என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
முருகனுக்கு தீபாவளி சீர்வரிசை!
- அருள் வடிவாக கருணையின் உருவமாக திகழும் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ய விரும்பவில்லை.
- சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கும் கருவறையில் அந்த சீர்வரிசை பொருட்கள் வைக்கப்படும்.
முருகப்பெருமானுக்கு நாம் எடுக்கும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கந்தசஷ்டி விழா. சூரபத்மன் எனும் அசுரனை முருகப்பெருமான் திருச்செந்தூர் கடற்கரையில் ஒரு சஷ்டி திதி தினத்தில்தான் வதம் செய்தார். இதை அடிப்படையாக கொண்டுதான் கந்தசஷ்டி விரதம் உருவானது.
திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கும், சூரபத்மனுக்கும் 6 நாட்கள் போர் நடந்தது. இந்த 6 நாள் போர் பற்றி சங்க இலக்கியங்களிலும், புராணங்களிலும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதை பிரதிபலிக்கும் வகையில் திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் சூரசம்கார நிகழ்ச்சி நடத்தி காட்டப்படுகிறது.
அருள் வடிவாக கருணையின் உருவமாக திகழும் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ய விரும்பவில்லை. அவனை திருத்தவே முயற்சி செய்தார். எனவேதான் தனது படை தளபதியாக திகழ்ந்த வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி பேச சொன்னார்.
ஆனால் ஆணவம் கொண்டிருந்த சூரபத்மன் யார் பேச்சையும் கேட்கவில்லை. போருக்கு தயார் என்று கொக்கரித்தான். முருகனை எளிதில் வென்று விடலாம் என்று நினைத்தான் அவன். எனவே தனது சகோதரர்கள், மகன்கள் அனைவரையும் படைதிரட்டி முருகனை எதிர்க்க துணிந்தான்.
இதை அறிந்த முருகப்பெருமான் வேறு வழியின்றி சூரபத்மனுடன் போரிட்டு அவனை அழித்தார். இதைத்தான் தமிழர்கள் உலகம் முழுக்க சூரசம்காரமாக கொண்டாடுகிறார்கள். எத்தனையோ தலங்களில் இந்த விழா நடத்தப்பட்டாலும் திருச்செந்தூர் கடலோரத்தில் நடக்கும் சூரசம்காரம் உணர்வுப்பூர்வமானது. முருகப் பக்தியை மேலும் ஓங்கச் செய்யக் கூடியது.
ஐப்பசி மாதம் திருச்செந்தூரில் இந்த விழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கும். இந்த பூஜை முடிந்ததும் திருச்செந்தூர் ஆலயத்துக்குள் இருந்து ஜெயந்திநாதர் தன் தாய் பார்வதி கொடுத்த வேலை ஏந்திக்கொண்டு படை வீரர்கள் புடைசூழ சப்பரத்தில் கடலோரத்துக்கு வருவார். அவருக்கு முன்பாக சூரபத்மன் திருச்செந்தூரின் மையப்பகுதியில் உள்ள சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடலோரத்துக்கு வந்து காத்து இருப்பான்.
ஜெயந்திநாதர் வந்ததும் போர் தொடங்கும். சூரனின் தலைகளை ஜெயந்திநாதர் வெட்டி வீழ்த்துவார். இறுதியில் மாமரமாக மாறி நிற்கும் சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்து சேவலும், மயிலுமாக மாற்றி ஆட்கொள்வார். அதன் பிறகு ஜெயந்திநாதர் திருச்செந்தூர் ஆலயத்துக்கு திரும்பி மகாதேவர் சன்னதியில் எழுந்தருள்வார். அங்கு மிகப்பெரிய கண்ணாடி வைக்கப்பட்டு இருக்கும். அதில் தெரியும் ஜெயந்திநாதர் பிம்பத்துக்கு அபிஷேகங்கள் செய்யப்படும்.
சூரனை வதம் செய்து வெற்றி கொண்டதற்காக ஜெயந்திநாதரை குளிர்விக்க இந்த அபிஷேகங்கள் நடத்துவார்கள். அந்த அபிஷேகத்தை அவரே கண்ணாடியில் பார்த்து ரசித்து மகிழ்வார் என்பது ஐதீகம். அத்துடன் சூரசம்காரம் நிறைவு பெறும்.
6 நாட்கள் சஷ்டி விரதம் இருந்த பக்தர்களும் மகிழ்ச்சியுடன் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்டு தங்களது விரதத்தை நிறைவு செய்வார்கள். அதன் பிறகு 7-வது நாள் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெறும்.
