search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வைகுண்ட சுவாமிகளின் வாழ்வும் வாக்கும்
    X

    வைகுண்ட சுவாமிகளின் வாழ்வும் வாக்கும்

    • பொது கல்விக்கூடங்கள் இல்லாத காலச்சூழலில் முத்துக்குட்டியின் இளமை வாழ்வு தொடங்கியது.
    • தனது இருபத்திரண்டாவது வயதில் கடுமையான சரும நோயால் அல்லலுற்று வருந்தினார்.

    அய்யா வைகுண்ட சுவாமிகள் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 5 கல் தொலைவில் வடமேற்காக அமைந்துள்ள தாமரைக்குளம் என்னும் ஊருக்கருகாமையில் உள்ள பூவண்டன் தோப்பு என்னும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் கி.பி.1809-ம் ஆண்டு பொன்னு என்பவருக்கும், வெயிலாள் அம்மையாருக்கும் 2-வது மகனாக தோன்றினார்.

    வைகுண்ட சுவாமிகளின் பெற்றோர் சமுதாய நலனில் மிக்க ஆர்வம் உடையவர்களாயிருந்தனர். சாதியின் பெயரால் சமுதாயத்தில் பெரும்பான்மையினர் இழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததை கண்டு மனம் வெதும்பினர். உயர் சாதி மக்களின் கொடுமைகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே சமய மாற்றம் நடைபெறுகிறது என அறிந்து, ஒரு சாதியினர் பிறிதொரு சாதியினர் மீது ஆதிக்கம் செலுத்தாத ஒரு சமதர்ம சமுதாயம் ஏற்பட இறைவனை வேண்டினர்.

    சிறந்த விஷ்ணு பக்தர்களாகையால் தீயோர்களிடமிருந்து நல்லோர்களை காத்திட புவியில் இறைவன் திரு அவதாரம் செய்வான் என உறுதியுடன் இருந்தனர். குழந்தையின் முகத்தில் தெய்வீக ஒளி வீசுவதை கண்டு பெற்றோர் பூரிப்படைந்தனர். ஊராரும் உற்றாரும் இக்குழந்தை திக்கெட்டும் புகழ் பரப்பத் திகழ்வான் எனப் பெருமிதம் கொண்டனர். தங்கள் ஓய்வுப் பொழுதினை குழந்தையுடன் கழிப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

    முத்துக்குட்டி

    ஊரறிய, தன் உற்றார் உறவினருடன் கலந்து பெற்றோர் முடிசூடும் பெருமாள் என்று குழந்தைக்கு பெயர் சூட்டினர். எனினும், அக்காலச் சூழ்நிலை முடி சூடும் பெருமாள் என பெற்றோரிட்ட பெயர் நிலைத்திட அனுமதிக்கவில்லை. அன்றைய நாட்களில் ஒடுக்கப்பட்ட சாதியினர் மன்னர்களின் பெயர்களையோ, அல்லது அவர்களுடைய சிறப்புப் பெயர்களையோ சூட்டிக்கொள்ள உரிமையின்றி இருந்தனர்.

    எனவே, உயர் சாதியினர் முடிசூடும் பெருமாள் எனப் பெயர் சூட்டிக்கொண்டதை எதிர்த்தனர். அரசாங்க அலுவலர்களிடம் தெரியப்படுத்திப் பெயர் நீக்கம் செய்திட வேண்டினர். அலுவலர்களும் முடிசூடும் பெருமாள் என்னும் பெயரை மாற்றிட ஆணையிட்டனர். பெயர் சூட்டலால் வரும் குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு ஊர் மக்கள் பொன்னு வீட்டில் கூடி பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தனர். எனவே, முடிசூடும் பெருமாள் முத்துக்குட்டி என்னும் பெயர் பெற்றார்.

