search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    என்னிடம் கொடு! கவலையை விடு!!
    X

    என்னிடம் கொடு! கவலையை விடு!!

    • மனப்பக்குவம் இருந்தால்தான் விட்டுக் கொடுக்க முடியும். பக்குவம் மிக முக்கியம்.
    • கடின மனம் எதையும் விட்டுக்கொடுக்காது. ஆணவம் தலைதூக்கி நிற்கும்.

    மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது, தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை'.

    - ஹெலன் கெல்லர்

    இல்லற வாழ்வில் வெள்ளி விழா கண்ட தம்பதியருக்காக, ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகச்சிறந்த தம்பதியரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கும் விழா.

    ஏராளமான தம்பதியர் ஆவலுடன் வந்தனர். அரங்கம் நிரம்பி வழிந்தது. மேடையில் நடுவர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள். வரிசைப்படி பெயர்கள் வாசிக்கப்பட, ஒவ்வொரு ஜோடியும் மகிழ்ச்சியுடன் மேடை ஏறினர்.

    அவர்களிடம் வெற்றிமிகு இல்லற வாழ்வைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் எல்லோருமே, தாங்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பையும், ஒருமித்த கருத்தையும் குறித்து சிலாகித்துப் பேசினர். தங்களுக்குள் ஒருநாளும் சண்டையே வந்ததில்லை; அதுதான் தங்களின் நீண்டகால இல்லற வாழ்வின் வெற்றிக்கான காரணம் என்று பெருமித்ததுடன் கூறினர்.

    அந்நேரம் எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, அந்த அரங்கத்திற்கு வந்தார். எல்லோரும் தம்பதியராக வந்திருக்க, அந்தப் பெண் தனிநபராய் வந்திருப்பதைப் பார்த்து, அரங்கத்தில் இருந்த மற்ற தம்பதியர் ஏளனமாகச் சிரித்தனர். சிலர் கேலியாகக் கூச்சலிட்டனர். அவர்களை அமைதிப்படுத்திய நடுவர், அந்த முதிர்வயதுப் பெண்ணை மேடைக்கு அழைத்தார்.

    அவர் தயங்கியபடி மேடைக்குச் சென்றார். எல்லோரும் ஆரவாரம் செய்தனர்.

    நடுவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, 'இந்த நிகழ்ச்சியைப் பற்றிய விபரம் உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்.

    'தெரியும்' என்றார் அவர்.

    'அப்படியானால் உங்கள் கணவர் எங்கே?'

    'அவர் வரவில்லை'.

    'ஏன்?'

    'இன்று காலை எங்களுக்குள் ஒரு சின்ன சண்டை. அதனால் அவர் வரவில்லை'.

    'என்ன! சண்டை போடுவீங்களா?'

    'அது சகஜமான விஷயம்தான். அடிக்கடி சண்டை வரும்'.

    'உங்களுக்குத் திருமணமாகி எத்தனை வருஷமாகுது?'

    'நாற்பது வருஷம்'.

    'வாழ்த்துகள். ஆனா, சண்டைகளோடே எப்படி இத்தனை வருஷங்கள் சேர்ந்து வாழ முடியுது?' - நடுவர் வியப்புடன் கேட்டார்.

    'குடும்பம்னா சண்டைகள் வரத்தான் செய்யும். மோதினாலும் சீறினாலும், உறவு விடுபடாமல் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரிச்சி வாழ்றதுதானே குடும்ப வாழ்க்கை. சில சமயம் அவரும், சில சமயம் நானும் விட்டுக்கொடுத்திடுவோம். சண்டை தணிஞ்சிடும். சமாதானம் ஆயிடுவோம். அன்புதானங்க முக்கியம்'.

    'உங்க புள்ளைங்க?'

    'ஒரு பையன் ஒரு பொண்ணு. ரெண்டு பேரும் டாக்டர்ஸ். பையன் குடும்பம் லண்டனில், பொண்ணு குடும்பம் துபாயில்'.

    'ரொம்ப சந்தோஷம். உங்க கணவரை வற்புறுத்தி இங்க கூட்டி வந்திருக்கலாமே'.

    'அவர் சார்பாகவும்தான் நான் வந்திருக்கேன். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க ஆசைப்பட்டேன். அதனாலதான் வந்தேன். வீட்டுக்குப் போனதும் அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவேன்' என்று சொல்லிவிட்டு, அமைதியாக மேடையிலிருந்து இறங்கினார் அந்தப் பெண்மணி.

    நடுவர் எழுந்து வந்து மைக் முன்னால் நின்றார். சிலநொடி நிசப்தத்திற்குப்பின் பேசத் தொடங்கினார்.

    'தம்பதியர் அனைவருக்கும் என் பாராட்டுகள். எல்லோரும் உங்க வெற்றிமிகு குடும்ப வாழ்வைப் பற்றி ரொம்ப அழகா சொன்னீங்க. என்றாலும், மிகச்சிறந்த தம்பதியர்க்கான விருதை, இறுதியாக இங்கு வந்து பேசிய அந்தப் பெண்மணிக்குக் கொடுக்க விரும்புகிறேன். மேடைக்கு அவரை அன்புடன் அழைக்கிறேன்' என்றார்.

