என் மலர்
தமிழ்நாடு
குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- ஐந்தருவியில் குளிக்க தடை
- குற்றாலத்தை அடுத்த ஐந்தருவி பகுதியில் தண்ணீர் மெல்ல மெல்ல அதிகரித்தது.
- மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குண்டாறு மற்றும் அடவிநயினார் அணை பகுதிகளில் கனமழை பெய்தது.
தென்காசி:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைப்பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. சேர்வலாறு அணை பகுதியில் 1 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் நகர் பகுதிகளை பொறுத்தவரை செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சில இடங்களில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ந்த காற்று வீசியது. ஒரு சில இடங்களில் இரவில் லேசான சாரல் அடித்தது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் சீசன் முடிவுற்ற நிலையிலும் அவ்வப்போது பெய்யும் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. சில நாட்களாக மழை இல்லாததால் நீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் நேற்று இரவில் திடீரென மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக குற்றாலத்தை அடுத்த ஐந்தருவி பகுதியில் தண்ணீர் மெல்ல மெல்ல அதிகரித்தது. திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டு, மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டதால் இரவு முழுவதும் மட்டுமின்றி இன்று காலை வரை தடை நீட்டிக்கப்பட்டது.
அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையிலும் குற்றாலம் பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மற்ற அருவிகளில் குளிப்பதற்கு எவ்வித தடையும் இல்லாததால் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சீராகும் பட்சத்தில் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குண்டாறு மற்றும் அடவிநயினார் அணை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. குண்டாறில் 6.2 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.