    பெயரிடுதலில் கூட அதிகார வர்க்கத்தின் ஆதிக்க வெறி சதிராட்டம் ஆடியது. இழிகுலத்தவர்கள் என்று இடும்பைக்குள்ளாக்கப்பட்டவர்களின் இழிநிலை அவர்களின் பெயர்களிலேயே உணர்த்தப்பட்டது. அரசாங்கத்தின் சமத்துவமற்ற கொடுமையான-ஏகாதிபத்தியக் கொள்கைகள் இளம் பருவத்திலேயே முத்துக்குட்டியின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்தது. எவ்வாறேனும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை காத்தே தீர வேண்டும் என்ற திடமான எண்ணம் முத்துக்குட்டியின் மனதில் வேரூன்றித் தழைத்திட இந்நிகழ்ச்சி ஒரு காரணமாய் அமைந்தது.

    இளமைக்கல்வி

    பொது கல்விக்கூடங்கள் இல்லாத காலச்சூழலில் முத்துக்குட்டியின் இளமை வாழ்வு தொடங்கியது. ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கும், கல்விக் கூடங்களுக்கும் இருந்த இடைவெளி மிக அதிகமாகவே இருந்தது. ஏனெனில் தொழில் வர்க்கத்தினருக்கு கல்வி கற்கும் உரிமை வழங்கப்படவில்லை. உயர்சாதிக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில், இவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கோவிலையடுத்து மேட்டுக் குடியினரின் கல்விக் கூடங்கள் அமைந்திருந்தபடியால், அவற்றை கீழ்த்தட்டு மக்கள் பார்ப்பதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் தாம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி அறிவை வளர்க்க முயற்சித்தன. கிறிஸ்தவ சமய போதகர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக சாதி பேதம் கற்பிக்காது சில பள்ளிக்கூடங்களை நிறுவி நடத்தி வந்தனர்.

    சிறுவனான முத்துக்குட்டிக்கு அங்கு சென்று பயில வாய்ப்புக் கிட்டவில்லை. திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றிலேயே கல்வி பயின்றார். சட்டம் என்ற மனிதன் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளையும், கணக்கு வாய்ப்பாடுகள், பண்டைய புராணங்கள், காவியங்கள், நீதிநூல்கள் முதலியவற்றையும் கசடற கற்றறிந்தார். ராமாயண, மகாபாரத இதிகாசங்கள் திருமாலின் அவதாரங்களின் நோக்கத்தினை அவருக்கு எடுத்தியம்பின. அன்றாடத் தெருக்கூத்து நிகழ்ச்சியில் தலையாய இடம் வகித்த அரிச்சந்திரனின் கதை உண்மையின் உயர்வினை முத்துக் குட்டிக்கு தெளிவு படுத்தியது. எல்லா வுயிர்க்கும் பிறப்பொக்கும் நிலையையும், ஒரு நல்லரசு எங்ஙனம் செயல்பட வேண்டும் என்பதையும், மக்கள் எவ்விதம் வாழ வேண்டுமென்பதையும், திருக்குறளில் இருந்து அறிந்து ஒரு புதிய எழுச்சியை பெற்றார்.

    பெற்றோரை போன்று முத்துக்குட்டியும் சிறந்த திருமால் பக்தராக விளங்கினார். இந்து சமய பக்தி இலக்கியங்களையும் துதிப் பாடல்களையும் மிகுந்த ஆர்வமுடன் கற்றார். தனது வீட்டிலேயே திருமாலைப் போற்றி, பீடம் அமைத்து, தினந்தோறும் வழிபாடு நடத்தி வந்தார். அறிவு வளர்ச்சியுடன், ஆன்மீக உணர்வும் கொண்டு, நல்ல உடற்பயிற்சியும் செய்து, சொல்லில் மட்டும் வல்லவராக அன்றி மல்யுத்தத்திலும் தேர்ச்சியுடன் திகழ்ந்தார்.

    இளமைப்பருவத்திலேயே தனது செயல்களில் ஒரு மகானுக்குரிய அறிகுறிகளையும், தனித்தன்மைகளையும் கொண்டு விளங்கினார். 'உழைத்தே உண்ண வேண்டும்' என்னும் உயரிய கொள்கையுடன், தொழில்கள் பலவற்றை கற்று, உற்றார் உறவினரை பேணி வாழ்ந்தார். மேலும், சாதி என்னும் குறுகிய எல்லைக்குள் நின்று விடாது எச்சாதியாருக்கும் நல்லவர் எனவே வாழ்ந்து வரலானார்.

