என் மலர்
தமிழ்நாடு
மகப்பேறு இறப்பு இல்லாத ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களுக்கு தேநீர் விருந்து- அமைச்சர் நேரில் பாராட்டு
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு இறப்பு இல்லாமல் சாதனை படைத்துள்ளது.
- மருத்துவமனையை பொறுத்தவரை என்ன தேவைகளாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்று உள்ளார். அங்கு சத்திரக்குடியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுவதை பார்வையிட முடிவு செய்தார். 10 கிராமங்கள் வழியாக சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு இறப்பு இல்லாமல் சாதனை படைத்துள்ளது.
இதை அறிந்ததும் அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களை நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து அவர்களுக்கு தேநீர் விருந்து அளித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இதே போல் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு சாதனை படைக்க வேண்டும் என்றும், மருத்துவமனையை பொறுத்தவரை என்ன தேவைகளாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். உதவுவதற்கு முதலமைச்சர் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
அதைத்தொடர்ந்து பரமக்குடி அரசு மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் சரிவர இல்லை. முக்கியமாக சி.டி.ஸ்கேன் அறை சுத்தமாக இல்லாமல் நோய் தொற்று ஏற்படும் வகையில் இருந்தது. இதனால் மருத்துவமனை தலைமை மருத்துவர் தன் பணியில் சரிவர இல்லாமல் பொதுமக்கள் சுகாதாரத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் பணி செய்ததால் அவரை உடனடியாக பணிமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டார். மற்றும் இணை இயக்குனர் பணியில் சுணக்கம் காட்டியதற்கு விளக்கம் கேட்கும்படி மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனருக்கு உத்தர விட்டார்.