search icon
என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • பாலமுருகனை முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் சிலர் நேற்று இரவு வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த பாலமுருகனுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வந்து செல்கிறார்கள். இங்கு விபத்து காய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சமீபத்தில் பெய்த தொடர் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக மானாமதுரை நகர் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் தாழ்வாக செல்லும் மின்சார வயர்கள், மரங்களின் மீது உரசும் வயர்களால் ஏற்படும் மின்தடையானது பல நேரங்கள் கழித்த பிறகே சரி செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்தநிலையில் இது போன்ற மின்தடையால் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    மானாமதுரை அருகேயுள்ள கீழபசலை கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். ரெயில்வே ஊழியரான இவரை முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் சிலர் நேற்று இரவு வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி சரிந்தார்.

    இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தயாரானார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக மின்தடை ஏற்பட்டது. இதனால் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த பாலமுருகனுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    அப்போது டாக்டர்கள் வேறு வழியின்றி செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரின் செல்போன்களில் டார்ச் லைட்டை எரியவிடுமாறு கூறினர். அந்த வெளிச்சத்தில் அரிவாள் வெட்டு காயம் அடைந்த பாலமுருகனுக்கு தலையில் தையல் போடப்பட்டது. இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இன்று வைரலாகி உள்ளது.

    அவசர கால சிகிச்சைக்கு கூட ஒரு ஜெனரேட்டர் வசதியோ அல்லது பேட்டரி வசதியோ இல்லாத நிலையில் ரெயில்வே ஊழியருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
    • சேதுராமன் வீட்டருகே இருந்த மணிகண்டன் வீட்டிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கருவியபட்டியில் 100 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முத்துமாரியம்மன் கோவில் நிர்வாக தலைவர் சேதுராமன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். சேதுராமன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கோவில் நகைகளும் திருடப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் சேதுராமன் வீட்டருகே இருந்த மணிகண்டன் வீட்டிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    அடுத்தடுத்து நடைபெற்ற உள்ள கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வலிமையாக, உறுதியாக உள்ளது.
    • அடுத்த தேர்தலிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். அதில் சந்தேகம் வேண்டாம்.

    காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வலிமையாக, உறுதியாக உள்ளது. அதனை யாரும் உடைக்க முடியாது. கலைக்க முடியாது.

    அடுத்த தேர்தலிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். அதில் சந்தேகம் வேண்டாம்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும்.

    அரசியல் சாசனத்தை திருத்தாமல் அதைப்போன்று ஒரு சட்டம் நிறைவேற்ற முடியாது. இதனை திருத்த ஒவ்வொரு அவையிலும் அதாவது மக்களவை, மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்.

    பா.ஜ.க.விற்கு மக்களவையிலும் பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இல்லை. அரசியல் சாசனத்தை திருத்தும் சட்ட மசோதவை கொண்டுவந்தால் அதை நிச்சயம் நாங்கள் தோற்கடிப்போம். ஒரேநாடு ஒரே தேர்தல் நடைபெறாது.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

    • கடையை எப்போ திறப்போம்னு காத்திருக்கும்.
    • எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடும்.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஒரு மளிகை கடையில் மாடுகள் தினமும் கடையை எப்போ திறப்போம்னு காத்திருந்து, கதவை திறந்ததுமே உள்ளே நுழைந்து அதற்கு தேவையானதை சாப்பிட்டு எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடுமாம்.

    இதுகுறித்து கடையின் உரிமையாளர் மாசிலாமணி கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டம் சிங்கபுணரியில் பஸ்ஸ்டாண்டிற்கு எதிரில் மளிகை கடை நடத்திவருகிறேன். மாடுகள் நாங்கள் தினமும் கடை திறப்பதற்கு முன்பே கடைக்கு வந்து காத்து நிற்கும். நாங்கள் கடையை திறந்ததும் முதல் ஆளாக கடைக்குள் நுழைந்து அதற்கு தேவையான பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு எந்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்தாமல் வெளியே சென்றுவிடும்.

    தினமும் இரண்டு மூன்று தடவை கடைக்கு வரும். நாங்கள் மாடுகளை தொந்தரவு செய்வதில்லை, நாங்கள் அந்த மாடுகளை சிவனாக பாவித்து அதனை தடுப்பதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மழை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.

