என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
குழந்தை வரம் தரும் சஷ்டி தேவதை
- சஷ்டி என்பவள் ஓர் திதி தேவதை ஆவாள்.
- இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும்.
கந்த சஷ்டி விழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. கந்த சஷ்டி என்பது ஓர் திதி விரதம். இது ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாதத்தில் தீபாவளி அமாவாசைக்குப் பிறகு வருவதாகும்.
சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது ஓர் புராதனத் தமிழ்ப் பழமொழியாகும். இதற்கு சஷ்டி திதியில் விரதம் அனுஷ்டித்தால் அகத்தில் உள்ள கருப்பையில் கரு உருவாகி வளரும் என்று அர்த்தமாகும். சிலர் இதனை சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று வேறுவிதமான பழமொழியாக்கி பொருள் சொல்வது மிகவும் தவறாகும்.
சஷ்டி என்பவள் ஓர் திதி தேவதை ஆவாள். இவள் பிரகிருதீ தேவதையின் ஆறாவது அம்சமாகத் திகழ்பவள். அதனால் ஆறு என்ற பொருள் தரும்படி சஷ்டி எனப்பட்டாள். இவள் பிரம்மதேவனின் மானச புத்ரி.
முன்பொரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றபோது இவள் தேவர்கள் சேனையின் பக்கம் இருந்து உதவி புரிந்தால் தேவசேனையென்றும் ஓர் பெயர் பெற்றாள். (இந்திரனின் மகளாகப் பிறந்து முருகப் பெருமானை திருப்பரங்குன்றத்தில் திருமணம் புரிந்த தேவயானை யென்பவள் வேறு இவள் வேறு) அப்போது அந்த தேவசேனைகளின் பதியாகத் திகழ்ந்த (தேவசேனாபதி) முருகனுக்கு இந்த திதி தேவதையான சஷ்டி தேவி மிகவும் பிரியமுடையவளாக திகழ்ந்தாள். அதனால்தான் முருகனுக்கு சஷ்டி திதி மிகவும் விருப்பமுடைய திதியாக மாறியது.
சஷ்டி எனும் இந்த திதி தேவதையானவள் குழந்தை இல்லாப் பெண்களுக்கு குழந்தை வரம் தரும் ஓர் புத்ரபாக்ய தேவதையும் ஆவாள். இவள் பணி அதோடு மட்டும் நின்று போவதில்லை. மாதர்களுக்கு கரு உருவாக்குபவள், உருவாக்கிய கருவை உடனிந்து காப்பவள், அக்கரு சிறப்பாக வளர உதவி புரிபவள், பிறந்த அந்த சிசுக்களை பாலாரிஷ்ட தோஷங்கள் ஏற்படாமல் காப்பாற்றுபவள்.
அதனால் இந்த சஷ்டி திதி தேவதையை குழந்தை பாக்கியம் வேண்டி அக்கால மக்கள் வழிபட்டனர். இவளை பிரசவம் நடந்த வீட்டில் 6-வது நாளும், 21-வது நாளும் அவர்கள் வணங்கி பூஜித்துள்ளனர். அப்போது இவளை சம்பத் சொரூபிணியாக அவர்கள் வழிபடுவார்களாம்.
ஒரு சமயம் சுவாயம்புவ மனு எனும் மன்னனுக்கும், அவன் மனைவி மாலினி தேவிக்கும் வாரிசாக ஓர் ஆண் குழந்தையின்றி புத்ரதோஷம் இருந்தது. அவர்கள் சஷ்டி விரதமிருந்து சஷ்டி தேவியின் அருளால் 12 ஆண்டுகள் கழித்து புத்ரபாக்யமும் ஏற்பட்டது.
ஆனால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளால் அக்குழந்தை இறந்தே பிறந்தது. அதனால் அக்குழந்தையை மயானத்தில் கொண்டு சென்று புதைப்பதற்கு முன்பு அழுது புலம்பினர். அப்போது அங்கு நேரில் தோன்றிய சஷ்டி தேவி அக்குழந்தையிடம் சென்று அதனை எடுத்து தம் மார்போடு அணைத்து தம் இதழ்களால் முத்தமிட்டு அதை ஆசிர்வதித்தாள். உடனே இறந்த அக்குழந்தை உயிர் பெற்றெழுந்தது. இதனைக் கண்டு அரசனும், அரசியுடம் அவன் சேனைகளும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.
அக்குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டழைத்த சஷ்டிதேவி, இவன் நெடுநாட்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து ஆட்சி புரிவான் என்று ஆசீர்வதித்து அக்குழந்தையை சுவாயம் புவ மனுவின் மனைவி மாலினியின் கைகளில் தந்து மறைந்தாள்.
