search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அனுபவம் சிறந்த ஆசான்
    X

    அனுபவம் சிறந்த ஆசான்

    • அறிவைப் பெறுவதற்காகவே அன்றாடத் தேடல்களில் மனிதன் அலைந்து கொண்டிருக்கிறான்.
    • கல்வி வாய்ப்புக்களால் நாம் பெறுகிற அறிவு படிப்பறிவு ஆகும்.

    அனுபவ அறிவு குறித்துத் தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்.

    வாழ்க்கையில் நமது செயல்களில் நாம் அடைவது வெற்றியோ தோல்வியோ அந்த அனுபவம் கொண்டுவந்து சேர்க்கும் படிப்பினைகள் மதிப்புமிக்கவை; இன்னும் சொல்லப்போனால் அனுபவங்களே ஒரு பொருளின், அல்லது ஒரு செயலின் அல்லது ஒரு மனிதரின் அல்லது ஓர் அமைப்பின் உண்மைத் தன்மைகளை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்ள உதவுபவை.

    அறிவைப் பெறுவதற்காகவே அன்றாடத் தேடல்களில் மனிதன் அலைந்து கொண்டிருக்கிறான். பணமாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் மகிழ்வாக இருந்தாலும் வாழ்வாக இருந்தாலும் தான் தேடுவது எதுவோ அதுகுறித்த அறிவைப் பெற்றுக்கொள்வது தான் முதன்மைத் தேவையாக இருக்கிறது. எதைப்பற்றியும் அறிந்துகொள்வது அறிவு; அறிந்துகொள்ள மறுப்பதும் அறியாமல் இருப்பதும் அறிவற்ற செயல்; இது அறியாமை எனப்படும். அறியாமையில் மூழ்கிக் கிடப்பவரை உலகம் 'முட்டாள்' என்று பழித்து ஒதுக்கும்.

    ஒரு பொருண்மை குறித்த புரிதலை முதன்முதலாக நாம் அறிந்துகொள்ளும்போது நான் அதுகுறித்த அறிவைப் பெற்றவனாகவும் அறிவை உடையவனாகவும் ஆகிவிட்டேன் என்று பறைசாற்றி மகிழ்கிறோம். ஆனால் உண்மையில் இதுவரை காலமும் அந்தப் பொருண்மை குறித்து எதுவும் அறியாத முட்டாளாக நாம் இருந்திருக்கிறோம் என்பதல்லவா உண்மை?; இதற்காக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?. இங்கே ஒவ்வொரு அறிதலைப் புதிதாகப் பெறும்போதும், நாம் அத்துறையில் அறிவற்றவராக இதுவரை இருந்திருக்கிறோம் என்று தன்னடக்கத்தோடு ஒத்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் பெறுகிற அறிவு நம்மைத் தலைக்கனம் அற்றவராக உருவாக்கும்.

    படிப்பறிவு பட்டறிவு எனும் இருவகை நிலைகளிலும் மனிதர் அறிவைப் பெறுகின்ற வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர். கல்வி வாய்ப்புக்களால் நாம் பெறுகிற அறிவு படிப்பறிவு ஆகும். இது வயதுக்கேற்ற கல்வியறிவை தகுதிவாய்ந்த நிறுவனங்கள் வாயிலாக போதிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெறுகின்ற கல்விக்கு அடையாளமாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, உரிய அறிவுத் துறைகளில் மதிப்பெண்களும் சான்றிதழ்களும் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. இவர் குறிப்பிட்ட அறிவுத்துறையில் அறிவாளர் என்பதற்கு அந்தச் சான்றிதழ்களே அடையாளம் காட்டிநிற்கின்றன. இது படித்துப் பெறுகிற படிப்பறிவினால் உண்டாகும் அறிவு.