சூரனை வதம் செய்து காப்பாற்றினால் தனது மகள் தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து கொடுப்பதாக இந்திரன் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி திருப்பரங்குன்றத்தில் முருகன்-தெய்வானை திருமணம் நடந்தது. என்றாலும் சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
சூரன் சம்ஹாரம் செய்யப்பட்ட மறுநாள் காலை தெய்வானை திருச்செந்தூரில் உள்ள தபசு மண்டபத்துக்கு சென்று முருகனை திருமணம் செய்ய தவம் இருப்பாள். அன்று மாலை முருகப்பெருமான் அதாவது உற்சவர்களில் ஒருவரான குமரவிடங்கர் மயில் வாகனத்தில் தபசு மண்டபத்துக்கு சென்று தெற்கு ரத வீதியில் தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்வார். அன்று இரவு திருக்கல்யாணம் நடைபெறும்.
அதன் பிறகு 5 நாட்கள் ஊஞ்சல் சேவை நடைபெறும். இறுதி நாள் அன்று பக்தர்கள் முருகன்-தெய்வானை மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி குளிர்ச்சிப்படுத்துவார்கள். இதன் மூலம் கந்தசஷ்டி விழா இனிமையாக நிறைவு பெறும்.
முருகப்பெருமானுக்கு தெய்வானையை திருமணம் செய்து கொடுத்த இந்திரன் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு திருச்செந்தூர் தலத்துக்கு வந்து மகளுக்கும், மருமகனுக்கும் புத்தாடை உள்பட சீர்வரிசை கொடுப்பதாக ஐதீகம். பெண்ணை பெற்றவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் தங்களது மகளுக்கும், மருமகனுக்கும் புத்தாடை, பட்டாசு, இனிப்பு சீர்வரிசை வழங்கி வாழ்த்து சொல்வார்கள்.
அதைத்தான் திருச்செந்தூர் தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்திரன் செய்வதாக வரலாற்று பதிவுகள் உள்ளன. சீதையை திருமணம் செய்து கொடுத்த ஜனக மகாராஜா தனது சொத்தில் பாதி அளவுக்கு தீர்ந்து விடும் வகையில் தீபாவளி சீர் கொடுத்ததாக ராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரையில் சொக்கநாதருக்கு மீனாட்சியை திருமணம் செய்து கொடுத்த பிறகு கள்ளழகர் ஆண்டுதோறும் சீர்வரிசை கொடுப்பதை இப்போதும் விழாவாக கொண்டாடுகிறார்கள். அதே போன்றுதான் திருச்செந்தூரிலும் இந்திரன் தனது மகள் தெய்வானைக்கு மருமகன் முருகனுக்கும் தீபாவளி சீர்வரிசை கொடுக்கிறார்.
முருகன்-தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தாலும் அவர்களுக்கு இந்திரன் தீபாவளி சீர் கொடுப்பது திருச்செந்தூர் தலத்தில் மட்டுமே நடப்பது குறிப்பிடத்தக்கது. சூரபத்மனை வதம் செய்து வெற்றி வாகை சூடிய பிறகு முருகன் திருச்செந்தூர் ஆலயத்தில் நிரந்தரமாக குடியேறி விட்டார் என்ற வகையில் இந்த விழா அமைகிறது.
தீபாவளி சீரை முருகப்பெருமானும், தெய்வானை மட்டும் பெறுவது இல்லை. திருச்செந்தூர் ஆலயத்தில் ஒவ்வொரு சன்னதியிலும் இடம் பெற்றிருக்கும் இறைமூர்த்தங்களும் பெறுவதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு தீபாவளியின் போதும் திருச்செந்தூர் தலத்தில் மிக மிக கோலாகலமாக நடப்பதை காண முடியும்.
தீபாவளி தினத்தன்று அதிகாலை திருச்செந்தூர் முருகனுக்கு கொடுக்க வேண்டிய தீபாவளி சீர்வரிசையான பட்டு வேஷ்டி, பட்டு துண்டு, பட்டு பீதாம்பரம், மலர் மாலைகள், இனிப்பு பண்டங்கள் வகை வகையாக பெரிய பெரிய தாம்பூலங்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். பழ வகைகள், பூ வகைகளும் அந்த வரிசையில் இடம் பெற்று இருக்கும்.
அந்தப் பொருட்களை சிவாச்சாரியர்கள் கடற்கரைக்கு எடுத்துச் செல்வார்கள். அங்கு வரிசையாக வைத்து மந்திரங்கள் சொல்லி பூஜைகள் நடத்துவார்கள். பிறகு அவற்றை மேளதாளம் முழங்க வெள்ளி பல்லக்கில் வைத்து ஆலயத்துக்குள் எடுத்து வருவார்கள்.
சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கும் கருவறையில் அந்த சீர்வரிசை பொருட்கள் வைக்கப்படும். அப்போது இசைக் கலைஞர்கள் முருகனை புகழ்ந்து பாடுவார்கள். இதைத் தொடர்ந்து திருச்செந்தூர் முருகப்பெருமான் தீபாவளியை கொண்டாட தொடங்குவார்.