    இதன் காரணத்தாலும், அதன் பிறகு நிகழும் வானிலை மாற்றங்களாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 13-ந்தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு மழை உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மழையின் தாக்கத்தை பொறுத்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கணேசன் தினமும் அதிகாலையிலேயே கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபடும் அவர் மதியம் வரை அங்கேயே இருப்பார்.
    • சம்பவம் நடந்த பகுதியில் கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்து விசாரனையை தொடங்கினர்.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகேயுள்ள நாட்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 72). தற்போது அவர் சிவகங்கை நகர் பகுதியில் வசித்து வந்தார். அ.தி.மு.க. கிளைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலோடு, நாட்டார்குடியில் பெட்டிக்கடை ஒன்றும் வைத்து நடத்தி வந்தார்.

    தினமும் அதிகாலையிலேயே கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபடும் அவர் மதியம் வரை அங்கேயே இருப்பார். பிற்பகலில் அங்கு வரும் அ.தி.மு.க. பிரமுகர்கள், நிர்வாகிகளுடன் சேர்ந்து கட்சி பணிகளில் ஈடுபடுவார்.

    இந்தநிலையில் இன்று காலை தூங்கி எழுந்த கணேசன் வழக்கம்போல் பெட்டிக்கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென்று கணேசனை சூழ்ந்து கொண்டனர். நீங்கள் யார் என்று கேட்டதற்கு பதில் எதுவும் கூறாத அந்த கும்பலை சணேசனை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்த்தது.

    இதில் நிலைகுலைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. முன்னதாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வரும் வழியில் அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காலில் பலத்த காயம் அடைந்த அவர் தப்பி ஓடியதால் உயிர் பிழைத்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த திருப்பாச்சேத்தி போலீசார் கொலையுண்டு கிடந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்து விசாரனையை தொடங்கினர். முதல் கட்ட விசாரணையில், நாட்டார்குடி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், அதில் சுவாமி சிலைகள் வைப்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக தீபாவளி அன்று சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் மணிகண்டன், களத்தூரைச் சேர்ந்த மூதாட்டி லெட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இன்று அ.தி.மு.க. கிளைச் செயலாளர் கணேசன் உட்பட மூன்று கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. ஆனால் அதில் தொடர்புடையவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை போலீஸ்காரர் ஒருவர் ஒருமையில் பேசி திட்டியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கையில் தொடர் கொலைகளால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    • அரசியல் கட்சியின் செயல்பாடு, நடத்தை, கொள்கை போக, போக தான் தெரியும்.
    • சீமான் கட்சிக்கு நிரந்தர வாக்குகள் கிடையாது.

    காரைக்குடி:

    விஜய், தமிழக அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    "விஜய் தனது கொள்கையை தெளிவாக, வெளிப்படையாக சொல்ல வேண்டும். மேலும் அவரது மாநாட்டில் உத்வேகம் இருந்தது. அது அமைப்பாக மாறி, தேர்தலை சந்திக்கும் அளவுக்கு செல்லுமா? என்பதை காலம் தான் சொல்லும். சாதுரியமாக அல்லது பிம்பத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பார்களா என்பதை பார்க்க வேண்டும். அரசியல் கட்சியின் செயல்பாடு, நடத்தை, கொள்கை போக, போக தான் தெரியும். சீமான் கட்சிக்கு நிரந்தர வாக்குகள் கிடையாது. இதனால் அவருக்கு யதார்த்தமான அச்சம் வந்துள்ளது" என்று தெரிவித்தார்.

    • முதலில் அவர் உதயநிதி ஸ்டாலினை டிஸ்மிஸ் செய்துவிட்டு அதற்கு அப்புறம் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி பேசட்டும்.
    • முதலில் அவர் தனது கொள்கையை சொல்லட்டும்.

    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் மருது பாண்டியர்கள். அவர்களது வீரம் போற்று தலுக்குரியது. ஆங்கிலேயர்களிடம் சரணடைந்து தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களது தியாகம் பாராட்டக் கூடியது. தேசியமும், தெய்வீகமும் நிறைந்த மாமன்னர் மருது பாண்டியர்கள் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியவர்கள். அவர்களது தியாகத்திற்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இன்று இங்கு பா.ஜ.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


    தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடியதாக கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியுள்ளார்கள். இதற்காக உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் டிஸ்மிஸ் செய்வாரா? முதலில் அவர் உதயநிதி ஸ்டாலினை டிஸ்மிஸ் செய்துவிட்டு அதற்கு அப்புறம் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி பேசட்டும்.

