என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மயிலாடுதுறை
- கலைஞர் முதலமைச்சர் ஆனவுடன் தண்டபாணி தேசிகருக்கு டாக்டர் பட்டம் அளித்தார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மை உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று நடந்த வெள்ளி ரத தேர் வெள்ளோட்டத்தில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது. ஆதீனங்களில் பொற்கால அருள் ஆட்சி நடத்தும் தருமபுரம் ஆதீனத்திற்கு நான் அடிமை. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலுக்கு வந்துள்ளேன். அமைச்சர் பெயர் சேகர்பாபு, என்னுடைய பழைய பெயர் பகவதிபாபு.
ஆதீனங்களை ஒன்று கூட்டிய பெருமை அமைச்சருக்குத்தான் சேரும். சிறப்பான முறையில் கோவில்களுக்கு அமைச்சர் திருப்பணிகள் செய்து வருகிறார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னதை சேகர்பாபு செய்து காட்டியுள்ளார். நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த ஆட்சி வளர வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும்.
எனக்கும், அவருக்கும் சண்டை மூட்டி விட்டுள்ளனர். தருமபுரம் ஆதீனத்தில் தேவாரம் சொல்லித்தரப்படுகிறது. ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் கலைஞரின் ஆசி பெற்றவர். கலைஞர் முதலமைச்சர் ஆனவுடன் தண்டபாணி தேசிகருக்கு டாக்டர் பட்டம் அளித்தார்.
இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். மத்தியில் நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி வேண்டும். தமிழை வளர்த்தது ஆதீனங்கள் தான். சம்பிரதாயங்களை பாதுகாத்தது தருமபுரம் ஆதீனம். தருமபுர ஆதீனம், அமைச்சர் சேகர்பாபு உடன் நெருங்கி பேசியதற்கு என்னை தி.மு.க.காரன் என்று முத்திரை குத்துகின்றனர். எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவன் நான். நல்ல காரியம் யார் செய்தாலும் பாராட்டுவேன். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
- கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமனை காரணமாக கடலூர், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்ப்டு இருந்தது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மயிலாடுதுறையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மகாபாதி உத்தரவிட்டுள்ளார்.
- வி.சி.க. தலைவர் திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அ.தி.மு.க. கூறுகிறது.
- த.வெ.க. தலைவர் விஜய், கட்சி தூண்டிலை யாருக்கு போடுகிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீர்காழி சட்டமன்ற தொகுதி நிர்வாக சீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேலிட பொறுப்பாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஷா நவாஸ் பங்கேற்று பேசினார் அப்போது அவர் கூறுகையில்:-
கட்சியை மறுசீரமைத்து அதை உயிரோட்டமாக உயிர்ப்போடு வைத்திருப்பதில் முனைப்போடு இருப்பவர் நமது வி.சி.க. தலைவர் திருமாவளவன். மறு சீரமைப்பு நடவடிக்கையால் தான் தலித் அல்லாதவர்கள் இக்கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வேளச்சேரி தீர்மானம் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்கள் வாக்களித்து இது பொது கட்சிதான் என அங்கீகரித்துள்ளனர்.
அதன் விளைவாக தான் இன்று 2 எம்.பி.க்கள், 4 எம்.எல்.ஏ.க்கள், கடலூரில் துணை மேயர் மற்றும் பல்வேறு நகராட்சி, ஊராட்சிகளில் உறுப்பினர்கள் என மிகப்பெரிய கட்சியாக வி.சி.க. வடிவம் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் ஒரு நாள் கூட அரசியல் விவாதங்கள் நடைபெறுவதில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கூட்டணியில் தொடர போகிறதா? அந்த கூட்டணிக்கு போகபோகிறதா? என்று தான் அரசியல் வட்டாரங்கள் பேசி கொண்டுள்ளனர்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அ.தி.மு.க. கூறுகிறது. திருமாவளவன் அரசியல் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாடு தான் இன்று அரசியலயே தீர்மானிக்க போகிறது என்ற நிலைக்கு வி.சி.க. வளர்ந்துள்ளது. புதிதாக வரக்கூடிய கட்சிகளும் யாரை எதிர்பார்க்கிறார்களோ, இல்லையோ விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்பார்க்கின்றனர்.
