என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
உசுரே நீ தானே!... அத்தியாயம்-4
- ஒரு பைக் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பி பார்த்தனர்.
- மேரியின் அம்மா லிசாவின் முகத்தில் குழப்ப ரேகை கூடியது.
கடிதத்தைப் படித்து முடித்தவுடன் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல், அந்த கடிதத்தை நான்காக மடித்து, தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு எழுந்து, டைனிங் டேபிள் நோக்கி சென்றவர், தண்ணீரை எடுத்து குடித்தார். இதையெல்லாம் திறந்து இருந்த தனது ஜன்னல் கதவின் இடுக்கு வழியாக கவனித்துக் கொண்டிருந்தாள் திவ்யா.
மெதுவாக தொண்டையைக் கனைத்துக் கொண்ட திவ்யாவின் அப்பா, கிச்சன் பக்கம் திரும்பி, "ராஜேஸ்வரி!"- என அழைக்க.. அம்மா, என்னங்க என்று கேட்டபடி ஹாலுக்கு வர, "உன் பொண்ணு மேரியோட அண்ணன் டேவிட்டை விரும்புகிறாங்கிற விஷயம் உனக்கு தெரியுமா?"- என கேட்க, "மேரி வீட்டுக்கு போக வர இருப்பான்னு தெரியும். ஆனா டேவிட்டை பத்தி என்கிட்ட ஒரு நாள் கூட சொன்ன தில்லையே…"அம்மா 'அந்தர் பல்டி' அடித்தது திவ்யாக்கு திக் என்றது.
"சரி! அப்பா என்னதான் சொல்கிறார்.?'- என்று கூர்ந்து மீண்டும் கவனிக்க ஆரம்பித்தாள். வாசலுக்கு சென்று செருப்பை போட்டவர், அம்மாவை திரும்பிப் பார்த்து, "இனிமே அந்த மேரி பொண்ணு நம்ம வீட்டுக்கு வரக்கூடாது. திவ்யாவும் அவ வீட்டுக்கு போக கூடாது.
பாளையாங்கோட்டையில நான் ஒரு வரன் பார்த்திருக்கிறேன். இந்து பையன். கை நிறைய சம்பளம் வாங்குறான். நல்ல குடும்பம். அவனைத் தான் இவளுக்கு முடிக்கலாம் என்று இருக்கிறேன். உன் பொண்ணுகிட்ட சொல்லி வை"- என கூறியபடி வெளியேறினார் அப்பா.
"என்னம்மா... ஏதோ யோசனையில இருக்குற?" - அப்பா, தோளை தட்டவும் டக்குன்னு சகஜ நிலைக்கு வந்த திவ்யா," ஒண்ணும் இல்லப்பா...!" என்று கூற, இப்போது அவர்கள் போய்க் கொண்டு இருந்த டாக்ஸி, ஒரு வீட்டின் முன்னால் நின்றது.
"ஹோட்டல்ல டிபன முடிச்சிட்டு கார் ஏறுன உடனே, நேரா இங்க கொண்டு வந்து இருக்கேன்னு பாக்குறியாமா... இதுதான் நீயும் மாப்பிள்ளையும் இனிமே வசிக்க போற வீடு! அட்வான்ஸ் கொடுத்துட்டேன். வீட்டுக்கு வேண்டிய ஜாமான்கள் எல்லாம் எங்க சீரா இருக்கட்டும்ன்னு வாங்கி வச்சுட்டோம்..." என அப்பா சொல்ல,
தன் கல்யாணத்தை எதிர்த்த அப்பா, இப்போது இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் என்ற நெகிழ்ச்சியில் கண்கலங்கி திவ்யா நின்றாள். அப்போது... ஒரு பைக் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பி பார்த்தனர்.
அந்த வீட்டுக்கு சற்று தள்ளி பைக் நிறுத்தி இறங்கினான் பெருமாள். இவன் எதற்கு திரும்ப வந்தான்?- அத்தனை பேரும் ஷாக்காக, அவன் இவர்களை நோக்கி வருவதையே,பார்த்துக் கொண்டிருந்தனர்.
பெருமாள் இவர்களை நோக்கி வருவதை அனைவரும் ஷாக் ஆகி பார்த்துக் கொண்டிருக்க, அந்த சூழலிலும் பதட்டமே இல்லாமல், பெருமாள் வருவதையே பார்த்தபடி சகஜமாக நின்று கொண்டிருக்கும் தன் அப்பா ரங்கராஜனை பார்த்தாள் திவ்யா. அவளுக்கு தெரியும், அவளது அப்பாவை பற்றி!
