என் மலர்
தமிழ்நாடு
இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்- தப்ப முயன்ற முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
- முத்துக்குமார் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த 33 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து புளியங்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
அப்போது அந்த பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்து உள்ளனர்.
நேற்று இரவும் அந்த பெண்ணும், வாலிபரும் மானாமதுரை நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முந்திரிகாட்டில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் வந்த ஒரு கும்பல் 2 பேரிடமும் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார்.
பின்னர் அந்த கும்பல் இளம்பெண்ணை அங்கிருந்து கடத்தி வேறு ஒரு இடத்திற்கு சென்றனர். அங்கு இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றும் அந்த பெண்ணால் முடியவில்லை. அதிகாலை வரை இந்த கொடுமை நிகழ்ந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மானாமதுரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 7 பேர் கும்பல் மதுபோதையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக முத்துக்குமார் என்பவரை விசாரிக்க சென்றனர். அப்போது அவரை அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் போலீசார் அவரை துரத்தி சென்றனர். தொடர்ந்து முத்துக்குமார் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார்.
இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் முத்துக்குமாரின் வலது காலை நோக்கி சுட்டனர். இதில் காலில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார். தொடர்ந்து அவரை பிடித்த போலீசார் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பில் முத்துக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முத்துக்குமாரை தவிர இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மானாமதுரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.