விக்கிரவாண்டியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், கட்சி தூண்டிலை யாருக்கு போடுகிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பால அறவாழி, பரசு முருகையன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, தங்க மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
- தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்புள்ளதால் விடுமுறை அறிவிப்பு.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில தினங்களுக்கு இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஓரிரு இடங்கிளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடிக்கு வாய்ப்புள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டள்ளார்.
காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த டாக்டர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- டாக்டர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
குத்தாலம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா மரத்துறையைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28) என்பவருக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை சுயநினைவின்றி இருந்தது.
இதனால் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்தது என்று கூறி பெற்றோர், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பெற்றோர் உறவினர்களிடம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பானுமதி விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த டாக்டர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
டாக்டர்களிடம் உரிய விசாரணை செய்யாமல் பெற்றோர்கள் உறவினர்களிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில் டாக்டர் ரம்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று மயிலாடுதுறையில் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் 21 டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டாக்டர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து அவசர சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகிறது. ஆனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவம் பார்ப்பதற்காக நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் காலை 7:00 மணி முதல் தற்போது வரை நோயாளிகள் காத்து கிடைக்கின்றனர்.
மேலும் சிகிச்சைக்கு வந்த முதியவர்கள் என ஏராளமானோர் டாக்டர்கள் இல்லாததால் திரும்பி வேறு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
- பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
- போராட்டத்தால், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மூச்சு விட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தது.
பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதைதொடர்ந்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு குழந்தையின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் போராட்டம் தொடர்ந்தது.
இந்த போராட்டத்தால், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுகள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் ரம்யாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பானுமதி உத்தரவிட்டார்.
மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் பெண்ணின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இறந்த குழந்தையின் சடலத்துடன் 12 மணி நேரத்திற்கும் மேலாக பொது வெளியில் போராடி வருவதால், நோய்த்தொற்று அபாயம் ஏற்படும் போராட்டத்தைக் கைவிடும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஃப்ரீஸர் பாக்ஸ் வரவழைத்து அதில் குழந்தையின் உடலை கிடத்தி பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
- மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர் பவுன்ராஜ், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவ ஊழியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாலும்; மருந்துப் பொருட்கள் பற்றாக் குறையாலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்து வருகிற 26-ந் தேதி காலை 10.30 மணியளவில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில், மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர் பவுன்ராஜ், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எஞ்சிய 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்கள் நேற்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர்.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை (வயது 60) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் 43 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லைதாண்டி வந்ததாக கூறி ஒரு விசைப்படகு , பைபர் 4 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த பூம்புகார் கிராமத்தை சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் சந்திரபாடி கிராமத்தை சேர்ந்த 13 பேர் என 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனை அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் எஞ்சிய 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்கள் நேற்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர்.
இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை பூம்புகார் மீனவர்கள் நேற்று முதல் தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, மீனவர்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மக்கள் கூட்டம் இன்றி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
- நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.
- என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கல்யாணம் முடிந்து விட்டால் புது மாப்பிள்ளைக்கு கால் கட்டு போட்டாச்சு என்பார்கள். அது நூற்றுக் நூறு சதவீதம் உண்மையான வார்த்தைதான். திருமணத்துக்கு முன்பு வரையில் எந்தவித கட்டுப்பாடுமின்றி சுற்றித் திரிந்த பலர் திருமணமான பிறகு வேலை... வீடு... குடும்பம் என நான்கு சுவற்றுக்குள் முடங்கிப் போய் விடுகிறார்கள்.
திருமணத்துக்கு முன்பு ஊர் சுற்றியது போல நண்பர்களுடன் வெளியில் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் மனைவிமார்களிடம் அனுமதி பெறுவதற்குள் பலருக்கு போதும் போதும் என்றாகி விடுகிறது என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல கணவர்மார்கள். 'என்ன... வெளியூர் டூர் வேண்டி கிடக்கு? பேசாம வீட்ல இருங்க.." என்று மனைவிமார்கள் போடும் சத்தத்தில் சப்தநாடி அடங்கி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் கணவன்மார்கள் பலர் ஒரு நாளைக்காவது நண்பர்களோடு தனியாக வெளியில் செல்ல முடியுமா?" என்கிற ஏக்கத்துடனேயே காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற சிக்கல் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு தடை போடக் கூடாது என மணப்பெண்ணிடம் அவரது நண்பர்கள் பத்திரத்தில் எழுதி வாங்கி இருக்கும் ருசிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்த பவித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, தென்பாதி கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற நண்பர்கள் முத்துக்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது. இனி நாம் அனைவரும் முன்பு போல் சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியாதே, என நினைத்து அதற்காக அவர்கள் புதுவித யுக்தியை கையாண்டனர்.