    நடிகர் விஜய் இன்று அரசியல் இயக்கத்தை தொடங்குகிறார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன். யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் தொடங்கலாம். முதலில் அவர் தனது கொள்கையை சொல்லட்டும். அவருக்கு மக்கள் ஆதரவு இருக்க வேண்டும். அவர் தேசிய அளவில் அரசியல் செய்யப்போகிறாரா, மாநில அரசியல் செய்யப்போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் பல ஆண்டு காலமாக இரு மொழி திட்டத்தை எந்த அரசு வந்தாலும் கடைப்பிடித்து வருகிறது.
    • தமிழகத்தில் தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    தமிழகத்தில் இரு மொழி திட்டம் தான் என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு மக்கள் என்ன சிந்திக்கிறார்களோ, அதற்கு நேர் மாறாக கவர்னர் கருத்து தெரிவிக்கிறார்.

    மற்ற மாநிலங்களிலே 3 மொழி கொள்கை இருக்கிறது என்பது தவறு. பல இந்தி பேசும் மாநிலங்களில் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும். அங்கு ஆங்கிலம் கற்றுத் தருவது இல்லை. ஆங்கில ஆசிரியர்களும் கிடையாது.

    தமிழ்நாட்டில் பல ஆண்டு காலமாக இரு மொழி திட்டத்தை எந்த அரசு வந்தாலும் கடைப்பிடித்து வருகிறது. அதற்காக விரும்பியவர்கள் இந்தி படிக்கக்கூடாது என கூறவில்லை.

    தமிழகத்தில் தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள். கேந்திர வித்யாலயாவிலும் இந்தியை கற்றுத்தருகிறார்கள். விரும்பி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு எந்த தடையும் கிடையாது. தமிழகத்தில் அரசினுடைய கொள்கை மக்களுடைய எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் தகராறு.
    • பணியில் இருந்த நர்சுகள் அலறியடித்து ஓட்டம்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள முத்துப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு சிவபாண்டியன் மற் றும் பிரகதீஸ்வரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே சிவபாண்டியனுக்கும் பிரகதீஸ்வரனுக்கும் இடையே பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது.

    இந்தநிலையில் நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகதீஸ்வரன், அண்ணன் சிவபாண்டியனை தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    பலத்த காயம் அடைந்த சிவபாண்டியன், அந்த சூழ்நிலையிலும் தம்பியின் கையில் இருந்த பட்டாக்கத்தியை பறித்தார். பின்னர் பிரகதீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து பலத்த காயங்களுடன் சிவபாண்டியன் நேராக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். கையில் ரத்தம் சொட்ட சொட்ட பட்டாக்கத்தி, தலை, கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வந்தவரை பார்த்த ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த செவிலியர்கள், காவலாளி ஆகியோர் பதறியடித்துக்கொண்டு ஓடினர்.

    பின்னர் இதுபற்றி தனி அறையில் இருந்த டாக்டர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர் கள் சிவபாண்டியனிடம் விசாரித்தபோது சொத்து பிரச்சினை காரணமாக தனது தம்பி தன்னை வெட் டியதாகவும் அவரிடம் இருந்து பட்டாக்கத்திய பறித்து கொண்டு சிகிச் சைக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்

    • கச்சத்தீவை மத்திய, மாநில அரசுகள் இணைந்து போராடி மீட்க வேண்டும்.
    • தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அரசை கண்டிக்கணும்

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் கூறியிருப்பதாவது:-

    * மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு அனைவரையும் விடுதலை செய்ததை மத்திய அரசையும், மாநில அரசையும் பாராட்டுகிறேன்.

    * கச்சத்தீவை மத்திய, மாநில அரசுகள் இணைந்து போராடி மீட்க வேண்டும்.

    * தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அரசை கண்டிக்கணும். மீனவர்களை சிறைபிடித்து ரூ.1 கோடி அபராதம் விதித்தார்கள்.

    * இலங்கையில் தற்போது பதவியேற்றுள்ள பிரதமர் நல்லவராக இருக்கிறார். இந்த நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு பெற வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறினார். 

    • காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக இருக்கும்.
    • சென்னையில் கூவம் நதி தூய்மைப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தனக்கு வாக்களித்த பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடவுள், மதம் தனிப்பட்ட நம்பிக்கை. அதை அரசியலோடு சேர்க்க கூடாது என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதை வரவேற்கிறேன். காவிரி பிரச்சனையை தமிழகம், கர்நாடகம் மாநிலங்கள் சேர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகலாம். காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக இருக்கும்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் பாரதிய ஜனதா கூட்டணி அரசின் எண்ணம் நிறைவேறாது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற வாய்ப்பில்லை. சென்னையில் கூவம் நதி தூய்மைப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு பதில் வரவில்லை. தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×