என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
பித்ருக்களின் ஆசியை பெற நாளை எம தீபம் ஏற்றுங்கள்
- வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் எம தீபம் ஏற்றப்பட வேண்டும்.
- கர்ப்பிணி பெண்கள் இதை கட்டாயம் ஏற்றக்கூடாது.
தீபாவளிக்கு முதல் நாளில் எம தீபம் ஏற்றுவதை நம் மூதாதையர்கள் கடைப்பிடித்தனர். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.
இத்தகைய சிறப்புடைய எம தீபத்தை தீபாவளிக்கு முந்தைய தினம் இரவு ஏற்ற வேண்டும் என்பது மரபாகும். குறிப்பாக திரயோதசி திதி நேரத்தில் அந்த தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது ஐதீக விதியாகும்.
இந்த ஆண்டு வருகிற வியாழக்கிழமை (31-ந் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் முந்தைய தினமான 30-ந் தேதி இரவு எம தீபம் ஏற்றப்பட வேண்டும்.
ஆனால் திரயோதசி திதி நேரம் அந்த சமயத்தில் இல்லை. அதாவது திரயோதசி திதி நேரம் நாளை (29-ந் தேதி) மதியம் 12.21 மணிக்குத் தொடங்கி 30-ந் தேதி மதியம் 2.21 மணிக்கு முடிந்து விடுகிறது.
இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்குரிய எம தீபத்தை திரயோதசி திதி இருக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு ஏற்ற வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வெளியே மறக்காமல் எம தீபம் ஏற்றுங்கள்.
நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். தெற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். வீட்டு வாசலில் வைக்கலாம். திறந்த வெளியில் தான் எம தீபம் ஏற்றவேண்டும். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்து வித தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.
எமன் சூரியனின் மகன். எமன் என்றதுமே எல்லோரும் அச்சப்படுவார்கள். அவர் இருக்கும் திசையான தெற்கு திசையை பார்த்தே பயப்படுவார்கள். ஆனால் அவர் எல்லோருக்கும் சமமானவர். அவருக்கு சிவபெருமான் கொடுத்த கடமை உயிரை எடுப்பது. அதில் அவர் எந்த பாரபட்சமும் பார்ப்பது இல்லை.
அவருக்கு நன்றி சொன்னால் அவர் பாதுகாப்பில் இருக்கும் நமது முன்னோர்களை நன்றாக பார்த்துக்கொள்வார். மகாளய பட்ச காலத்தில் பூலோகத்துக்கு வரும் முன்னோர்களுக்கு திதி கொடுப்போம். அப்படி வந்த முன்னோர்கள் மீண்டும் திரும்பி செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது எம தீபம் மட்டுமே. இதனால் முன்னோர்கள் மட்டும் அல்லாமல் எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படாது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
எம தீபம் ஏற்றும் முறை குறித்து நமது சாஸ்திரங்கள் வழி வகைகள் ஏற்படுத்தி உள்ளது. இதோ அந்த வழி முறைகள்:-
வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் எம தீபம் ஏற்றப்பட வேண்டும். எம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். விளக்கேற்றிய பின் எம தீப சுலோகம் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். விளக்கேற்றிய பின்னர், முன்னோர்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். மாதவிலக்கு பெண்கள் இந்த எம தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் ஆண்கள் கூட ஏற்றலாம்.
எம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவிட நமக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல பலன்களைத் தரும். முன்னோர் ஆசிகள் பெற எம தீபம் ஏற்றுவோம். ஓரு ஆத்மாவை உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவின் ஆயுளை தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும் ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான எமனும்தான் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.
பரணி, மகம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எம தீபம் ஏற்றுவது சிறப்பு. பரணி நட்சத்திரத்திற்கு எமன் அதிபதி. மகம் நட்சத்திரத்திற்கு பித்ருக்களை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஆன்மீக நூல்களில் சதயத்திற்கு எமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது.
எம தீபம் குறிப்பாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. எவரேனும் மரணமடைந்தால் மட்டுமே எம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது.
எமனை அதிதேவதையாக கொண்ட சனீஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள், ஆயுள் ஸ்தானத்தில் சனீஸ்வர பகவான் நீசம் அல்லது பலம் இழந்தவர்கள் எம தீபம் ஏற்றவேண்டும். ஆயுள் ஸ்தானாதிபதி ருத்ரனை அதிதேவதையாக கொண்ட திருவாதிரை அல்லது ருத்ரனை அதிதேவதையாக கொண்டவர்கள் எம தீபம ஏற்றுவது சிறப்பு.
அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம். அனைத்து சனி பரிகார தலங்களிலும் அனைத்து சிவாலய சனீஸ்வரர் சன்னதிகளிலும் எம தீபம் ஏற்றலாம். எமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில் ஏற்றலாம். அனைத்து காலபைரவர் சன்னதிகளிலும் ஏற்றலாம்.
எம தீபத்தை ஆலயங்களிலும் ஏற்றி வழிபடலாம். மயிலாடுதுறை அருகில் ஸ்ரீ வாஞ்சியத்தில் தனி சன்னதி பெற்ற எமதர்மராஜன் சன்னதி. தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள்புரிவதற்காக எமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதியில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றலாம். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஸ்ரீவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து எமனை மீண்டும் குழந்தையாக உருவாக்கிய எமன் சன்னதியில் ஏற்றலாம்.
வட இந்தியாவில் இந்த எம தீப வழிபாடு கடைபிடிக்கப்படுவதால் தமிழகத்திலும் தற்போது இதை பலர் கடைபிடிக்க துவங்கி உள்ளனர்.
பொதுவாக எம தீபத்தை மாலை 6 மணிக்கு மேல் தான் ஏற்றவேண்டும். எமனுக்கு உரிய இந்த தீபத்தை வீட்டிற்குள் ஏற்றவே கூடாது. வீட்டின் நிலை வாசலுக்கும் கேட்டிற்கும் உள்ள இடைப்பட்ட இடத்தில் இதை ஏற்றலாம். எம தீபமானது தெற்கு நோக்கி தான் ஏற்ற வேண்டும்.
அதேசமயம் சாதாரண ஒரு அகல் விளக்கை கொண்டு இதை ஏற்றினால் போதுமானது. இந்த தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெய் தவிர வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது. குறைந்தது 1 மணி நேரமாவது இந்த தீபம் எரிய வேண்டும்.
எம தீபம் தரையில் இருந்து சற்று உயரமாக இருக்க வேண்டும். ஆகையால் கீழே கொஞ்சம் மணலோ அல்லது கல்லோ வைத்து ஏற்றலாம். எம தீபம் ஏற்ற பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் திரும்பவும் வீட்டிற்குள் கொண்டு செல்லக்கூடாது.
முதலில் ஒரு சிறிய மேடு போன்ற அமைப்பை உருவாக்கி அதில் அகல் விளக்கை வைத்து, அதை சுற்றி வாசனை மிகுந்த பூக்களை தூவ வேண்டும், பிறகு அதற்க்கு மேல் கோதுமையை தூவ வேண்டும்(கோதுமை மாவை தூவ கூடாது). அதற்க்கு மேல் மஞ்சளை தூவ வேண்டும். பிறகு தீபம் ஏற்றுவோர் விளக்கின் பின்புறம் இருந்து தான் இதை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் சமயத்தில் வீட்டில் உள்ள யாரும் கட்டாயம் விளக்கின் முன்புறமாக இருக்கவே கூடாது. தீபம் ஏற்றுகையில் "ஓம் எம தர்ம ராஜாவே நமக" என்ற மந்திரத்தை கூறி ஏற்றலாம்.
அதே சமயம் கர்ப்பிணி பெண்கள் இதை கட்டாயம் ஏற்றக்கூடாது. கைக்குழந்தை உள்ள வீடுகளிலும் இதை ஏற்றக்கூடாது.
சிலரது வீட்டில் துர்மரண சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அப்படி துர்மரணம் அடைந்தவர்களின் ஆத்மாவை சாந்தி அடையச் செய்ய உதவுகிறது எம தீபம். அதோடு நமது முன்னோர்களால் நமக்கு ஏற்பட்டுள்ள சாபங்கள் அனைத்தும் இதன் மூலம் நிவர்த்தியாகும்.
அதே போல எமதர்ம ராஜாவின் ஆசியை பெற முடியும். அதன் காரணமாக அந்த வீட்டில் உள்ளவர்களின் ஆயுள் கூடும், தர்ம நெறியில் வாழ வழி பிறக்கும். அதோடு துர்மரண சம்பவங்கள் அந்த வீட்டில் நிகழாது. பரணி, மகம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எம தீபம் ஏற்றுவதன் மூலம் அதிக பலன்களை பெற முடியும்.