என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிரான டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் சாய் சுதர்சன் சதம் விளாசல்
- முதல் இன்னிங்சில் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 2-வது இன்னிங்சில் 103 ரன்கள் விளாசினார்.
இந்தியா 'ஏ' அணி ஆஸ்திரேலியா சென்று இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த டெஸ்ட் ஐந்து நாட்கள் கொண்டதாகும்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா 'ஏ' அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 'ஏ' அணி 107 ரன்னில் சுருண்டது. தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 36 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்சன் 21 ரன்களும், நவ்தீப் சைனி 24 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 'ஏ' 195 ரன்களில் ஆல்அவுட் ஆனது. முகேஷ் குமார் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட் வீழ்த்தினார். பிரசித் 3 விக்கெட்டும், நிதிஷ் ரெட்டி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 'ஏ' அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் 12 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து 3-வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சனுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் நிலைத்து நின்று விளையாட 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா மேலும் விக்கெட்டை இழக்கவில்லை. சாய் சுதர்சன் 96 ரன்களும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் சதம் விளாசினார். சதம் அடித்த அவர் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். 200 பந்தில் 9 பவுண்டரியுடன் 103 ரன்கள் அடித்தார். மறுமுனையில் தேவ்தத் படிக்கல் 88 ரன்னில் வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது.
இந்தியா 91 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் அடித்துள்ளது. 199 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.