    அரங்கமே வியப்பில் ஆழ்ந்தது. மற்ற தம்பதியர்க்கு ஒன்றும் புரியவில்லை. முதிர்வயதுப் பெண்மணி மேடைக்குச் சென்றார். நடுவர் கைகுலுக்கி அவரை வரவேற்று, தன் பேச்சைத் தொடர்ந்தார்.

    'ஒரே கருத்துடைய கணவனும் மனைவியும் குடும்பத்தை வெற்றிகரமா நடத்துறது ரொம்ப ஈஸி. ஆனால் கருத்து வேறுபாடுகள், மோதல்கள், சண்டை சச்சரவுகள் இருந்தும் உறவு விடுபடாமல் நாற்பது வருஷங்களைக் கடந்தும் பொறுப்புணர்வோடு குடும்பத்தை நடத்துறதுதான் மிகச்சிறந்த சாதனை. விட்டுக்கொடுத்து வாழும் பண்புதான் உன்னதமானது. எனவே, மிகச்சிறந்த தம்பதியர்க்கான விருதை இவர்களுக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்' என்று சொல்லி, அந்தப் பெண்மணியிடம் விருதினை வழங்கினார்.

    'விட்டுக்கொடுத்தல்'தான் உள்ளங்களை வெல்லும். எதையும் எளிதாக்கும். ஆனால் 'ஈகோ' அதற்கு எதிரானது. வாழ்க்கையைக் கடினமாக்கும்.

    மனப்பக்குவம் இருந்தால்தான் விட்டுக் கொடுக்க முடியும். பக்குவம் மிக முக்கியம். ரவா பணியாரம் செய்வதற்குக்கூட மாவுப் பக்குவம் சரியாக அமைய வேண்டும். கெட்டியாகவும் இருக்கக் கூடாது. தண்ணீரின் அளவும் அதிகமாகிவிடக் கூடாது. மாவு சரியான பக்குவத்தில் இருந்தால்தான், பணியாரம் சரியாக வரும்.

    நம் வாழ்க்கைக்கும் அது பொருந்தும். பக்குவப்படாத வாழ்க்கை பயன்படாது. வாழ்க்கையே ஒரு சமன்பாடுதான். மனதை சமப்படுத்திக் கொள்ளாதவர்கள் பிரச்சனைகளை மேற்கொள்ள முடியாது. புயலுக்கும் அமைதிக்கும் நடுவில், வெயிலுக்கும் நிழலுக்கும் நடுவில், வரவுக்கும் செலவுக்கும் நடுவில் - இப்படி எல்லாவித இரட்டைத் தன்மைகளுக்கும் நடுவில், சமநிலையில் நம்மால் இருக்க முடிகிறதா? அது சாத்தியமானால், எந்தச் சூழ்நிலையும் நமக்குச் சாதகமே.

    'நான் சொல்வதுதான் சரி, எல்லாம் எனக்கானவை, எனக்குதான் முதலிடம்' போன்ற எண்ணங்கள் பக்குவப்படாத மனதிலிருந்து எழுபவை. அத்தகைய எண்ணங்களே தனிமனித மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கான மூல வேர்கள்.

    பேருந்து வந்து நின்றதும் முண்டியடித்துக்கொண்டு ஏறுவார்கள். எதற்காக? ஜன்னல் ஓர இருக்கையைப் பிடிப்பதற்காக. அதைப் பிடித்துவிட்டால், தேர்தலில் நிற்பதற்கு 'சீட்' கிடைத்ததுபோல் அவர்களுக்கு ஒரு பெருமிதம். அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

    உட்கார இடம்கிடைக்காமல் சில முதியவர்கள் நின்று கொண்டே பயணிப்பார்கள். எழுந்து இடம்கொடுக்க மனம்வராது. அங்கு ஒருசில நல்லவர்கள் இருப்பார்கள். அவர்கள் விட்டுக்கொடுப்பார்கள். அதன்மூலம் பெறுகின்ற உண்மையான மகிழ்ச்சியை உள்ளூர அனுபவிப்பார்கள்.

    சில குடும்பங்களில், உடன்பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். சொத்துத் தகராறு. பாகப் பிரிவினைப் பிரச்சனை. ஒரு சென்ட் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பார்கள். காலம் முழுவதும் பகையோடே வாழ்ந்து, வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் காலமாகிப் போய்விடுவார்கள். என்ன பிரயோஜனம்!

    அதை யாரும் சிந்திப்பதில்லை. வீம்புக்கு விதண்டாவாதம் செய்வார்கள். பொல்லாத வார்த்தைகளை வீசுவார்கள். ஒருவர் பேச்சை நிறுத்தினால், பிரச்சனை தணிந்துவிடும். ஆனால் நிறுத்த மாட்டார்கள். உறவுகளுக்குள் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு, விட்டுக்கொடுக்காத மனோபாவம்தான் காரணம்.

