search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண், 7 மாத குழந்தை மரணம்: பொதுமக்கள் பீதி
    X

    மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு பெண், 7 மாத குழந்தை மரணம்: பொதுமக்கள் பீதி

    • கடந்த 5 நாட்களுக்கு முன்பு சத்தியபிரியாவுக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
    • காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 2 பேர் பலியானதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    மதுரை:

    தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கொசு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது. மதுரை மாநகரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதற்கு சான்றாக கொசுக்களால் பரவும் நோய் தொற்று, வைரஸ் காய்ச்சல் என அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வழிகின்றன.

    இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    மதுரை கோச்சடை வைகை விலாஸ் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரகுமார். இவர் வெளிநாட்டில் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்தியபிரியா (வயது 41). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சத்தியபிரியாவுக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து உறவினர்கள் அவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் காய்ச்சல் குறையவில்லை. தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையில் சத்தியபிரியாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.

    தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்தியபிரியா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். உயிர்போகும் நிலைக்கு தள்ளப்படும் அளவிற்கு அவர் வசித்த பகுதியில் சுகாதார பணிகள் எதுவும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஜெ.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (38), டிரைவர். இவருக்கு அனன்யா என்ற 7 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த சில தினங்களாக குழந்தைக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருந்துகள் வாங்கி கொடுத்துள்ளார்.

    இந்தநிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 2 பேர் பலியானதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    Next Story
    ×