search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் 40-ஸ் பாலியஸ்டர் காட்டன் நூல் வர தொடங்கியது.
    • சேலைக்கான நூல் வரத்தாகி 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர்.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளி கள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டுக்கு 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகள், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 471 சேலை உற்பத்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் 40-ஸ் பாலியஸ்டர் காட்டன் நூல் வர தொடங்கியது. ஆனால் வேட்டி கரைக்கான நூல், பாபின் கட்டை போதிய அளவு வராததால் குறைந்த தறிகளில் மட்டும், வேட்டி உற்பத்தி பணி நடக்கிறது. இலவச வேட்டி உற்பத்தி பணி 15 முதல் 20 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது.

    சேலைக்கான நூல் வரத்தாகி 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர். ஆனாலும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்காததால் உற்பத்தி பணி தொடங்கவில்லை.

    இதுகுறித்து விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    பொங்கலுக்கான வேட்டி, சேலை பணியை வருகின்ற டிசம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் முடித்து அந்தந்த மாவட்டங்களுக்கு வேட்டி, சேலையை அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது.

    ஆனால் தீபாவளிக்கு இன்னும் 13 நாட்களை உள்ள நிலையில் நெசவாளர்களுக்கு புதிய ஆர்டரை வழங்கி கூலி பணத்தை விடுவித்தால் சங்கம் மூலம் போனஸ் வழங்க இயலும்.

    இது தவிர கடந்தாண்டுகளில் உற்பத்தியான இலவச வேட்டி, சேலைக்கு வழங்க வேண்டிய ரூ.123 கோடி நிலுவையை முதற்கட்டமாக வழங்கினால் கூட ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் தீபாவளி கொண்டாடும் அளவுக்கு குறைந்தபட்ச தொகை கிடைக்கும்.

    இலவச வேட்டி, சேலை உற்பத்தியை விரைவில் தொடங்க செய்வதுடன் பழைய நிலுவை தொகையையும் விடுவிக்க நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இவர் அவர்கள் கூறினர்.

    • நெல், மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும்
    • எதிர்காலத்தில் அரசு விவசாயத் தொழிலை நேரடியாக செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது, போதிய விலை கிடைக்காததால் விவசாயத்தை விட்டு வெளியேறும் விவசாயிகள் போன்ற காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவது வேளாண்துறையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

    தமிழகத்தில் காவிரி நதி பாயும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்வது ஈரோடு மாவட்டத்தில் தான். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு கீழ்பவானி, கொடிவேரி, காலிங்கராயன் பாசன வாய்க்கால்களில் பாசனம் நடைபெறுகிறது.

    நெல், மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நெல் சாகுபடி பரப்பு கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவது விவசாயிகள் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மைக் காலமாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த பல விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு பேசி விற்பனை செய்வதும், வேளாண் தொழிலில் போதுமான லாபம் கிடைக்காதது போன்ற காரணங்களால் நெல் சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கீழ் பவானி, கொடிவேரி, காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நன்செய், புன்செய் உள்ளிட்ட 3 சீசன்களிலும் ஒவ்வொரு சீசனுக்கும் தேவைக்கேற்ப சராசரியாக 30 முதல் 35 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

    நெல் கொள்முதல் மையம் மூலமாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை தேவைக்கேற்ப மாடர்ன் ரைஸ் மில்களுக்கு அனுப்பி அரிசி உற்பத்தி செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் நெல் கொள்முதல் செய்பவர்களிடமும் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்கின்றனர்.

    இருப்பினும் பெரும்பகுதி நெல், அரசு கொள்முதல் மையங்கள் மூலமாக அரசு நிர்ணயித்த விலைக்கு வாங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 76 ஆயிரத்து 223 ஏக்கரிலும், 2022-23ம் ஆண்டில் 75 ஆயிரத்து 608 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் 10 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி குறைந்திருந்த நிலையில் கடந்த 2023-24ம் ஆண்டில் நெல் சாகுபடி மேலும் 15 ஆயிரம் ஏக்கர் குறைந்து 60 ஆயிரத்து 198 ஏக்கர் மட்டுமே நெல் சாகுபடி ஆனதாக வேளாண் துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    அதேசமயம் கடந்த 2021-22ம் ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் மையங்களில் இருந்து மொத்தம் 96 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ஆனது. ஆனால் 2022-23ம் ஆண்டில் நெல் கொள்முதல் மையங்கள் மூலம் 71 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதலானதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    ஒரே ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் 15 ஆயிரம் மெட்டரிக் டன் நெல் கொள்முதல் குறைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு 2024-25ம் ஆண்டில் தற்போது தான் நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெல் நடவு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிலும் நெல் நடவு கடந்த ஆண்டை விட குறைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    நெல் சாகுபடி பரப்பு குறைந்ததற்கான காரணம் குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் வலது கரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் விவசாய தொழில்களை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர்.