சுவிரதன் என்றால் நன்கு விரதம் அனுஷ்டித்ததால் பிறந்தவன் என்பது பொருளாகும். அதனால் தான் குழந்தை வரம் வேண்டும் அனைவருமே முருகப்பெருமானுக்கு மிகவும் பிரியமான தேவதையான இந்த சஷ்டி தேவியின் நாளில் சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானையும் சஷ்டி திதி தேவதையையும் வழிபட்டு புத்ரபாக்கியம் பெறுவதோடு மற்றும் பல பெரும்பேறுகளையும் பெற்று மகிழ்கிறார்கள்.
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி நீராடல் என்று தீபாவளி கங்கா நீராடல் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.
இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு.
இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும். இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர்.
பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள்.
கந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா?
ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.
தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.
அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.
சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும். ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நிராடி முருகனை வணங்கிப் பராணம் செய்தல் வேண்டும்.
இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும். ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாரணம் செய்தல் வேண்டும். இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு. இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும். தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது.
முருகப்பெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவா? தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.
அதிகாலை 6 மணிக்கு முன்பே காப்பு கட்டிக் கொள்வது நல்லது
சஷ்டி விரதம் இருப்பவர்கள் நல்ல நேரத்தில் காப்புக் கட்டிக் கொள்வது அவசியமாகும். நாளை (சனிக்கிழமை) இரவு 8.06 மணி வரை பிரதமை உள்ளது. எனவே நாளை அதிகாலை 6 மணிக்கு முன்பே அதாவது சூரியஉதயத்துக்கு முன்பு காப்புக் கட்டிக்கொள்வது நல்லது. நாளை சஷ்டி விரதம் தொடங்கும் போது முருகர் படத்தை அலங்கரித்து வைத்து காப்புக் கட்டி விரதத்தை தொடங்கலாம். இல்லை யெனில் முருகரை கலசத்தில் ஆவாகனம் செய்து வழிபடலாம்.
காப்புக் கட்டும் முன்பு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிப் பெற வேண்டும். அத்தகைய சூழ்நிலை இல்லாத பட்சத்தில் முருகரையே குருவாக ஏற்று காப்புக் கட்டிக் கொள்ளலாம். முருகருக்கு சிவப்பு மலர்களால் மாலை அலங்காரம் செய்வது நல்லது. நைவேத்தியமாக காய்ச்சிய பாலில் தேன் கலந்து வழிபடுவது உகந்தது.
சஷ்டி விரத மகிமை
கந்த சஷ்டி விரதத்தை கடைபிடித்ததாலேயே நாரத முனிவர் மேலான பதவி பெற்றார். இவ்விரதச் சிறப்பினை விநாயகப் பெருமானே நாரத முனிவருக்கு எடுத்துரைத்தருளினார்.
முன்னவன் அதனைக் கோளா முழுதருள் புரிந்து நோக்கி அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி பொன்னடி வழிபாடாற்றிப் பொருவில்கார்த்திகை நாள் நோன்மைப் பன்னிரு வருடங்காறும் பரிவுடன் புரிதி என்றான்.
இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் தோற்று முப்புவனத்தி வேண்டும் முறையை அடைந்த நீரார் மெய்ப்படு தொகையை யாரே விளம்புவார் என்று கந்தபுராணம் இவ்விரத்தைப் போற்றுகின்றது.
கந்த சஷ்டி விரதம் மேற் கொள்வோர் ஒரு கைத்தண்ணீரையே அருந்துதல், தருப்பையில் படுத்தல், கந்தபுராணம் படித்தல், கேட்டல், உறங்காது விழித்து இறைவனைச் சிந்தித்தல் ஆகியவற்றைத் தவறாது செய்து வழிபட வேண்டும். ஓர் ஏழை இவ்விரதமிருந்து மனு என்ற மன்னன் ஆனான்.
சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்று பொருள்.
கந்த சஷ்டி நாளுக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரத்தை அனுஷ்டிப்பது ஒரு முறை.
அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒரு முறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. உண்ணாவிரதம் இருப்போர் போன்று உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை இவ்விரதமிருப்போர் அருந்தக் கூடாது. இவ்விரத நாட்களில் விடியற்காலையில் எழுந்திருந்து, நாட் கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும். ஏழாம் நாட்காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.
கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி, நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலியவற்றை வெற்றி கொண்டு வாகை சூடிப் பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும். அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்