    இன்னும்பலர் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்நாளில் கல்விநிறுவன நிழல்களில் மழை வெயிலுக்குக்கூட ஒண்டியிருக்க மாட்டார்கள்; இன்னும் சிலர் படிப்புகளை அரைகுறையாக நிறுத்திவிட்டுத் தொழில்களில் மும்முரமாக இறங்கி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் சென்று வாழ்வியலில் எதுகுறித்துக் கேட்டாலும் துல்லியமாகக் கருத்துக் கூறும் அறிவுத்திறத்தை இவர்கள் உடையவர்களாக இருப்பார்கள். படிப்புகளில் பொறியியல் மருத்துவம் முதலான அறிவியல் நுட்பத்துறை அறிவு வேண்டுமானால் இவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சிரமப்படாமல் அதன் தன்மைகளைக் கூறிவிடுவதில் அனுபவஅறிவு உடையவர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். படித்த வக்கீல்களுக்கும் பிடிபடாத சில சட்ட நுட்பங்களும், மருத்தவர்களையே திண்டாட வைக்கும் சில நோய்க் காரணங்களையும் அனுபவ அறிவு வாயிலாகச் சொல்லிவிடக்கூடிய புத்திசாலிகளும் நம்மிடையே உண்டு.

    பெரிய பெரிய எம்ஆர் ஐ ஸ்கேன்களின் மூலமாகவும்கூடக் கண்டறிய முடியாத, கண்டறிந்தாலும் குணப்படுத்தச் சிரமப்படுகிற நோய்களை, நமது வீடுகளில் நாம் பயன்படுத்துகிற சுக்கு மிளகு திப்பிலி போன்ற மருந்துப் பொருள்கள் மூலமாகவும், நடந்து செல்லும்போது அன்றாடம் நம் கால்களில் மிதிபடுகிற துளசி, பச்சிலை, முடக்கத்தான் போன்ற மூலிகைச் செடிகள் வாயிலாகவும் குணப்படுத்தி விடுகிற அனுபவ அறிவு பலபேருக்கு இருக்கிறது.

    சுந்தர ஆவுடையப்பன்


    அனுபவ அறிவே சிறந்தது என்பதுபோல சில தருணங்களில் திகழ்ந்தாலும் ஏட்டுக்கல்வி சொல்லித் தருவதும் ஒருவகையில் கைதேர்ந்த அனுபவ அறிவாளிகளின் அறிவுச் சிந்தனைகளையே ஆகும். அதனைக் கற்றுத் தெளிவது என்பது வேறு; நடைமுறை வாழ்வில் பயன்படுத்திப் பயன்காண்பது என்பது வேறு. ஏட்டுக்கல்வியில் பெற்ற அறிவை அன்றாடப் பணிகளில் உபயோகப்படுத்தி வெற்றி காண்பதற்கு அறிவைத் தாண்டிய புத்திசாலித்தனம் தேவை. அந்தப் புத்திசாலித்தனத்தை அனுபவமே காலப்போக்கில் நமக்குக் கற்றுத்தரும்.

    எனக்குத் தெரிந்த ஒரு ஆலைஅதிபர்; படிப்பறிவு இல்லாதவர்; படிப்பறிவுள்ள சிலரை மேலாளராகப் போட்டு ஆலையைத் திறம்பட நடத்தி வந்தார். படித்தவர்களிடமிருந்து இவர் பெற்றுக்கொண்ட அறிவை விட இவரிடமிருந்து படித்த அலுவலர்கள் கற்றுக்கொண்ட அனுபவ அறிவே அதிகம். தன்னுடைய மகனிடம் ஆலை நிருவாகத்தை ஒப்படைப்பதற்குமுன் அந்தப் படிக்காத முதலாளி ஓர் அற்புதமான உபாயத்தைக் கடைப்பிடித்தார்.

