என் மலர்
கிரிக்கெட் (Cricket)
102 டிகிரி காய்ச்சலுடன் பேட்டிங் செய்த ஷர்துல் தாக்கூர் மருத்துவமனையில் அனுமதி
- இரானி கோப்பை தொடரில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின.
- மும்பை அணி வீரர் ஷர்துல் தாக்கூருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.
இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 537 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் 222 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
போட்டி தொடங்கிய முதல் நாளில் மும்பை அணி வீரர் ஷர்துல் தாக்கூருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மும்பை அணி பேட்டிங் செய்து வந்ததால் அவர் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், 2-ம் நாள் ஆட்டத்தில் 102 டிகிரி காய்ச்சலுடன் 9 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் 36 ரன்கள் அடித்து அவுட்டானர்.
பேட்டிங் செய்து முடித்ததும் ஷர்துல் தாக்கூரின் உடல்நிலை மேலும் மோசமானதால் அருகில் இருந்த மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை சீரானதால் இன்று மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் இப்போட்டியில் முதல் இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் விளையாடமாட்டார் என்று சொல்லப்படுகிறது.