நாம் எண்ணை தேய்த்து குளிப்பது போல முருகப்பெருமானுக்கும் எண்ணை குளியல் நடத்தப்படும். அதன் பிறகு பால், தயிர், பஞ்சாமிர்த அபிஷேகங்கள் செய்யப்படும். இதையடுத்து அற்புதமாக மனம் வீசும் சந்தன கலவையால் முருகப்பெருமான் அலங்கரிக்கப்படுவார். அந்த சந்தனக் காப்பில் முருகப்பெருமானை பார்க்கும்போது மனம் மயங்கும்.
இதைத் தொடர்ந்து மாமனார் இந்திரன் கொடுத்த தீபாவளி சீர்வரிசையான பட்டு வேஷ்டி, பட்டு அங்கவஸ்திரம், முத்து மாலைகள், வைர நகைகள் ஒவ்வொன்றாக முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்படும். விதவிதமான மலர்களாலும் முருகன் அலங்கரிக்கப்படுவார்.
தீபாவளி சீர்வரிசை ஏந்தி புன்னகை தவழ காட்சியளிக்கும் முருகனுக்கு தீபதூப ஆராதனைகள் நடக்கும். அர்ச்சனைகள் செய்யப்படும். வகை வகையான நைவேத்தியங்களும் முருகப் பெருமானுக்கு படைக்கப்படும். தீபம் காட்டி இந்த சீர்வரிசையை ஏற்கும்படி செய்வார்கள்.
திருச்செந்தூர் முருகப்பெருமானும் அந்த தீபாவளி சீர்வரிசைகளை ஏற்று மனம் குளிர பக்தர்களுக்கு ஆசி வழங்குவர். அந்த சமயத்தில் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
முருகனை மனம் குளிர செய்யும் வகையில் தீபாவளி தினத்தன்று செய்யப்படும் சந்தனக் காப்பு அபிஷேகம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்பார்கள். வாய்ப்பு இருப்பவர்கள் அதை கண்ணார கண்டு களியுங்கள். முருகப்பெருமான் தீபாவளி சீர்வரிசை ஏற்று புத்தாடை அணிந்து காட்சி அளிக்கும் அதே சமயத்தில் மற்ற சன்னதிகளிலும் சுவாமிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்படும்.
தெய்வானைக்கும் வள்ளி குகையில் வள்ளிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பட்டாடை உடுத்தி நகைகள் அணிவித்து வழிபடுவார்கள். கருவறை முருகருக்கு பின்புறம் உள்ள பாம்பறையில் இருக்கும் பஞ்சலிங்கங்களுக்கும் தீபாவளி அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள்.
அன்று மதியம் உச்சிகாலத்தில் கங்காதேவி திருச்செந்தூருக்கு வந்து முருகனை தரிசிப்பதாக ஐதீகம். அதாவது திருச்செந்தூர் கடலில் கங்கை கலந்திருப்பதாக சொல்வார்கள். இதனால்தான் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்து முடித்ததும் ஒரு வெள்ளி பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்தியங்களை சிவாச்சாரியார்கள் கடலோரத்துக்கு எடுத்து வந்து கட லுக்கு பூஜை செய்து நைவேத்தியத்தை கடலில் கரைத்து விட்டு செல்வார்கள்.
முருகப்பெருமானே கங்காதேவிக்கு தீபாவளி தினத்தன்று பிரசாதம் அனுப்பி வைப்பதாக இதன் மூலம் கருதப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வழிபட்டால் இந்திரன் முருகப்பெருமானுக்கு சீர்வரிசைகளை அள்ளி அள்ளி கொடுப்பது போல நமக்கும் கொடுப்பார் என்பது ஐதீகம்.
இந்திரன் மட்டுமல்ல நீங்கள் விரும்பினாலும் தீபாவளிக்கு திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள சுவாமிகளுக்கு புத்தாடைகளை சீர்வரிசையாக வழங்கலாம். தீபாவளி அன்று அதிகாலை கோவிலை சுற்றி உள்ள வீதிகளில் வெள்ளிப்பல்லக்கு எடுத்து வரப்படும். முருனுக்கும் மற்ற சன்னதி தெய்வங்களுக்கும் புத்தாடை கொடுக்க விரும்புபவர்கள் அந்த பல்லக்கில் புத்தாடைகளை கொடுக்கலாம்.
அப்படி சேரும் புத்தாடைகள் ஆலயத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொரு சன்னதிக்கும் பிரித்து வழங்கப்படும். இதன் மூலம் திருச்செந்தூர் ஆலயத்துக்கு நீங்களும் தீபாவளி சீர்வரிசை கொடுத்த ஆத்ம திருப்தி ஏற்படும். முருகன் அருளை பெறலாம்.
இதையடுத்து நடைபெறும் சூரசம்ஹாரம் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.