'அவள், தான் டேவிட்டை காதலிப்பதாகவும், அவனைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்'- என்பதையும் கடிதம் மூலம் அப்பாவுக்கு சொன்ன போது, கடிதத்தைப் படித்து முடித்த அவளது அப்பா, 'பாளையங்கோட்டையில் ஒரு வரன் பார்த்து இருப்பதாக 'சொல்லிவிட்டு கிளம்பி போனார் அல்லவா? அவர் கிளம்பி போன அந்த நாள் தான், அவள் ஞாபகத்துக்கு இப்போது வந்தது.
"வணக்கம் சார்... இங்க தேவசகாயம்ங்கிறது...? அந்த வீட்டின் கிரில் கேட்டை பிடித்தபடி மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்து கேட்டார் திவ்யாவின் அப்பா ரங்கராஜன்.
"யாரு...?"- உள்ளே இருந்து வெளியே வந்த தேவசகாயம் வேற யாரும் அல்ல, திவ்யாவின் காதலன் டேவிட்டின் அப்பா.
"என் பேரு ரங்கராஜன்... திவ்யாவோட அப்பா!" என்று சொல்லவும், அடையாளம் கண்டு கொண்ட தேவசகாயம், "சார்... உள்ள வாங்க" என ஒரு அதிர்ச்சியும், ஆச்சரியம் கலந்த குரலில் உள்ளே அழைக்க, பேசும் குரல்கள் கேட்டு, உள்ளே இருந்து வந்தாள் மேரி.
அவளைப் பார்த்ததும் திவ்யாவின் அப்பா ரங்கராஜன், "நல்லா இருக்கியாமா மேரி?" எனக் கேட்க, மேரி தலையாட்ட "என்னமா திடீர்னு உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன் பாக்குறியா, நான் தான் உங்க அப்பாவை பார்த்து பேசிட்டு போலான்னு வந்தேன்"- கூறியபடி அந்த வீட்டிற்கு நுழைந்தார் ரங்கராஜன்.
"யாருங்க...?"- என கேட்டபடி வந்த லிசா, ஹாலில் அமர்ந்திருக்கும் ரங்கராஜனை பார்த்தவுடன் சற்று மரியாதையாக முந்தானையை எடுத்துப் போர்த்தியபடி, வாங்க... என கூற பக்கத்தில் இருந்த மேரி கிசுகிசுப்பான குரலில், "அம்மா... இவர்தான் திவ்யாவோட அப்பா!" என சொல்லவும் மேரியின் அம்மா லிசாவின் முகத்தில் குழப்ப ரேகை கூடியது.
இப்போது மெதுவாக ரங்கராஜன் பேச ஆரம்பித்தார் "என் பொண்ணு திவ்யா என்கிட்ட விஷயத்தை சொன்னா... உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன். அதான், மேரியோட அண்ணன் டேவிட்டும், திவ்யாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறார்களாம்... இருவருக்கும் மனம் ஒத்து போனதால் உங்கள் வீட்டிலும் சரி என்று சொன்னீர்களாம்... நான் சம்மதிப்பேனா? என்று உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம் இருக்கிறது என்றும் என்கிட்ட சொன்னா... உங்களுக்கு தெரியும், என்னை விட இந்து மதத்தின் மீது அதிக பற்றுள்ளவன் எனது மகன் பெருமாள். அவன், திவ்யா உங்கள் பையனை திருமணம் செய்து கொள்ள நிச்சயமாக ஒத்துக் கொள்ள மாட்டான். அதனால் தான் நான் நேரில பார்த்து உங்களிடம் சில விஷயங்களை பேச வந்திருக்கிறேன்..."
இப்போது அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் அவர் பேசுவதையே தேவசகாயம், லிசா, மேரி கவனித்துக் கொண்டிருக்க, ரங்கராஜன் தொடர்ந்தார்...
