என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
தங்கத்தை பாதுகாப்போம்!
- தாலிக்கு தங்கமும், திருமணத்தில் மோதிரம் தங்கத்திலும் இருப்பது அவசியமாகக் கருதப்படுகின்றது.
- தங்கம் விற்கும் விலையினைப் பார்த்தால் பெண்ணைப் பெற்றவர்களுக்கு தலை சுற்றி விடுகிறது.
தங்கம்-இந்த வார்த்தையினை சொன்னாலே அனைவரின் முகத்திலும் ஒரு பரவசம், புன்முறுவல், மகிழ்ச்சி ஏற்படும். பல உணர்ச்சிகள் பொங்கும். அப்படியொரு ஈர்ப்பு சக்தி தங்கத்திற்கு உண்டு. தங்க நகை அணிவதில் நமது இந்திய பெண்களை மிஞ்ச முடியாது. சுமார் 13 சதவீதம் தங்கம் இந்திய பெண்களிடம்தான் இருக்கின்றது என்கின்றனர்.
நம் கலாசாரம், பாரம்பரியம் இவற்றில் தங்கத்திற்கு மிகப்பெரிய இடம் உண்டு. கடவுள் முதல், நம் மூதாதையர், தாய் வரை இன்று நாம் மற்றும் நம் பிள்ளைகள் (குறிப்பாக பெண்கள்) வரை தங்கம் இல்லாத ஒருவரோ, ஒரு விழாவோ பார்த்திருக்க முடியுமா? தங்கம் ஒரு பலம். பொருளாதார ரீதியாக மட்டும் இதனை கூறவில்லை. ஞானம், அறிவு இவற்றிற்கு கூட இந்த உலோகத்தினைக் குறிப்பிடுவர்.
பெண்களாக இருந்தால் ஒரு காதணி, ஒரு செயின், இரண்டு வளையல், மூக்குத்தி இவை அவசியம் என்பர். ஆண்கள் கழுத்தில் மெலிதான செயின், மோதிரம், கடுக்கன் இவற்றினை பயன்படுத்துவர்.
தாலிக்கு தங்கமும், திருமணத்தில் மோதிரம் தங்கத்திலும் இருப்பது அவசியமாகக் கருதப்படுகின்றது.
இன்றைய கால கட்டம் ரொம்பவே மாறி விட்டது. மணப்பெண் ஒரு நகை கடையே நடந்து வருவது போல் அலங்கரிக்கப்படுகின்றாள். விதவிதமான நிகழ்ச்சிகளாகக் கொண்டாடுகின்றனர். விதவிதமான அலங்காரங்களில் மணப்பெண் தேவதை போல் காட்சி அளிக்கின்றார். தவறேயில்லை. அவரவர் ஆசைக்கேற்ப நிகழ்த்துகின்றனர். காணக்கண் கொள்ளா காட்சியாகத்தான் இருக்கின்றது. கல்யாண வீடே இந்திர லோகம் போல் காட்சி அளிக்கின்றது. ஜொலிக்கின்றது. எல்லாம் சரி. இதனை எல்லாம் நல்ல கண்கள் மட்டுமா ரசிக்கின்றது? எத்தனை பொல்லாத திருட்டுக் கண்களும் பார்க்கின்றன. இதனாலேயே சதி திட்டங்களின் மூலம் கொள்ளைகள், மிரட்டல்கள், பணம் பறித்தல் போன்றவை நிகழ்கின்றன.
இது ஒரு புறம் இருக்க மற்ற பெண்களுக்கும் இது போல் தனக்கும் நடக்க வேண்டும் என்று தங்கத்தின் மீது ஆசை ஏற்படுகின்றது.
மாயை ஆட்டிப் படைக்கின்றது
மத்திய வகுப்பு பெண்களின் மனதினை இது சிதைக்கின்றது.
இன்றைக்கு ஒரு கிராம் தங்கம் விற்கும் விலையினைப் பார்த்தால் பெண்ணைப் பெற்றவர்களுக்கு தலை சுற்றி விடுகிறது.
