தம் 1,257 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது 2014-2022-ம் ஆண்டில் 152 சதவீதம் அதிகரித்து 3,172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 260 சதவீதம் அதிகரித்தது.
அதாவது கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,362-ல் இருந்து 4,888 ஆக அதிகரித்தது. 2006-2013-ம் ஆண்டில் 1.52 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, இது 2014-2022-ம் ஆண்டில் 3.30 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது. 2006-2013-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு ரூ.768 கோடியாக இருந்த நிலையில், அது 2014-2022-ம் ஆண்டில் 25 மடங்கு அதிகரித்து ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கிறது.
போதைப்பொருள் பயன்பாட்டை நமது நாட்டில் இருந்து ஒழிக்க பிரதமர் மோடி அரசின் பிரசாரத்திற்கு 4 தூண்கள் உள்ளன. போதைப்பொருள் கண்டறிதல், வலையமைப்பை அழித்தல், குற்றவாளிகளை கைது செய்தல், போதைப்பொருள் பயன்பாட்டால் பாதித்தோருக்கு மறுவாழ்வு அழித்தல் ஆகிய 4 ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவை வலுப்படுத்துவது காலத்தின் தேவை. இது தவிர, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். 60 முதல் 70 சதவீத போதைப்பொருள் கடல் வழியாக கடத்தப்படுகிறது. போதைப்பொருள் வழக்கில் பெரிய நபர்கள் கைதாகும்போது, ஒட்டுமொத்த வலையமைப்பு குறித்தும் விசாரிக்க வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையானவரை பிடிக்கும்போது, அவருக்கு அதை வினியோகம் செய்தது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இந்த மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களின் பிரதிநிதிகள், கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து இதே விஷயம் குறித்து பத்திரிகை அதிபர்கள், ஊடக செய்தி ஆசிரியர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இதில் 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் பல்வேறு பத்திரிகை அதிபர்கள், ஊடக செய்தி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- சித்தராமையா மீது லோக்அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு வரலாற்று தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு :
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ராகுல் காந்தி கர்நாடகத்தில் ஒற்றுமை பாதயாத்திரை நடத்தினார். அதனால் எந்த தாக்கமும் இங்கு ஏற்படவில்லை. அதேபோல் தற்போது ராகுல் காந்தி பெலகாவிக்கு வந்து சென்றுள்ளார். அதனால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவதாக கூறி இருக்கிறார். இந்த போலி வாக்குறுதிகளால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
லண்டனில் அவர் நமது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இது தேச விரோத செயல். இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. அதனால் ராகுல் காந்தியின் பேச்சை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிரதமர் மோடி வருகிற 25-ந் தேதி கர்நாடகத்திற்கு வருகிறார். உள்துறை மந்திரி அமித்ஷா, 24, 26-ந் தேதிகளில் கர்நாடகம் வருகிறார்.
காங்கிரஸ் கட்சியினர் வாக்குறுதி உத்தரவாத அட்டையை வழங்குகிறார். இது போலி அட்டை. பிற மாநிலங்களில் காங்கிரசார் இவ்வாறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை. அதாவது ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துவிட்டு மக்களை காங்கிரசார் ஏமாற்றுகிறார்கள்.
ஊழல் தொடர்பாக சித்தராமையா மீது லோக்அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அவர் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவது சரியா?. காங்கிரஸ் எல்லா இடங்களிலும் தோல்வி அடைந்து வருகிறது. சித்தராமையா ஆட்சியில் நடைபெற்ற 59 ஊழல்கள் குறித்து நீதி விசாரணை நடத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்த சில நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்.
உரிகவுடா, நஞ்சேகவுடா குறித்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவந்தால் அதன் மூலம் வெற்றி கிடைக்கும். உண்மை தகவல்களை பெற அதுகுறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பல்வேறு வரலாற்று தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. வரலாற்றை இந்தியாமற்றும் கர்நாடகத்தில் திரித்துள்ளனர். வரலாற்றை திரித்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையை சொன்னால் அவர்களால் சகித்து கொள்ள முடிவது இல்லை.
எங்கள் கட்சியில் இருந்த பாபுராவ் சின்சனசூர் எம்.எல்.சி., காங்கிரசில் சேர்ந்துள்ளார். குருமித்கல் தொகுதியில் பா.ஜனதா பலமாக உள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறும். அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் வாபஸ் பெற்றுள்ளனர்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
- கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.
- காங்கிரஸ் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்துள்ளது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனால் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான கால அட்டவணை இந்த மாத இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. மூன்று கட்சிகளும் யாத்திரை பெயரில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறார்கள். ஜனதா தளம்(எஸ்) 93 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டது. காங்கிரசும் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்துள்ளது.