"நான் சுத்தி வளைக்காம நேர மேட்டருக்கு வர்றேன்... நிச்சயமா நம்ம இரண்டு விட்டார் சம்மதம் இருந்தா கூட, என் பையன் பெருமாள் சம்மதிக்க மாட்டான்... ஆனா, என் பொண்ணு டேவிட் கல்யாணம் பண்ணிக்கணும்... அதுக்கு நாம எல்லாம் சேர்ந்து ஒரு விஷயம் பண்ணனும்..." -சொல்லிவிட்டு இவர்களை ஒரு பார்வை பார்த்தவர் மீண்டும் தொடர்ந்தார்.
"இப்ப கூட என் வீட்ல என் பொண்ணு கிட்ட பாளையங்கோட்டையில் வரன் பாக்கற போறேன்னு சொல்லிட்டு தான், நான் இங்க வந்து இருக்கிறேன்..."
ரங்கராஜன், "அதாவது... நீங்க சம்மதித்தது, நாங்களும் சம்மதித்து விட்டது என்பது, பெருமாளுக்கு தெரிய கூடாது. நாங்க பெருமாள் கிட்ட சம்மதம் இல்லாத மாதிரி தான் நடந்து கொள்வோம்... நான் சொல்றது உங்களுக்கு புரியும் நினைக்கிறன்..." என கேட்டு ரங்கராஜன் தேவசகாயத்தை பார்க்க, அவர் 'புரிந்தது' என்பது போல் தலையே ஆட்டினார்.
"அவங்க ரெண்டு பேரும், ஒருவேளை நாம சம்மதிக்காம இருந்தா, எங்கயாவது போய் தான் கல்யாணம் பண்ணி இருப்பாங்க இல்லியா...?" ரங்கராஜன் கேட்க, தேவசகாயம் "ஆமா" என்பது போல் தலையை ஆட்ட, ரங்கராஜன் தன் மனசுல இருக்கும் திட்டத்தை சொல்ல ஆரம்பித்தார்.
"அப்படியே அவங்க போய் கல்யாணம் முடிக்கட்டும். அவளோட அப்பா அம்மாவா நாங்க நேரில போய் ஆசிர்வாதம் பண்ணிக்கிறோம். நீங்க அவங்க கல்யாணம் முடிச்சு வந்ததுக்கு அப்புறம் உங்க சர்ச்சுக்கு கூட்டிட்டு போய் ஆசிர்வாதம் பண்ணிக்கோங்க... எதுக்கு சொல்றேன்னா, ஒருவேளை கல்யாணத்தப்போ பெருமாள் வந்துட்ன்னா, எங்கள பார்த்தா கூட நாங்க அவனை கன்வின்ஸ் பண்ணிடுவோம்... உங்கள அங்க பார்த்தா அவன் இன்னும் கொதிப்பான்... சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்? 'புரிகிறது' என்பது போல் தேவசகாயம் தலை ஆட்டினார்.
"வாழப் போறவங்க ஆசைய நிறைவேற்றி வைக்கணும் தவிர, வாழ்ந்து முடித்த நம்ம ஆசைப்படி அவங்கள வாழனும்னு சொல்றது நியாயம் இல்லேல்ல..." சொல்லி முடித்தார் ரங்கராஜன்.
இப்போது,தேவசகாயம் பேச ஆரம்பித்தார். "நிச்சயமா... இத நாங்க எதிர்பார்க்கல... உங்க சம்மதம் கிடைத்தது பெரிய விஷயம்! உங்க பையன் பெருமாளு அவங்களுடைய கல்யாணம் முடிஞ்சு, கொஞ்ச நாள்ல, அவனே மனசு மாதிரி சரியாயிடுவான்... அதை பத்தி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நீங்க நினைச்ச மாதிரியே அவங்க ரெண்டு பேரு கல்யாணம் நடக்கட்டும்! நீங்க நேர்ல போயி ஆசிர்வாதம் பண்ணுங்க... கல்யாணம் முடிச்சுட்டு வந்ததுக்கப்புறம்... நாங்க எங்க ஆசிர்வாதத்தை அவங்களுக்கு கொடுத்துக்கிறோம்... கொடுக்கறது என்ன.? ஏற்கனவே எங்க ஆசீர்வாதம் அவங்களுக்கு பரிபூரணமா இருக்கு..." என கூற,
"அப்ப சந்தோஷம்... மத்த விஷயங்கள் நாம போன்ல பேசிக்கலாம்... நானே உங்கள போன்ல கூப்பிடுவேன்... நீங்க கூப்பிட வேண்டாம். பெருமாள் எப்ப, என் பக்கத்துல இருப்பான், எப்போ இருக்க மாட்டான் என்று எனக்கே தெரியாது... அப்ப கெளம்புறேன்..." ரங்கராஜன் கைகூப்ப, மூவரும் சந்தோஷமாக அவரை வழி அனுப்பி வைத்தனர்.