வயிறு வாயினை கட்டி, மாதா மாதம் சிறுக சிறுக சேமித்து 1 சவரன், 2 சவரன் சேகரிக்கின்றனர். இதனை காதை அறுத்து, கழுத்தை அறுத்து, தலையில் அடித்து ஏன் கொலை கூட செய்து திருடர்கள் எடுத்துச் சென்று விடும் நிகழ்வுகளையும் அடிக்கடி செய்திகளாகப் பார்க்கின்றோம்.
இன்னமும் நம் நாட்டில் கல்யாணம் என்று பேச்சு வந்தாலே 'எத்தனை சவரன்' என்ற கேள்விதான் முதலில் வருகின்றது.
காவல் துறையினரும் பாதுகாப்பு அறிவுரைகளை கூறித்தான் வருகின்றனர்.
அவர்கள் அறிவுரையினையும், நாம் இன்னமும் பெற வேண்டிய விழிப்புணர்வு பற்றியும் பார்ப்போம்.
தங்கம் பாதுகாப்போம்
கல்யாணம், விசேஷம் என்று செல்லும்போது கவரிங் நகைகளை அணிந்து செல்வது சற்று சங்கடமாய் இருக்குமே என்று அனைவரும் முணுமுணுப்பர்.
சரிதான், உள்ளூருக்குள் என்றால் கூட பரவாயில்லை. வெளியூர் செல்ல வேண்டும் என்றால் கவலையுடன் இவைகளை எடுத்து சென்று பாதுகாத்துவருவதற்குள் போதும்... போதும் என்றாகி விடுகிறது. சரி வெளியூர் பயணம் செய்யும் போது என்னென்ன செய்ய வேண்டும்.
* முதலில் அளவான நகைகள் போதும். அண்டா, பக்கெட் சைசில் நகைகளை அணிந்து உங்கள் செல்வ வளத்தினை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
* இந்த நகைகளை வைப்பதற்கு என்றே முறைப்படுத்துதல் எனப்படும் வகையில் சிறு பெட்டிகள், துணியால் கூட இவை, உருவாக்கப்பட்டிருக்கலாம். இவற்றில் இதனை வைக்கும் போது நகைகள் சிதறாமல், தவறி கீழே விழாமல் இருக்கும். இதை உங்கள் ஹாண்ட் பேக் உள் அறையில் வைப்பது நல்லது.
* எடுத்து செல்லும் நகைகளை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்.
* ஜிப் பிய்ந்த அல்லது பழைய நைந்த பைகளை பயன்படுத்தாதீர்கள்.
* கண்ட இடங்களில் பைகளை வைக்கக் கூடாது.
* உங்கள் கண்காணிப்பில் பை இருக்கட்டும்.
* விழிப்புணர்வு தேவை.
* இரவு நேர பயணத்தினைத் தவிர்க்கவும்.
* சிலர் டிஜிட்டல் லாக் செய்வதும் உண்டு.
* நடந்து கொண்டே காதணிகளை அணிவதும், கழட்டுவதும் வேண்டாம். திருகாணி தேடுவது பெரிய வேலை. தொலைந்து போய் கிடைக்காவிட்டால் குறைந்தது இன்றைக்குத் தங்கம் விற்கும் விலையில் 10 ஆயிரம் ரூபாய் போனது போல் ஆகி விடும்.
* இந்த பாதுகாப்பான பையை பயன்படுத்துவதன் மூலம் நகைகள் சுருண்டு முடிச்சு விழாமல் இருக்கும் என்பதனையும் அறிய வேண்டும்.
* பையினை இரண்டு கைகளாலும் இறுக பிடித்து, பட பட வென்ற பார்வையோடு திருடர்களை அழைப்பதுப் போல் முழித்து எளிதாகச் சொல்லித் தர வேண்டாம். அமைதியாய் விழிப்புணர்வுடன் இருங்கள்.
* இழப்பு ஏற்பட்டால் உடனடியாக போலீசை அணுகவும்.
* இன்சூரன்ஸ் செய்பவர்களும் உண்டு. இது அனைவருக்கும் ஒத்து வருவதில்லை.
* தனித்து எங்கும் செல்வதனை தவிர்ப்பது நல்லது. முடிந்தால் பயணம் செய்யும் போது தங்க நகைகளை தவிர்த்து விடுங்கள்.