    தன்னுடைய மகன் படிப்பில் காட்டிவரும் ஆர்வத்தை ஊக்குவிக்க, அவனைப் பொறியியல் படிக்கவைத்துப் பட்டதாரியாக்கினார். படிப்பு முடிந்ததும் நேரடியாக மகனை ஆலைக்கு அழைத்துவந்து தன்னுடைய முதலாளி இருக்கையில் அமர வைத்து விடவில்லை. தன்னுடைய ஆலையைப் போலவே கோயம்புத்தூரில் இயங்கிவரும் நண்பரின் ஆலை ஒன்றிற்குத் தொழிலாளியாக வேலைபார்க்க அனுப்பி வைத்தார். தானொரு பொறியியல் பட்டதாரி என்பதும், இன்னொரு ஆலை முதலாளியின் மகன் என்பதும் உடன் பணியாற்றும் தொழிலாளி எவருக்கும் தெரியக்கூடாது என்கிற நிபந்தனையோடு அனுப்பி வைக்கப்பட்டார். அதுமட்டுமல்ல, மகன் தொழிலாளியாக வேலைபார்க்கும் ஆலையின் முதலாளி எந்த வகையிலும் எந்தச் சலுகையும் மகனுக்குக் காட்டிவிடக் கூடாது என்கிற கூடுதல் நிபந்தனையோடும்.

    இரண்டாண்டுகள் அடுத்தவர் ஆலையில் சாதாரணத் தொழிலாளியாக அனுபவப்பாடம் கற்றுக்கொண்ட அந்த இளைஞர் தொழிலாளிகள் பக்கமிருக்கும் உழைப்பின் தன்மைகளை நன்கு புரிந்துகொண்டார். முதலாளிகளின் இடைவிடா ஊக்கமும் முயற்சியும் எப்படி ஆலைகளைத் திறம்படச் செயல்பட வைக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டார். கல்விநிறுவனத்தில் கற்ற படிப்பறிவின் நுட்பம், ஆலையில் பெற்ற அனுபவ அறிவின் பாடம் இவ்விரண்டும் கைகோர்க்கத், தனது சொந்த ஆலையை உற்பத்தித் திறம்மிக்க மனிதநேய ஆலையாக அந்த இளைஞர் மாற்றிக் காட்டினார்.

    மனிதர்கள் அனைவருமே சமபங்கு மூளையுள்ளவர்களாகவே படைக்கப்படுகின்றனர். சிலர் பயன்படுத்தும் தன்மையினால் சிறந்த அறிவாளிகளாகப் புகழுடன் வாழ்கிறார்கள். 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்பார் நமது வள்ளுவப்பேராசான். அறிவுடையார் ஆவது அறிவார் என்பது மட்டுமல்லாமல், இக்கட்டு நேருகின்ற தருணங்களிலெல்லாம் அவற்றிலிருந்து விடுபட்டு வெளியேற உதவும் கருவியாகவும் அறிவு காக்கிறது. இந்த அறிவென்னும் ஞானப்பண்பை நாம் அறிவாளர்களின் ஏடுகள் கொண்டும் கற்றுப்பெறலாம்; ஆழ்ந்த அனுபவங்கள் வழியாகவும் பெற்றுத் தேரலாம். அறிவைக் கூர்மைப் படுத்துவதும், ஆழ்ந்திருக்கும் நுட்பத்தை உணர வைப்பதுமான புத்திசாலித்தனம், தொடர் அனுபவப் பயிற்சியாலேயே கைவரும்.

    ஓர் அரசன், அறிவுக்கூர்மையோடு ஆட்சி நிருவாகம் பண்ணுவதில் கெட்டிக்காரர். ஆனால் அவருக்கு மகனாகப் பிறந்திருக்கும் ஒரே வாரிசோ அறிவுபெறுவதில் ஆர்வம் காட்டாத முட்டாளாகத் திகழ்ந்தார். நாட்டிலுள்ள சிறந்த குருமார்களையெல்லாம் அழைத்து, அவர்கள் விரும்புகிற சன்மானங்களையெல்லாம் அளித்துக் கல்விதரச் செய்தார். ஆனாலும் கல்வி என்பது அந்த இளவரசருக்கு வேப்பங்காயாகக் கசந்தது. இப்படியே போனால் மகனின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் சூனியமாகிப் போய்விடுமே என்று அரசர் வருந்தத் தொடங்கினார்.