அந்த த்ரீ ஸ்டார் ரெஸ்டாரன்ட் வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து, திவ்யாவும் டேவிட்டும் இறங்கினர். உள்ளே, ரிசர்வ் பண்ணி வைத்திருந்த டேபிளில் இருவரும் எதிர் எதிரே அமர்ந்தனர். லேசான பதட்டத்துடன் திவ்யா இருப்பதை கவனித்த டேவிட், "எதுக்கு திடீர்னு தனியா பேசணும்னு இங்க கூட்டிட்டு வந்திருக்க? உங்க அப்பா தான் எங்க வீட்டுல வந்து பேசிட்டு போயிட்டாரே... அப்புறம் என்ன? "என்று கேட்க...
சுற்று முற்றும் ஒரு முறை பார்த்த திவ்யா, மெதுவாக அவனிடம் "நம்ம கல்யாணம் நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை டேவிட்..." என கூற "என்ன உளர்ற?" என டேவிட் கேட்க, "நேத்து எங்க வீட்ல எங்க அண்ணனுக்கும், எங்க அப்பாவுக்கும் சரியான வாக்குவாதம் நடந்தது! எங்க அப்பா எவ்வளவு எடுத்துச் சொல்லியும், அண்ணன் நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கவே இல்லை... கடைசியா எங்க அப்பா, "சரிடா நீ உன் இஷ்டத்துக்கு அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பாரு! நீ பாக்குற மாப்பிளைக்கே,அவளை கல்யாணம் முடிச்சு வைப்போம்..." - அப்படின்னு சொன்னாரு. அப்புறம் தான் அவன் அமைதி ஆனான்.
இப்ப எனக்கு அவன் தீவிரமா மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கான். எந்த நேரத்தில் மாப்பிள்ளை ரெடி! நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்னு வீட்ல வந்து சொல்ல போறான்னே தெரியல...
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட திவ்யா தொடர்ந்தாள்... அவன் போனதுக்கப்புறம் எங்கப்பா என்கிட்ட சொன்னாரு... அவன் போற வழியில போய் தான் அவனை நம்ம வழிக்கு கொண்டு வரணும். அவன் பாட்டுக்கு, மாப்பிள்ளை பார்க்கட்டும்... அதுக்குள்ள வர்ற முகூர்த்தத்தில், நீயும்,டேவிட்டும் போய் ஏதாவது ஒரு கோவில்ல கல்யாணத்தை பண்ணிக்கோங்க... அதுக்கப்புறம் நடக்கிறத ஆண்டவன் பாத்துக்குவான்.. அப்படின்னு அப்பா சொல்லிட்டாரு. எனக்குத்தான் பயமா இருக்கு!" - திவ்யா சொல்லி முடிக்க,
"ஆக... உங்க அண்ணன் கூட சேர்ந்துகிட்டு உனக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலைய ஒரு பக்கம் பண்ணிக்கிட்டு, இந்த பக்கம் நம்ம கல்யாணத்துக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கிறார்கள்... இப்படி எல்லாம் உங்க அப்பா பண்றார்னு, உங்க அண்ணனுக்கு நாளைக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?- டேவிட் கேட்டான்.
அன்று டேவிட் கேட்டது, இன்று நடக்கப்போகிறது, இதோ எங்களுக்கு கல்யாணமும் முடிச்சு, நாங்க தனி குடித்தனம் பண்ண, ஒரு வீட்டையும் பிடிச்சு, அந்த வீட்டுக்கும் எங்களை கூட்டிட்டு வந்து நிற்கிற, அப்பாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என் அண்ணனான பெருமாள்.
'இந்நேரம் எல்லாம் தெரிஞ்சுருக்கும்... என்ன நடக்க போகுதோ...' திவ்யா பழைய நினைவுகளைளில் இருந்து வெளியே வந்து, யோசித்தபடியே நின்று கொண்டு இருக்க...இவர்கள் அருகில் வந்து கொண்டிருந்த பெருமாள் முகத்தில் கோபம் நன்றாகவே கொப்பளித்தது...
(தொடரும்)
E-Mail: director.a.venkatesh@gmail.com
7299535353