அதன்படி, நண்பர்கள் ஒன்று சேர்ந்து 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஒன்றை போட்டனர்.
அதில் "திருமணத்திற்கு பிறகு எப்போதும் போல் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே செல்வதற்கும், வெளியூர் சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்காமல் நண்பர்களுடன் சந்தோஷமாக வெளியில் சுற்றுவதற்கு தடையாக இருக்க மாட்டேன்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை படித்து பார்த்த மணப்பெண் பவித்ராவும் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் புன்சிரிப்புடன் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
மேலும், இதுகுறித்து நண்பர்கள் கூறுகையில்:-
பிரபல தமிழ் சினிமாவில் (மைனா) வரும் காட்சிகளை போல் வெளியில் செல்லும் கணவனிடம் எப்ப வருவீங்க... எப்ப வருவீங்க... என கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காக தான் மணப் பெண்ணிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம் என்றனர்.
திருமணம் முடிந்த கையோடு பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கியதால், இனி நம் நட்பிற்குள் எந்த பிரிவும் ஏற்படாது என நண்பர்கள் உற்சாகம் அடைய, திருமணத்திற்கு வந்திருந்த பழைய கணவன்மார்கள் சிலர் தங்கள் திருமணத்தின் போதும் தனது நண்பர்கள் இது போல் பத்திரத்தில் கையெழுத்து வாங்காமல் விட்டு விட்டார்களே.. என ஏக்கம் அடைந்தனர்.
- திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.
- முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை
தரங்கம்பாடி:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 2000-வது குடமுழுக்கு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இன்றுடன் 2005 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளது. திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.
ஆதீனங்கள் ஒருசேர இந்த ஆட்சியோடு இணக்கமாக இருந்து பக்தி பரவசத்தோடு ஆட்சியை ஆதரிப்பது கடந்த காலங்களில் இல்லை.
முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அனைவரும் எப்படி ஆதரிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்? எதிர்தரப்பினரின் கருத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு எதிர்மறையாக வினையாற்ற இந்து சமய அறநிலையத்துறை தயாராக இல்லை.
முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. உலகமே பாராட்டும் அளவிற்கு முத்தமிழ் மாநாடு சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.
இதுவரை ரூ.6,750 கோடி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கிறது.
கோவில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் வந்தாலும், அந்தத் திட்டம் பயன் தரக்கூடிய திட்டமாகவே உள்ளது. பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாரம்பரிய நகைகளை தவிர்த்து புதிதாக பக்தர்கள் வழங்கிய நகைகள் மத்திய அரசின் நகை உருக்கு ஆலைக்கு கொண்டு சென்று உருக்கி எந்த கோவிலில் இருந்து எடுத்துச் சென்றோமோ அதே கோவிலில் டெபாசிட் செய்வதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் கூறினார். மேலும் ரூ.15 கோடிக்கு வருவாய் வரும் அளவில் கோவில் நகைகள் மதிப்பீடும் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
- பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வர தொடங்கி உள்ளனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
பெருவிழாவை யொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வரத் தொடங்கி உள்ளனர்.
இவர்கள் வெயில் நேரங்களில் ஓய்வு எடுத்தும், காலை மற்றும் மாலை நேரங்களில் மாதா பாடல்களை பாடியவாறும் நடைபயணம் மேற்கொள்வர்.
அதன்படி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை கடந்து பேராலயம் சென்றடைவர்.
அவ்வாறு, இரவில் சாலையில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக விபத்தில்லாமல் சாலைகளில் நடந்து செல்லும் வகையில் அவர்களது பைகள், உடைமைகளில் இரவில் ஒளிரும் பிரதிபளிப்பு ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதன் மூலம் எதிர்பாராத வகையில் ஏற்படும் அசம்பாவிதங்கைளை தடுக்கலாம். இதற்கு மக்கள் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
- விசாரணை மயிலாடுதுறை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
- வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
குத்தாலம்:
மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக 2003-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் இருந்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பேரணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கலவரம் ஏற்பட்டது.
இது தொடர்பான விசாரணை மயிலாடுதுறை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொல்.திருமாவளவன் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், வக்கீல்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக வி.சி.க. தரப்பில் வக்கீல்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து, இந்த வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்