என் மலர்
தமிழ்நாடு
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- ஊழியர் பலி
- பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
- விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசு தயாரிப்பு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இன்று காலை பணிக்கு வந்த அவர்களில் சிலர் மட்டும் பட்டாசு தயாரிப்புக்கான மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த வினாடி அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் பரவி வெடித்துச்சிதறியது. இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் (வயது25) என்பவர் உடல் சிதறி பலியானார். மேலும் குருமூர்த்தி (19) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து சக தொழிலாளர்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குருமூர்த்தியை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
சிவகாசி அருகே உள்ள சிறு குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை தாயில்பட்டி அருகே உள்ள சேது ராமலிங்கபுரம் கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 80-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு பட்டாசுக்கு பவுடர் செலுத்தும் பணி செய்து கொண்டிருந்த மேலாண் மறைநாடு அருகே உள்ள துரை சாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (50) பணி முடிந்ததும் ஆலை வளாகத்தில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றார். புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக குளிப்பதற்கு முன்பாக புகை பிடித்தபோது உடலில் இருந்த பவுடர் கலவை காரணமாக தீப்பிடித்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து விஜயரங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.