என் மலர்
தமிழ்நாடு
திராவிடம் என்பது இடத்தை குறிக்கும்.. நாட்டின் பிரதமரே திராவிடர்தான் -எச்.ராஜா
- டிடி தமிழ் நிகழ்ச்சியில் திராவிடநல் திருநாடும்' என்ற வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று மாலை தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது.
விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டின் சட்டத்தை மீறிய கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்" என்று போர்க்கொடி தூக்கினார்.
இந்நிலையில், நாட்டின் பிரதமரே திராவிடர்தான் என்று பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா, "திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். இனத்தை அல்ல. தர் என்றால் சமஸ்கிருதத்தில் மரம் என்று அர்த்தம். தக்காண பீடபூமிக்கு தெற்கே உள்ள காடுகள் நிறைந்த பகுதியில் 56 தேசங்கள் இருந்தது. அங்கு 2 பெரிய நிலப்பரப்புகள் இருந்தது. அதற்கு பெயர் பஞ்ச திராவிடம். இதில் முதல் மாநிலமே கூர்ஜரம் அதாவது குஜராத். அதனால் இந்த நாட்டின் பிரதமரே திராவிடர் தான். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.