    கொண்டார் கற்றோரைத் தேடித் தொடர்பு கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏழைகளிடம் அன்புடன் பழகினார். அவர்களின் ஏழ்மையை போக்குவதில் பேரார்வம் கொண்டார். நல்லவர்களை தோழமையோடு நேசித்தும், தீயோர்களை வெறுத்தும் நல்லொழுக்கம் உடையவராய் விளங்கினார். அறம் செய்வதில் மிக்க விருப்பம் கொண்டவராய் இருந்தார். தனது சிறிய வருவாயில் ஒரு பகுதியை எளியோர்க்கு ஈந்தார்.

    எங்கும் பேர் கேட்க வைப்பான்...பல்லக்கு ஏறிடுவான் பார்முழுதும் ஆண்டிடுவான் எல்லோர்க்கும் வல்லவனாய் இவன் சமைவான் என்று சொல்லி எல்லோரும் கொண்டாடிடும் வண்ணம் இன்பமுடனே வளர்ந்தார்.

    அகவாழ்வு

    1825-ம் ஆண்டு தனது 17-வது அகவையில் பரதேவதை என்னும் நங்கையுடன் கருத்தொருமித்துத் தனது வாழ்வை இணைத்துக் கொண்டார். இருவரும் அகமகிழ்வுடன் வாழ்ந்த போதிலும், அகிலம் இதைப்பற்றிக் கூறுகையில் "நாணமில்லாமல் நாயகம் போல் வளர்ந்தார்" எனவும், "முன்னாள் அமைத்த ஊழ்விதி" எனவும் குறிப்பிடுகின்றது.

    இவ்வாறு மன்றறிய மங்கையோடு வாழ்க்கை நடத்தி வருகையில் தனது இருபத்திரண்டாவது வயதில் கடுமையான சரும நோயால் அல்லலுற்று வருந்தினார். நோய் தீர்க்க மருத்துவர்கள் பலரை நாடியும் நோயின் கடுமை குறையவில்லை. எனவே தனது வழிபாடு கடவுளான திருமாலிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு கவலையின்றி இருந்தார். ஒரு வருடம் நோயிலேயே தனது வாழ்வைக் கழித்தார். நோய் தீராது இருந்தமையால், தாங்கொணாத் துயருற்ற வேளையில் அவரது அன்னையின் கனவில் திருமால் தோன்றி 'இவ்வருடம் மாசி பத்தொன்பதாம் நாள் திருச்செந்தூரில் திருவிழா நடைபெற இருக்கிறது. அங்கு உன் மகனை அழைத்து வருவாயானால் எல்லோருமறிய இப்பிணியும் தீர்த்து நல்ல பேறும் கொடுப்போம்'" என அருளிச் செய்தார்.

    கனவு கண்ட தாயார் மனம் மகிழ்ந்து, 'இக்கனவு கண்டதற்கு இங்கிருந்து செந்தூர் போய் வந்தால் நோய் தீரும்' என உற்றாரிடம் உரைக்க எல்லோரும் கேட்டு அகமகிழ்ந்து, 'செந்தூர் செல்வதே நன்று' எனப் பயணத்திற்கு ஆயத்தமாயினர். துணித்தொட்டிலில் முத்துக்குட்டியைக் கிடத்தி இருவர் தூக்கி வர, உற்றாரும் உறவினரும் சுமார் 80 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருச்செந்தூருக்கு நடைப்பயணத்தை மேற்கொண்டனர். செந்தூர்ப்பயணம் முத்துக்குட்டியின் உடல் நோயைக் குணப்படுத்தும் என உடன் சென்றவர்கள் எண்ணினார்களே ஒழிய, தென்திருவிதாங்கூரில் அந்நிகழ்ச்சி ஒரு திருப்பு முனையாக அமையக்கூடும் எனவோ, ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் புரையோடிய பிணிகளை அகற்றிப்புதுமைகள் பலவற்றை படைக்கும் அருமருந்தாக அமையும் எனவோ யாரும் எதிர்பார்க்கவில்லை. செந்தூரில் நடந்த அற்புதம் என்ன என்பதை வரும் தொடரில் காண்போம்.

    Next Story
    ×