    அரசரின் வருத்தத்தை அறிந்த மூத்த அமைச்சர் ஒரு யோசனையுடன் வந்தார். "அரசே! நமது அண்டை நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. கல்விக்கும் கண்டிப்புக்கும் பெயர்போன பல்கலைக்கழகம். அங்கு குருகுலக் கல்வியாக ஓர் ஐந்தாண்டுப்படிப்பில் நமது இளவரசரைச் சேர்த்துவிட்டால், அவர் நல்லமுறையில் கல்விகற்றுத் திரும்புவது திண்ணம்" என்று கூறினார். மேலும் அந்தப் பல்கலைக்கழத்தில் படிப்புக்காகச் சேருபவர்கள், முழுப்படிப்பையும் படித்து முடித்த பிறகே வீடு திரும்ப வேண்டும்; என்பதையும் அமைச்சர் எடுத்துரைத்தார். இளவரசர் உடனடியாக அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்.

    ஐந்தாண்டுகள் கழிந்தன; இளவரசர் வெற்றிகரமாகப் படிப்பை முடித்து நாடு திரும்பினார். அரண்மனையில் கோலாகலமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அரசர், உள்ளூர் அறிஞர் பெருமக்களெல்லாம் வந்திருந்து, தனது மகனின் கல்வியறிவு குறித்துப் பரிட்சித்துப் பார்க்கலாம் எனவும் அறிவித்திருந்தார். எல்லாரும் வந்தனர்; அறிஞர்களெல்லாம் பல்வேறு தளங்களில் அறிவு சார்ந்த கேள்விகளைக் கேட்டனர். அவர்களின் அத்தனை கேள்விகளுக்கும் வில்லிலிருந்து புறப்பட்டுவரும் அம்புபோல இளவரசர் பதிலளித்தார். அரசருக்குப் பெருமை பிடிபடவில்லை. நன்றியுணர்வோடு மூத்த அமைச்சரைப் பார்த்தார். இப்போது மூத்த அமைச்சர், இளவரசரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்." நான் எனது உள்ளங்கைக்குள் ஒருபொருளை மூடி வைத்திருக்கிறேன். என்னவென்று சொல்லுங்கள் இளவரசே!". அமைச்சர் தனது உள்ளங்கைக்குள் ஒரு மோதிரத்தை வைத்திருந்தார். இளவரசரும் நீங்கள் உள்ளங்கைக்குள் மறைத்து வைத்திருக்கும் பொருள் வட்டமானது; நடுவில் ஓட்டை இருக்கும்" என்றார். "ஆகா நெருங்கி வந்துவிட்டீர்கள்; பொருளின் பெயரைச் சொல்லுங்கள்" என்றார் அமைச்சர். நான் கற்ற கல்வி அடையாளம் தான் சொல்லும்; பொருளின் பெயரைச் சொல்லாது; இருந்தாலும் எனது சொந்த அறிவைப்பயன்படுத்திச் சொல்கிறேன், அது ஒரு வண்டியின் சக்கரம்" என்றார் இளவரசர்.

    அவ்வளவுதான். அவையே நொந்துபோனது; "உள்ளங்கைக்குள் வண்டிச்சக்கரமா?. இளவரசே! உங்கள் கல்வியறிவு அபாரம். ஏட்டுக்கல்வி சிறப்போ சிறப்பு; ஆனால் அனுபவக் கல்விதான் இன்னும் சீர்மைபெற வேண்டியிருக்கிறது" என்றார் அமைச்சர்.

    அனுபவம் என்றுமே சிறந்த ஆசான் தான்.

    தொடர்புக்கு 94431 90098

    Next Story
    ×