search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அண்ணாச்சி சொன்னது: அதில் அர்த்தம் உள்ளது!
    X

    அண்ணாச்சி சொன்னது: அதில் அர்த்தம் உள்ளது!

    • அண்ணாச்சி வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.
    • சற்று நேரம் மவுனமாக இருந்து பாருங்கள். உங்கள் செவிகள் கூர்மையாகும்.

    'நாம் இன்று என்ன நிலையில் இருக்கின்றோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.'

    -புத்த பகவான்

    அது ஒரு நீண்ட தெரு. அந்தத் தெருவின் எல்லையில் ஒரு பலசரக்குக் கடை. நிறைய வாடிக்கையாளர்கள். கடைக்கார அண்ணாச்சி மிகவும் கெட்டிக்காரர்.

    காலை ஆறு மணிக்குக் கடையைத் திறந்துவிடுவார். இரவு பத்து மணிவரை அதே உற்சாகமான உழைப்பு. அந்தக் கடையின் பக்கவாட்டில் உள்ள சுவரை ஒட்டி, நான்கு புறமும் கம்பு நட்டி தென்னங்கீற்றினால் கூரை வேயப்பட்ட ஒரு சிறிய குடில். அதில்தான், காலியான அட்டைப் பெட்டிகள் மற்றும் கடைக்குரிய சில பொருட்களைப் போட்டு வைத்திருப்பார் அண்ணாச்சி. அந்தப் பகுதியைச் சார்ந்த ஏழெட்டு இளைஞர்களுக்கு அந்தக் குடில்தான் சரணாலயம்.

    அவர்களில் பாதிபேர் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள். மீதி நபர்கள் படிப்பைப் பாதியில் விட்டவர்கள். நாள்முழுக்க அவர்களின் பொழுதுபோக்கு அந்தக் குடிலில்தான்.

    காலை பத்து மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து வந்துவிடுவார்கள். ஒரே அரட்டைக் கச்சேரி. மதியம் ஒரு மணிக்குச் சாப்பிடச் செல்வார்கள். மீண்டும் மூன்று மணிக்கு வந்துவிட்டால், இரவு கடை மூடும் வரை அங்குதான். சிகரெட், முறுக்கு, சர்பத் என ஒவ்வொருவராக அடுத்தடுத்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். சம்பாதிக்காமலேயே பெற்றோரின் உழைப்பைச் சுரண்டும் ஊதாரிப் பிறவிகள்.

    கையில் காசில்லை என்றால், அண்ணாச்சியிடம் கடன்சொல்லி வாங்குவார்கள். அவர்கள் அங்கு வருவதும், நாள்முழுக்க உட்கார்ந்து அரட்டை அடிப்பதும் அண்ணாச்சிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தடுக்கவும் முடியவில்லை. அவ்வப்போது மறைமுகமாகச் சொல்வார். ஆனால் எடுபடாது.

    வாடிக்கையாளர்கள் அதிகம் வராத மத்தியான வேளைகளில், கடைக்கு வெளியே வந்து காற்றாட சிறிது நேரம் உட்கார்ந்திருப்பார். அவர் பேச வாய்திறந்தால், 'அறிவுரை வேண்டாம் சாமி' என்று அந்த இளைஞர்கள் தங்கள் காதுகளைப் பொத்திக் கொள்வார்கள்.

    அன்று வழக்கம்போல் இளவட்டங்களின் கூடுகை. அரட்டை. அண்ணாச்சிக்குச் சங்கடமாக இருந்தது.

    அப்போது அவர்களில் ஒருவன், 'அண்ணாச்சி, கிங்ஸ் ஒரு பாக்கெட் குடுங்க. இப்ப காசு இல்ல. கடன் கணக்குல எழுதிக்கோங்க' என்றான்.

    அந்நேரம் மளிகைப் பொருட்கள் வாங்க வந்த ஓர் இளம்பெண், தனக்கு வேண்டிய பொருட்களைப் பட்டியலிட அண்ணாச்சி விறுவிறு என்று எடுத்து வைத்தார்.

    அந்த இளைஞன் மீண்டும், 'அண்ணாச்சி கிங்ஸ் ஒரு பாக்கெட்' என்றான்.

    கவிஞர் தியாரூ

    'ஏற்கனவே கடன் நிறைய இருக்கு' என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் வாங்கிய பொருட்களுக்கான விலையை மடமடவென மனதிற்குள்ளேயே கணக்கிட்டு மொத்த தொகையைச் சொன்னார் அண்ணாச்சி.

    தன்னுடைய மானத்தை வாங்கிவிட்டாரே என்ற கோபம் அவனுக்கு. அந்தப் பெண்ணின் முன் அவரை அவமானப்படுத்திவிட எண்ணினான். கேலிச் சிரிப்புடன் கேட்டான்.

