என் மலர்
தமிழ்நாடு
டாஸ்மாக் கடைகளுக்கு 12 ஆயிரம் பில்லிங் மிஷின் வாங்கப்பட்டுள்ளது- அமைச்சர் முத்துசாமி
- அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் 8 நிறுவனங்களுடன் 1300 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு போடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் போதை பொருட்கள் கட்டுப்படுத்த அனைத்து வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பார்முலா 4 பந்தயத்தால் சென்னை மக்கள் எல்லோரும் சந்தோஷமடைந்துள்ளனர். ஆசிய துணைக்கண்டத்தில் வேறு எங்கும் நடக்காத அளவு வகையில் நடந்துள்ளது. அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த முயற்சிகள் தான் காரணம்.
சி.என்.சி கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், கவர்னர் ஒப்புதல் பெற்று மத்திய அரசு ஒப்புதலுக்கு பெறப்பட்டும் தற்போது குடியரசு தலைவர் ஒப்புதல் பெற உள்ளது. நமது பாராளுமன்ற உறுப்பினர் மூலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 17-ந் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்த அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் எவ்வித பிரச்சனைகளின்றி அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் தெளிவாக செல்கிறது.
டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மது விற்பனை அரசுக்கு வரக்கூடிய வருமானம் என்பதால் விற்பனை குறித்து மறைத்து சொல்வதில் அவசியம் இல்லை. விற்பனை ஒருசில இடங்களில் குறைந்தால் கண்காணிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மது பிரியர்கள் பழக்கத்தை விட்டு மது கடைகளில் விற்பனை குறைந்து வருமானம் குறைந்தால் அரசு மகிழ்ச்சி அடையும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று மதுக்கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் 12 ஆயிரம் பில்லிங் மிஷன் வாங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த பில்லிங் மிஷன் நடைமுறைக்கு வரும் போது கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்படும். அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மது கடைகளில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் மது அருந்திவிட்டு வருபவர்களை போலீசார் பிடிப்பதாக மதுப்பிரியர்களின் புகாரை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தின் நலன் கருதி தான் போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
பார்முலா 4 கார் பந்தயம் மாநிலத்தின் திறமை, தகுதியை வெளிக்காட்டி உள்ளோம். இது வீண் செலவு அல்ல.
ஈரோடு வாழ தகுதியற்ற நகரம் அல்ல. சில தொழிற்சாலைகளால் புற்றுநோய் வருவதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக 2 நாட்களில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெறும்.
அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் 8 நிறுவனங்களுடன் 1300 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு போடப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை குறித்து இறுதியாக வெளியிடப்படும்.
தமிழகத்தில் போதை பொருட்கள் கட்டுப்படுத்த அனைத்து வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.