    சாலையில் இரண்டு வாகனங்கள் உரசிக் கொள்கின்றன. உடனே தகராறு. பின்னால் ஏராளமான வாகனங்கள் நகர முடியாமல் நின்று கொண்டிருப்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட மாட்டார்கள். வாய்ச்சண்டை முற்றி இறுதியில் கைகலப்பில் முடியும்.

    எல்லாவற்றிற்கும் காரணம், கடின மனம்.

    கடின மனம் எதையும் விட்டுக்கொடுக்காது. ஆணவம் தலைதூக்கி நிற்கும். 'நான்' 'எனது' என்னும் சுயநலச் சீர்கேடு அங்கிருந்துதான் ஆரம்பமாகும். அதனால் நிம்மதி ஏற்படுமா? கிடையாது! திருப்தியின்மையும் அலைக்கழிப்பும்தான் ஏற்படும். மனக்குறை இருந்துகொண்டே இருக்கும்.

    ஒரு மன்னன் மன அமைதியின்றித் தவித்தான். அதற்காக ஏங்கினான். அவனுடைய நாட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நாடு செழித்திருந்தது. கலைகள் தழைத்தோங்கின. மக்கள் களிப்புடன் வாழ்ந்தனர். எனினும், தனக்குள் அமைதியின்மையை மன்னன் உணர்ந்தான். என்ன செய்வது? யாரிடம் சென்று கேட்பது? குழம்பிக் கொண்டிருந்தான்.

    அந்நிலையில் ஒருநாள், அவன் ஆட்சிக்குட்பட்ட ஒரு ஊருக்கு ஜென் குரு ஒருவர் வந்திருப்பதை மன்னன் அறிந்தான். அவரிடம் போனால் தனது பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பிய மன்னன், அந்த ஜென் குருவிடம் சென்றான்.

    ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார் குரு. மன்னனைக் கண்டதும் அவனுடைய குழப்ப நிலையை அவர் புரிந்து கொண்டார்.

    'அரசே! நாடு சிறப்பாக இருக்கிறதல்லவா?' என்று கேட்டார்.

    'ஆம், ஸ்வாமி. அதில் ஒரு குறையும் இல்லை. எனினும், என் மனதில் அமைதியில்லை' என்றான் வருத்தத்துடன்.

    'சரி, உனது நாட்டை எனக்குக் கொடுத்துவிடு' என்றார் குரு.

    'எடுத்துக் கொள்ளுங்கள் ஸ்வாமி'.

    'நாட்டை என்னிடம் கொடுத்துவிட்டாய். எனவே, கஜானாவும் என்னுடையது. இனி நீ என்ன செய்வாய்?'

    'ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன் ஸ்வாமி'.

    'அந்த வேலையை என்னிடமே செய்யலாமே. நீ என்னுடைய பிரதிநிதியாக இந்த நாட்டைப் பராமரித்து வா. உன் செலவுக்கு அரசு கஜானாவிலிருந்து ஊதியம் பெற்றுக்கொள். நான் வரும்போது கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார் குரு.

    இரண்டு ஆண்டுகள் கடந்தன. திடீரென ஒருநாள் மன்னனைப் பார்க்க வந்தார் குரு. மன்னன் அவரை வரவேற்று, மன்னனுக்கான ஆசனத்தில் அமரச் செய்தான்.

    கவிஞர் தியாரூ, 9940056332

    'அரசே! நாடு எப்படி இருக்கிறது?' புன்னகையுடன் கேட்டார் குரு.

    'சுபிட்சமாக இருக்கிறது ஸ்வாமி. கணக்கு வழக்குகளைக் கொண்டு வருகிறேன், பாருங்கள்'.

    'அது இருக்கட்டும். இப்போது உன் மனநிலை எப்படி இருக்கிறது?'

    'என் மனம் மிக அமைதியாக இருக்கிறது ஸ்வாமி'.

    'அதே அரண்மனை, அதே அதிகாரம், அதே படை, அதே மக்கள். ஆனால், அப்போது இல்லாத நிம்மதி இப்போது உன்னிடம் இருக்கிறது. காரணம் என்ன?'

    மன்னன் விழித்தான். குரு விளக்கினார்.

    'அப்போது இந்த ஆட்சி அதிகாரம் உன்னுடையது என்று நினைத்திருந்தாய். ஆனால் இப்போது இது வேறொருவருடையது; நீ அவரின் பிரதிநிதி என்றிருக்கிறாய். 'எதுவும் எனதல்ல' என்று நீ உன்னையே விட்டுக்கொடுத்தபோது, ஓர் அற்புதமான அமைதி உனக்குள் வந்துவிட்டது. இனி, இதே மனநிலையோடு ஆட்சி செய்' என்று சொல்லிச் சென்றார் குரு.

    ஒரு பேருண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 'விட்டுக்கொடுத்தல்' என்பது தெய்வீகப் பண்பு. அதனை நாம் பழக்கப்படுத்திக் கொண்டால் - குடும்பத்தில், நட்பில், சமூகத்தில் அன்பும் அமைதியும் நிலவிடாதா!

    Next Story
    ×