    'அண்ணாச்சி, மூணாம் வகுப்புக்கூட படிக்காமலேயே, இப்படி பட்பட்னு கணக்குப் போடுறீங்களே. எங்களை மாதிரி படிச்சி பட்டதாரி ஆகியிருந்தா இப்ப எப்படி இருப்பீங்க?'

    'உங்களை மாதிரி சிகரெட் கடன் வாங்கிட்டு இருப்பேன்' என்று நறுக்கென பதிலளித்தார் அண்ணாச்சி.

    அந்த இளைஞன் வெட்கத்தில் திக்குமுக்காடினான். பொருட்களை வாங்கிய அந்த இளம்பெண் 'க்ளுக்' என்று சிரித்தபடி சென்றாள். இளைஞர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

    அவர்கள்முன் அண்ணாச்சி கம்பீரமாக நின்றார். நக்கலாகக் கேள்வி கேட்ட அந்த இளைஞனின் தோளைச் செல்லமாகத் தட்டினார்.

    'தம்பி, நானும் உங்களை மாதிரி வாலிப வயசைக் கடந்து வந்தவன்தான். எங்க அய்யா ஒரு சாதாரண விவசாயி. நான் ரொம்ப படிக்கலேன்னாலும் பத்து வரை படிச்சிருக்கேன். அதுக்கு மேல படிக்க வசதியில்ல. ஆனா நான் சோர்ந்து போகல. விவசாயத்துல கவனம் செலுத்தினேன். ஒரு பொழுதையும் வீணடிக்காம கடினமா உழச்சேன். இப்ப எங்க கிராமத்துல எனக்குப் பத்துப் பதினைஞ்சி ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம் நடக்குது.

    என் புள்ளைங்க படிப்புக்காக இந்த ஊருக்குக் குடிவந்தோம். மளிகைக்கடை ஆரம்பிச்சேன். நேர்மையான வியாபாரம். கவுரவமான வாழ்க்கை. பத்து பைசா யார்கிட்டேயும் கடன் வாங்கினதில்ல. காலத்தின் அருமையையும் நம்மோட நிலைமையையும் நாம உணர்ந்தாதான் வாழ்க்கையில் முன்னேற முடியும். தன்னை உணராதவனை இந்த உலகம் ஒதுக்கித் தள்ளிடும்' என்று சொல்லிவிட்டு, அண்ணாச்சி வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.

    அந்த இளைஞர்கள் எதுவும் பேசாமல், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தன்னை உணர்தலே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. தன்னை உணர்ந்தவன், தன் பலம் பலவீனம் இரண்டையும் அறிவான். தன் கடமைகளை அறிவான். அவன்தான் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு கரையேறுகிறான்.


    'தன்னை உணர்தல்' என்றால், ஞானியர்க்கு உரிய விஷயம் என்று சிலர் எண்ணிக் கொள்கிறார்கள். அப்படி ஒன்றும் அல்ல. நம்மைப் பற்றிய ஒரு தெளிவு. அவ்வளவுதான், தன்னை அறிதல்.

    இன்று பலரின் வாழ்வில் எப்போதும் போராட்டம். வாய்திறந்தால் சலிப்பான வார்த்தைகள். எதிர்மறையான சிந்தனைகள். அப்படி ஆகிவிடுமோ இப்படி ஆகிவிடுமோ என்ற பயம். காரணம் என்ன? அவர்கள் தங்களைத் தாங்களே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான்.

    லோன் கிடைக்கிறது என்பதற்காக இரண்டு கார்களை வாங்கி, வீட்டின்முன் நிறுத்துவதில் என்ன பெருமை. முதலில், அவற்றிற்கான தேவை இருக்க வேண்டும். கடனைச் செலுத்துவதற்குப் போதுமான வருமானம் வேண்டும். பராமரிப்பதற்கு வசதிகள் வேண்டும். எவ்வித சிந்தனையுமின்றித் தன்போக்கில் எதையாவது செய்கின்றவன் எப்போதுமே பிரச்சனைகளுக்குள் இருக்கின்றான்.

    சிலர் முடிவெட்ட சலூனுக்குப் போனால், வேலை முடிந்ததும் வீட்டிற்குத் திரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு பத்திரிகையையும் வரிவிடாமல் வாசிப்பார்கள். வருவோர் போவோரிடமெல்லாம் அரசியல் பேசுவார்கள். வீட்டிலிருந்து போன் வந்த பிறகுதான், 'அய்யோ, ஆபீசுக்கு கிளம்பணுமே' என்று தலைதெறிக்க ஓடுவார்கள். அவர்கள் காலத்தைப் பற்றிய உணர்வு இல்லாதவர்கள்.

    தம்மைப் பற்றிய தெளிவு இருப்பவர்களுக்குதான் கால நேரத்தைப் பற்றிய உணர்வு இருக்கும். வாழ்க்கையில் தோல்வியுற்றுத் துவண்டு கிடப்பவர்களிடம் பேசிப் பாருங்கள். எந்தவித பிரக்ஞையுமின்றி உளறிக் கொட்டுவார்கள்.