    விவசாய குடும்பத்திலேயே அடுத்த தலைமுறை விவசாயிகள் குறைந்து போவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. பலரும் நன்கு படித்து தொழிலதிபர்கள் ஆகவும் ஐ.டி., அரசுத் துறைகளில் உயர் பதவிகளுக்கு செல்கின்றனர். விவசாயத் தொழிலில் போதுமான லாபம் கிடைக்காததும் விவசாய தொழிலை கைவிட காரணமாக உள்ளது. எதிர்காலத்தில் அரசு விவசாயத் தொழிலை நேரடியாக செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதேபோல் மாவட்ட த்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. அதே போல் ஈரோடு, கோபி, சத்தி, அந்தியூர் மற்றும் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கிறது.

    இதனால் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணைக்கு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருகிறது. மழையால் மக்கள் கொடிவேரி அணைக்கு மக்கள் வருவதை தவிர்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகத்தில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டகளில் கடந்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பி உள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படவும் தொடர்ந்து கொடிவேரி தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொடிவேரி தடுப்பணையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன் கிழமை) ஆகிய 2 நாட்கள் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தடை விதிக்கப்படு கிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறிம் போது, தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி கொடிவேரி பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே மக்கள் யாரும் கொடிவேரிக்கு வர வேண்டாம் வலியுறுத்தப்படுகிறது என தெரிவித்தனர்.

    இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது.
    • பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறுமியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் அல்லது அவர்களை தூக்கிலிட வேண்டும். இது தொடர்பாக முதல்வர் தனி சட்டம் இயற்ற வேண்டும்.

    தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன், பா.ஜ.க.வினர் கூட்டணி இல்லாததால் மத்தியில் மைனாரிட்டி அரசாக உள்ளது.

    பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்திருந்தால் தமிழகத்தில் அ.தி.மு.க 20, பா.ஜ.க 15 என 35 தொகுதிகள் பிடித்திருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க ஆளும் கட்சியாக வரவேண்டும் என்பதற்கு அ.தி.மு.க பாடுபட முடியுமா? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.

    பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது. மற்ற மாநிலங்களில் குறைவாக கொடுக்கிறது. மக்களின் பணத்தை ஏமாற்றியதற்கு சிறைக்கு சென்று பிணையில் வெளியே வந்த செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.

    தி.மு.க.வில் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் போன்ற பல நல்லவர்கள் உள்ளனர். பழனிவேல் தியாகராஜனிடம் மின்சாரத்துறையை கொடுத்திருந்தால் ஒரு முறை கூட மின்வெட்டு இருந்திருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தார் சாலை பணி நடப்பதால் பக்தர்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.
    • வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து திருவிழா வந்து கொண்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் ஆதலால் குழைந்தைகளுடன் வந்த பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    தற்போது தார் சாலை பணி நடப்பதால் பக்தர்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. தற்போது குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் மட்டும் செல்கிறது. புரட்டாசி மாதமாக இருந்தாலும், வெயில் தாக்கத்தில், சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்டனர்.

    மேலும் கோவில் பிரகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி, பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது. இதனால் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்.
    • சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 15,000 மலையாளி இன மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வசிக்கும் மலையாளி இனமக்களுக்கு எஸ்.டி பட்டியலில் சாதி சான்று பெற்றுள்ளனர்.

    ஆனால் ஈரோடு மாவ ட்டத்தில் கடம்பூர், பர்கூர் மலைகளில் வசிக்கும் மலையாளி மக்களுக்கு அவ்வாறு சான்று வழங்க மறுக்கின்றனர். இதனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு, அரசு சலுகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பல வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடம்பூர் மலை குத்தியாலத்தூர் ஊராட்சி கரளியம், கல் கடம்பூர், பெரியசாலட்டி, சின்னசாலட்டி, இருட்டிபாளையம், கிட்டாம்பாளையம், அத்தியூர் உள்பட 21 கிராமங்களில் பந்தல் அமைத்து கோரிக்கைகள் அடங்கிய பதவிகளை பிடித்து பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவர்களுடன் 21 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஸ்ரீதேவி பூதேவி பெருமாள் சமேதரமாக காட்சி அளித்த பெருமாளுக்கு மாலை மாற்றப்பட்டது.
    • சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோபி:

    புரட்டாசி மாதம் பிறந்தது முதலே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு வருகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் பலர் புரட்டாசி சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்த பின்னரே உணவு அருந்துகின்றனர். இந்த நிலையில் புரட்டாசி பிறந்து 3-வது சனிக்கிழமையான நேற்று வெகு விமர்சையாக பெருமாள் கோவில்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேதன உடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதே போல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து கோவிலில் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் மேள தாளங்கள் முழங்க வேத மந்திரங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் வரதராஜ பெருமகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாணம் முடிந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    மேள தாளங்கள் வாசிக்க அதற்கேற்றார் போல் ஸ்ரீதேவி பூதேவி பெருமாள் சமேதரமாக காட்சி அளித்த பெருமாளுக்கு மாலை மாற்றப்பட்டது.

    அப்போது செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆடி, பாடி நடனமாடி மகிழ்ந்தார். இதை தொட ர்ந்து அவர் இசைக்கேற்றப்படி ஆடி கொண்டு சுவாமிக்கு மாலை அணிவித்தார். இதை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைத்தலங்களில் பரவி வருகிறது. இதை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.

    • இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    • இல்லம் தேடி சென்றும் பரிசோதனை நடத்துகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நல வாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மையம் என 198 சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் பரிசோதனை செய்வதுடன், இல்லம் தேடி சென்றும் பரிசோதனை நடத்துகின்றனர்.

    இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 478 பேருக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 816 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 699 பேர் வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. 86 ஆயிரத்து 63 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கும், 62 ஆயிரத்து 880 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 9 பேருக்கும் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மொத்தம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 642 பேருக்கு பரிசோதனை செய்ததில் 53 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து தொடங்கியது.
    • ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து 101 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மதியம் 4 மணிக்கு பிறகு வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்து தொடங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அதன் பின்னரும் மழை தூறி கொண்டே இருந்தது. ஈரோடு பஸ் நிலையம், நாச்சியப்பா வீதி, ஆர்.கே.வி.ரோடு, சக்தி ரோடு, காந்திஜி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தெப்பம் போல் தேங்கின்றது.

    இந்த திடீர் மழையால் ஈரோட்டில் மேடன பகுதியான சாஸ்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளநீர் நாடார் மேடு பகுதி நோக்கி பாய்ந்து சென்றது. இதனால் ஈரோடு நாடார்மேடு பகுதியில் தாழ்வாக உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    வீட்டில் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியே ஊற்றினர். பின்னர் சிறிது நேரத்தில் மழைநீர் வடிய தொடங்கியது. இதேபோல் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள பெரிய காய்கறி மார்க்கெட்டிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். ஈரோடு மாநகர பகுதியில் அதிகபட்சமாக 49 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.


    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் 3000-க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு குரும்பூர் பள்ளம் சர்க்கரை பள்ளம் வழியாகத்தான் செல்ல வேண்டும். கடம்பூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கம்பாளையம் பகுதிக்கு அரசு பேருந்து தினமும் 2 முறை இயக்கப்ப டுகிறது. மழைக்காலங்களில் குரும்பூர் பள்ளங்களில் அடிக்கடி வெள்ளம் கரை புரண்டு ஓடும்.

    இதேபோல் நேற்று இந்த கனமழையால் சக்கரை பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் சக்கரை பள்ளம் வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திடீர் மழையால் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றனர்.

    இந்நிலையில் காய்கறி லோடுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது. டிரைவரால் எவ்வளவு முயற்சி செய்தும் வாகனத்தை இயக்க முடியவில்லை. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கயிறு கட்டி சரக்கு வாகனத்தை நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். இந்த பகுதி மக்கள் நீண்ட வருடமாக உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிககனத்த மழை பெய்தது. இதன் காரணமாக அருள்வாடி, சூசைபுரம், திகினாரை, ஏரகனள்ளி, கெட்டவாடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மழைநீர் வடிந்த உடன் போக்குவரத்து சீரானது.

    இதேபோல் ஆசனூர், திம்பம், அரேபாளையம் பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் அரேபாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் வலுவிழந்து காணப்பட்ட மூங்கில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து போக்குவரத்து சீரானது.

    • சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
    • பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம், வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (32). பூக்கடைக்காரர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் ரகுமான் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அப்துல் ரகுமான் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அப்துல் ரகுமான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    • மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் விளம்பர தட்டிகள், போர்டுகளை அகற்றினர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதற்கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை என தொடர்ந்து பண்டிகை வர உள்ளதால் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியில் 2-வது கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    கருங்கல்பாளையம் முதல் காளை மாட்டு சிலை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை ஆக்கிரமிப்புகள் மற்றும் பணி தொடங்கியது.


    இதற்காக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் விளம்பர தட்டிகள், போர்டுகளை அகற்றினர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வியாபாரிகள், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நாளை ஈரோடு-மேட்டூர் ரோடு ஸ்வஸ்திக் கார்னர் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.

    • பள்ளியில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
    • வெடிகுண்டு உள்ளதா என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஒவ்வொரு பகுதியாக அங்குலமாக சோதனையிட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் ஏற்கனவே 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.

    இந்நிலையில் மீண்டும் இ-மெயில் மூலம் சி.பி.எஸ்.சி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிபுரத்தான் பாளையத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பள்ளி இ-மெயில் ஐ.டி.க்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளிக்கு அவசர அவசரமாக விடுமுறை அறிவித்து இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.


    பெற்றோர்களும் பதறி அடித்துக் கொண்டு பள்ளிகளுக்கு வந்து தங்களது குழந்தைகளை வேக வேகமாக வீடுகளுக்கு அழைத்து சென்றனர். பெருந்துறை டி.எஸ்.பி கணேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து வந்தனர். மேலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் உடனடியாக பள்ளிக்கு வந்து வெடிகுண்டு உள்ளதா என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஒவ்வொரு பகுதியாக அங்குலமாக சோதனையிட்டனர்.

    பள்ளி கேட் மூடப்பட்டு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதேபோல் ஈரோடு நாராயண வாசலில் உள்ள ஒரு தனியார் பள்ளி, வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

    ×