இந்த சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் முதல் அடிக்கடி கர்நாடகத்திற்கு வந்து செல்கிறார். அவர் இதுவரை 6 முறை கர்நாடகத்திற்கு வந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை, தார்வார் ஐ.ஐ.டி. வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி 7-வது முறையாக வருகிற 25-ந் தேதி கர்நாடகம் வருகிறார். அன்றைய தினம் காலையில் தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு செல்லும் அவர், அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைக்கிறார்.
அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு மீண்டும் ஹெலிகாப்டரில் பெங்களூரு வரும் அவர், இங்கு கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு சென்று பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதன் பிறகு அவர் அங்கிருந்து சிவமொக்காவுக்கு ஹெலிகாப்டரில் சென்று பிறகு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், தாவணகெரே ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அநேகமாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு இதுவே அவரது கடைசி கர்நாடக பயணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜனதா பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேச திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 30-க்கும் மேற்பட்ட பிரசார கூட்டங்களில் மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபையில் எப்படியாவது தனி மெஜாரிட்டியை பெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜனதா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கு பிரதமர் மோடிக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு கை கொடுக்கும் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள்.
- கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.
- அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் இப்போதே வருகை தந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகளும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.
அதுபோல் ஆம் ஆத்மி கட்சி சார்பில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, மாநில மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கர்நாடகம் வந்தார். கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெலகாவியில் நடைபெற்ற இளைஞர்கள் புரட்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அவர், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லாமல் உள்ள பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்ட வாக்குறுதியை அறிவித்தார். அதன் பிறகு ராகுல் காந்தி பேசியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.3 ஆயிரமும், பாலிடெக்னிக் படித்தவர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படும்.
கர்நாடகத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம். கர்நாடக அரசு துறைகளில் காலியாக உள்ள 2½ லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், ரேஷன் கடைகளில் மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம்.
கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடத்தி வரும் பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும். கர்நாடகத்திற்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது என தெரிவித்தார்.
- அந்த குழு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- அந்த குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் அளிக்க அரசு உத்தரவாதம் அளிக்கிறது.
பெங்களூரு :
கர்நாடகத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞர் சக்தி ஆண்கள் சுயஉதவி குழு திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அரசின் முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன. அதே போல் இளைஞர்களுக்காக சுவாமி விவேகானந்தா இளைஞர் சக்தி ஆண்கள் சுயஉதவி குழுக்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படும். இந்த குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த குழுக்கள் தொழில் செய்ய வங்கிகளில் கடன் பெற்று கொடுக்க வேண்டும். அவர்கள் தொழில் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
அந்த குழு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் இந்த திட்டம் வெற்றி பெறும். அந்த குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் அளிக்க அரசு உத்தரவாதம் அளிக்கிறது. அவர்களின் தொழில் அதிக வருவாய் ஈட்டும் நிலை இருந்தால் அத்தகைய குழுக்களுக்கு கூடுதல் கடன் கிடைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஆண் சுயஉதவி குழுக்கள் திட்டம் வருகிற 23-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்ய வேண்டும்.
மாநிலத்தில் இதுவரை 6 ஆயிரத்து 509 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 5 ஆயிரத்து 393 குழுக்கள் அமைக்க வேண்டியுள்ளது. ஒரு கிராம பஞ்சாயத்திற்கு தலா 2 குழுக்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா, அத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷாலினி ரஜினீஸ், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஐ.எஸ்.என். பிரசாத், திறன் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சித்தராமையா வெற்றி பெற டி.கே.சிவக்குமார் விடுவதில்லை.
- காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிரிகள் உள்ளனர்.
பெங்களூரு :
முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். தற்போது காங்கிரஸ் தலைமையின் உத்தரவால் அவர் கோலாரில் இருந்து வருணா தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பெங்களூருவில் வருவாய்த்துறை மந்திரி அசோக்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தொகுதிகளை தேடி அலைவதில் தனது நேரத்தை வீணடித்து வருகிறார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பாதாமி மக்களும் தற்போது அவரை விரட்டியதால், கோலாரில் போட்டியிட முடிவு செய்தார். கோலாரிலும் தோல்வி அடைந்து விடுவோம் என்பதால் வருணா தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார். அங்கும் அவரை தோற்கடிக்க, எதிரிகள் தயாராக உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிரிகள் உள்ளனர்.
வருணா தொகுதி மட்டும் இல்லை, மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் எங்கு போட்டியிட்டாலும் சித்தராமையா தோல்வி அடைவது உறுதி. சித்தராமையா வெற்றி பெற டி.கே.சிவக்குமார் விடுவதில்லை. வேண்டும் என்றால் அவர் வெளிமாநிலங்கள், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று தேர்தலில் போட்டியிடலாம்.
இவ்வாறு மந்திரி அசோக் கூறினார்.