    தன்னை அறியாதவன் நாலு பேருக்கு ஆலோசனை சொல்லத் தொடங்கினால் எப்படி இருக்கும்! அப்படிச் சிலர் இருக்கிறார்கள். பிரச்சனை எழுகிற இடங்களில் 'ஆலோசனை சொல்கிறேன் பேர்வழி' என்று நுழைந்துவிடுவார்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளித் தூவி, பிரச்சனையை நான்கு மடங்காக்கிய பின்னர்தான் கிளம்புவார்கள். அவர்களின் வாழ்க்கையைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரியும். அவர்கள் ஒன்றிலுமே தேறாதவர்கள் என்கிற உண்மை.

    'ஆலோசனை' என்பது இன்று மிகப்பெரிய வியாபாரம். ஆளாளுக்குக் களத்தில் இறங்கிவிடுகிறார்கள். வேறு வேலை ஏதும் கிடைக்கவில்லையா, இதுதான் தொழில். ஆனால், அது எத்தனை ஆபத்தான விஷயம்!

    அடிப்படை ஞானம் அவசியம். நம்மை நாம் உணர்வதுதான் அடிப்படை ஞானம். அந்தத் தெளிவு நமக்கு இருக்குமெனில், அதுதான் மிகப்பெரிய பலம். ஆலோசனைக்காக யாரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

    நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் என்பதை, மற்றவர்கள் சொல்லி நாம் அறிவது அவமானம். அதற்கு இடம் கொடுத்துவிட்டால், அவர்கள் நம் தலைமீது ஏறி உட்கார்ந்துவிடுவார்கள். அந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்குதான் அடிப்படை ஞானம் நமக்கு அவசியமாகிறது.

    ஞானியர் யார்? வானத்தில் இருந்து வந்தவர்களா? இல்லை! நம்மைப்போல் இம்மண்ணில் பிறந்தவர்களே. ஆனால், தங்களை உணர்ந்தவர்கள். வாழ்வின் சூட்சுமங்களை அறிந்தவர்கள். அந்தத் தெளிவும் புரிதலும் இருக்குமெனில், நாமும் ஞானியர் அல்லவா!

    புகழ்மிக்க ஒரு ஜென் குரு போதித்துக் கொண்டிருந்தார். அவரின் சீடர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்களும் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும் மிகுந்த கீழ்ப்படிதலுடன் அமர்ந்து, குருவின் போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    ஒரு குறும்புக்காரன் திடீரென எழுந்து நின்றான். 'கிழவரே, உமக்கு மரியாதை கொடுப்பவர்கள் வேண்டுமானால், உங்கள் பேச்சுக்குக் கீழ்ப்படிந்து நடக்கலாம். ஆனால், மரியாதை என்றாலே என்னவென்று எனக்குத் தெரியாது. என்னை உங்களால் கீழ்ப்படிய வைக்க முடியுமா?' என்று திமிருடன் கேட்டான்.

    'முடியுமே! இப்படி அருகில் வாருங்கள், செய்து காட்டுகிறேன்' என்று நிதானமாகச் சொன்னார் குரு.

    அவன் எழுந்து அருகில் வந்தவுடன், 'இப்படி நேராக வாருங்கள்' என்றார். நேராக வந்தவுடன், 'இப்படி வலதுபுறம் வாருங்கள்' என்றார். அவன் வலதுபுறம் வந்ததும், 'இடதுபுறம் வாருங்கள், செய்து காட்ட வசதியாக இருக்கும்' என்றார்.

    அவன் இடதுபுறம் வந்ததும், 'நான் சொல்வதைக் கேட்டு அப்படியே கீழ்ப்படிந்து நடக்கிறீர்களே. நல்லது, போய் அமர்ந்து போதனையைக் கேளுங்கள்' என்றார் குரு.

    கூட்டம் கைகொட்டிச் சிரித்தது. அவன் தன்னை உணர்ந்தான். கர்வம் அழிந்தது.

    ஒழுக்கம் என்பது திணிக்கப்படுவதல்ல. அது ஒருவனின் தன்னுணர்வில் இருந்து எழுவது. அந்த விழிப்புணர்வுடன் செயல்படுகின்றவன், செய்வது எதுவோ அது சரியானதாகத்தான் இருக்கும். ஏனெனில், தன்னுணர்வோடு இருப்பவன் தவறு செய்ய மாட்டான்.

    சற்று நேரம் மவுனமாக இருந்து பாருங்கள். உங்கள் செவிகள் கூர்மையாகும். பார்வைகள் புதுவிடியல்போல் தெளிவாகும். தன்னுணர்வு பளிச்சிடும். உங்கள் வாழ்க்கை மேன்மையுறும்.

    Next Story
    ×