என் மலர்
தமிழ்நாடு
உலகமே பாராட்டும் அளவிற்கு முத்தமிழ் மாநாடு சிறப்பாக நடைபெற்று இருக்கிறது- அமைச்சர் சேகர்பாபு
- திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.
- முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை
தரங்கம்பாடி:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 2000-வது குடமுழுக்கு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இன்றுடன் 2005 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளது. திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.
ஆதீனங்கள் ஒருசேர இந்த ஆட்சியோடு இணக்கமாக இருந்து பக்தி பரவசத்தோடு ஆட்சியை ஆதரிப்பது கடந்த காலங்களில் இல்லை.
முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அனைவரும் எப்படி ஆதரிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்? எதிர்தரப்பினரின் கருத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு எதிர்மறையாக வினையாற்ற இந்து சமய அறநிலையத்துறை தயாராக இல்லை.
முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. உலகமே பாராட்டும் அளவிற்கு முத்தமிழ் மாநாடு சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.
இதுவரை ரூ.6,750 கோடி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கிறது.
கோவில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் வந்தாலும், அந்தத் திட்டம் பயன் தரக்கூடிய திட்டமாகவே உள்ளது. பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாரம்பரிய நகைகளை தவிர்த்து புதிதாக பக்தர்கள் வழங்கிய நகைகள் மத்திய அரசின் நகை உருக்கு ஆலைக்கு கொண்டு சென்று உருக்கி எந்த கோவிலில் இருந்து எடுத்துச் சென்றோமோ அதே கோவிலில் டெபாசிட் செய்வதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் கூறினார். மேலும் ரூ.15 கோடிக்கு வருவாய் வரும் அளவில் கோவில் நகைகள் மதிப்பீடும் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.