என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
மலரும் நினைவுகள்- சின்னத்திரையிலும் மின்னிய மீனா...
- கும்பகோணத்தில் சில நாட்கள் ஷுட்டிங் நடந்தது.
- 2006 முதல் 2008 வரை 500 அத்தியாயங்களாக ஒளிபரப்பான இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.
எனது நீண்ட கால திரை உலகப் பயணம் எவ்வளவோ அனுபவங்களை கற்றுத் தந்துள்ளது. அதோடு சினிமாவின் பரிணாம வளர்ச்சியுடன் என்னையும் சேர்த்து வளர்த்தது.
அதில் குறிப்பிடத்தக்கது சின்னத்திரை. நான் புகழின் உச்சத்தில் இருந்தபோதே சின்னத்திரையின் வளர்ச்சியும் உச்சம் பெற்றிருந்தது.
அது நேரடியாக குடும்பங்கள், பெண்கள் என்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்தது. எப்பவாவது சினிமா பார்த்தவர்கள் கூட எப்பவும் சின்னத்திரையை பார்க்கும் அளவுக்கு நிலைமை மாறியது.
சின்னத்திரையில் வெளியாக தொடங்கிய தொடர்களும், நிகழ்ச்சிகளும் மக்களை ஈர்த்தது ஒவ்வொரு வீடும் திரை அரங்கம் போல் மாறியது.
அப்போது சின்னத்திரையும் என்னை அழைத்தது. அந்த கால கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பை இழந்தவர்கள் தான் சின்னத்திரைக்கு செல்வார்கள் என்ற எண்ணம் இருந்தது.
அது மட்டுமல்ல நெடுந்தொடர்கள் மக்களை வெகுவாக கவர்ந்திருந்த நேரம். இந்த நிலையில் முன்பின் தெரியாத துறைக்குள் காலடி வைப்பது சறுக்கிவிடுமா? இல்லை சாதிக்க முடியுமா? என்ற எண்ணம் மனதுக்குள் அலைமோதியது.
ஆனால் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் 'லட்சுமி' என்ற தொடரை தயாரிப்பதற்கு என்னை அணுகியதும் லேசான தயக்கம் இருந்தாலும் அதையும் தான் ஒரு கை பார்த்து விடுவது என்று முடிவு செய்து ஒத்துக்கொண்டேன்.
ஷுட்டிங் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நேரம் கொடுத்தேன். பெரிய திரையிலேயே எதையும் சமாளித்த நமக்கு சின்னத்திரையா சவாலாக இருக்கப்போகிறது! என்ற நினைப்போடு தான் ஷுட்டிங் கிளம்பினேன்.
சினிமாவுக்கும் இதற்கும் வித்தியாசம் என்னவென்றால் பெண்களை மையமாக வைத்தே காட்சி ஓடுவதால் பெரும்பாலும் எல்லா சீன்களிலும் நடிக்க வேண்டியிருந்தது. கஷ்டமாகவே இருந்தது. சினிமாவில் ஒரு ஷாட் எடுத்ததும் சிறிது ஓய்வு கிடைக்கும்.
ஆனால் இங்கு தொடர்ந்து நடிக்க வேண்டியிருந்தது. ஓய்வே இல்லாமல் தொடர்ந்து நடித்ததால் மாலையில் மிகவும் களைப்பாகி விடுவேன். ஒரு கட்டத்தில் முடியவே முடியாது என்ற எண்ணம் வந்து விட்டது.
அதன் பிறகு டைரக்டரிடம் சொல்லி இரண்டு மணி நேரம் குறைக்க சொன்னேன். அதன்படி தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ஷுட்டிங்கில் கலந்து கொள்வேன்.
கும்பகோணத்தில் சில நாட்கள் ஷுட்டிங் நடந்தது. அதுவும் கோவில் பக்கத்தில் உள்ள வீட்டை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
ஷுட்டிங் வீட்டின் மேற்கூரையில் நடந்தது. சரியான வெயில் நேரம் மொட்டை மாடியில் நடந்தது. கோவில் பக்கம் என்றதால் காலில் செருப்பு அணியவும் முடியவில்லை.
கொளுத்தும் வெயிலில் கால் கடுமையாக சுட்டது. என்னால் நடிக்க முடியவில்லை. துணை நடிகர்களுக்கு தரையில் போர்வைகளை விரித்து இருந்தார்கள். எனக்கும் அதுபோல் விரிக்க சொல்லி அதன் பிறகு தான் நடித்தேன்.
ஏற்காடு மற்றும் ஒகேனக்கல் பகுதியிலும் வெளிப்புற ஷுட்டிங் நடந்தது. அருவி மிகவும் அழகாக இருந்தது. ஆனால் பார்த்து ரசிக்க முடியவில்லை.
ஏனெனில் சினிமாவை விட ரசிகர்கள் தொல்லை அதிகமாக இருந்தது. மீனா... மீனா.. என்று குரல் எழுப்பியபடி ஏகப்பட்ட கூட்டம்.
அதை விட சுவாரஸ்யம் என்னவென்றால் லட்சுமி தொடரில் லட்சுமி பாத்திரத்தில் நடித்ததால் ரசிகர்களும் என்னை லட்சுமி என்றே அழைக்க தொடங்கி விட்டார்கள்.
எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அடப்பாவி 25 வருடத்துக்கும் மேலாக சினிமாவில் எவ்வளவோ கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். அதில் மக்கள் மனதில் பதிந்ததை விட இந்த தொடரில் நடித்ததும் லட்சுமி என்ற பெயர் மக்கள் மனதில் எளிதாக பதிவானது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
2006 முதல் 2008 வரை 500 அத்தியாயங்களாக ஒளிபரப்பான இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.
சினிமாவில் எனக்கென்று ஒரு இடத்தை பிடித்தது போல் சின்னத்திரையிலும் தனி முத்திரை பதிக்க முடிந்தது.
'அழகுக்கு ஓரழகு!
அவளுக்கு நூறழகு!
அவள் முகம் காட்டினால்,
புன்னகை பூட்டினால்....
கண்ணுக்கு இமையழகு...'
என்று தொடங்கும் முகப்பு பாடல் மற்றும் இசை தினமும் எங்கும் ஒலித்தது.
பெரிய திரையில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குத் தான் இந்த மாதிரி பாடல்கள் ஒலிக்கும். ஆனால் தொலைக்காட்சி தொடரில் 2 ஆண்டுகள் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் லட்சுமி வந்தாச்சு என்று உங்கள் மீனாவை ஒவ்வொரு நாளும் வரவேற்றார்கள்.
இந்த வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்? ஒரே நேரத்தில் பெரிய திரை, சின்னத்திரை இரண்டிலுமே கலக்கியது, உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அடுத்து ஒரு முக்கியமான தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன் பை... பை...
(தொடரும்...)
இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ...
முத்து படத்தில் ரஜினி சாரிடம் 'இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ...' என்று டயலாக் பேசுவேன். பல ஆண்டுகள் கழித்து சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். அந்த போட்டியில் பங்கெடுத்த ஒரு குழந்தை என்னை பார்த்ததும் நான் பேசிய அந்த டயலாக்கை அற்புதமாக பேசி என்னிடமே 'உம்மா' கேட்டாள். உடனே மேடையிலேயே அந்த குழந்தையின் பட்டு கன்னத்தை தொட்டு நான் உம்மா கொடுத்து நெகிழ்ந்தேன். எப்படி வண்ணத்திரையும், சின்னத்திரையும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொண்டேன். கலைஞர்கள் எல்லா தளங்களிலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்.