வீட்டில் இருக்கும் போது கூட மேஜை மீதோ, மேஜை டிராயரிலோ அக்கறையின்றி நகைகளை அப்படியே போடாதீர்கள். நீங்கள் நகையினை இழப்பது மட்டுமின்றி மற்றவர்களை தவறு செய்யவும் தூண்டுகிறீர்கள் என்பதனையும் கருத்தில் கொள்ளுங்கள். வீட்டில் பீரோவில் சாவியினை எப்போதும் தொங்க விடுவது கூடாது. பாங்கி லாக்கரில் உங்கள் நகைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
* வீட்டில் வைப்பதாக இருந்தால் உயர்ரக தீ விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு, டிஜிட்டல் லாக் முறையில் சிறிய பெட்டகங்களைப் பயன்படுத்தலாம்.
* பிறருக்கு வீட்டில் நீங்கள் பத்திரமாக தங்கம் வைத்திருப்பதனை சொல்ல வேண்டாம்.
* வீட்டில் கேமரா, அலாரம் இவற்றினைப் பொருத்தலாம்.
* வீட்டில் வைத்தாலும், வங்கி லாக்கரில் வைத்தாலும் முறையான கணக்கு விவரங்கள் இருக்க வேண்டும். இந்த விவரங்களை உங்கள் ஆடிட்டர் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
* உங்கள் தங்கத்தின் தரத்திற்கு வாங்கும் போதே ஆல்மார்க் தர சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த சான்றிதழ் நீங்கள் தங்கத்தினை விற்க நேர்ந்தாலோ, மாறுபட்ட டிசைன் நகை செய்ய முற்படும் போதோ முழு பணமும் குறைவின்றி கிடைக்க உதவும்.
* அடிக்கடி பாலிஷ் போட வேண்டும் என்று நினைத்த இடங்களில் நகைகளை கொடுக்காதீர்கள். மிருதுவான துணி, புதிய மென்மையான பல் துலக்கும் பிரஸ், அதிக காரமில்லாத மென்மையான சோப்பு கொண்டு சுத்தமாக துடைத்து மெல்லிய துணியில் சுற்றி வைக்கலாம்.
* தங்கத்தின் மீது அதிக சென்ட், லோஷன் போன்றவை படக்கூடாது.
ஆக தங்கத்தின் மதிப்பினை அறிவோம். தக்க முறையில் பாதுகாப்போம்.
* தங்கம் என்பது வளம், சொத்து, கவுரவம், மரியாதை, பலம் என பல குணங்களை சொல்லலாம்.
* காலம் காலமாக தங்கம் என்றாலே தனி மரியாதைதான்.
* சுமார் 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பண்டமாற்றுமுறை இருந்த போதும் பெரிய வியாபாரங்களில் தங்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
* அனைவராலும் விரும்பப்படும் உலோகம் இது, வீணாகாதது. புனிதமாய் கருதப்படுவது. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களை அளிப்பது.
* இதற்கு சமுதாயத்தில் முக்கிய பங்கு உண்டு. தாலி, கல்யாண மோதிரம் இவை தங்கத்தால் மட்டுமே அநேகமாய் செய்யப்படுகின்றன.
* தங்கம் என்று சொன்னாலே செல்வம், செல்வம், செல்வம் என்ற பொருள் கொண்டது எனலாம்.
* தங்க பல் என்பது அவரின் செல்வ நிலையினை காண்பிக்கின்றது என்பது மட்டுமல்ல. தங்க பல் கிருமி, ஆசிட் என பல பாதிப்புகளில் இருந்து காக்கின்றது என்பதற்காகவும் தங்க பல் கட்டிக் கொள்பவர்கள் உண்டு. இப்போது எல்லாம் நாகரீகம் கருதி இதனை தவிர்க்கின்றனர். தங்க பல் என்பது பார்ப்பதற்கு எளிதில் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
* செல்போன் உருவாக்கத்தில் கூட சிறிதளவு தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
* தங்கம் இருந்தால் ஒருவருக்கு வாழ்வில் கூடுதல் தன்னம்பிக்கை ஏற்படும்.
* பிளாட்டினமும் அதிக விலை கொண்டது. என்றாலும் உடனடியாக பணம் பெறுவது என்றால் அது தங்கத்தால் மட்டுமே முடியும்.
* தங்கம் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றது.
* தங்கம் இயற்கையாகவே ஒளியில் மினு மினுக்கும் தன்மை கொண்டது.