என் மலர்
தமிழ்நாடு
சேலம், ஈரோடு, கரூர்... கூவி அழைக்கும் காலம் போய் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் பஸ் கண்டக்டர்கள்
- அரசு பஸ்களில் டிஜிட்டல் போர்டு, டிக்கெட் கொடுக்கும் கருவி, தானியங்கி கதவுகள், ஏ.சி. வசதி உள்ளிட்ட எத்தனையோ அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
- பயணிகள் எங்கு நின்றாலும் சத்தம் கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பஸ்சில் ஏறி பயணிப்பதற்கு வசதியாக அமைந்து உள்ளது.
கோவை:
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் பல்வேறு ஊர்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்கள் என்னென்ன ஊருக்கு செல்லும், எந்த வழித்தடம் வழியாக செல்லும் என்ற விவரங்கள் பக்கவாட்டு பகுதியில் எழுதப்பட்டுஇருக்கும். ஆனாலும் எழுத படிக்க தெரியாதவர்கள் கிராமங்களில் இருந்து வருவதால், அவர்களுக்கு பஸ்கள் எந்த ஊர்களுக்கு செல்கின்றன என்பது பற்றிய விவரம் தெரிய வாய்ப்பு இல்லை.
எனவே கண்டக்டர்கள் அந்த பஸ் செல்லும் ஊர்களின் பெயரை உரத்த குரலில் கூறி பயணிகளை அழைப்பார்கள். இந்த நடைமுறை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.
அரசு பஸ்களில் டிஜிட்டல் போர்டு, டிக்கெட் கொடுக்கும் கருவி, தானியங்கி கதவுகள், ஏ.சி. வசதி உள்ளிட்ட எத்தனையோ அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
இருப்பினும் பஸ் நிலையத்திற்குள் வண்டி நுழைந்ததும் கண்டக்டர்கள் ஊர்ப்பெயரை கூறி பயணிகளை அழைக்கும் முறை மட்டும் மாறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கோவை மண்டல போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் குளிர்சாதன மற்றும் சொகுசு பஸ்களில் சம்பந்தப்பட்ட வாகனம் செல்லும் வழித்தடம் மற்றும் ஊர்ப்பெயரை அறிவிக்க ஏதுவாக, தானியங்கி ஒலிபெருக்கி வழங்கப்பட்டு உள்ளது.
சிறிய ரேடியோ போல இருக்கும் மேற்கண்ட சாதனம் பேட்டரி மூலம் இயங்குகிறது. இதில் சம்பந்தப்பட்ட பஸ் செல்லும் வழித்தடம், எந்தெந்த ஊர்களில் நிற்கும் என்பவை பற்றிய விவரங்கள் குரல் வழியில் பதிவு செய்யப்படுகின்றன.
பஸ் நிலையங்களுக்குள் வண்டி வந்ததும் மேற்கண்ட கருவியை வண்டியின் முன்பகுதியில் கண்டக்டர்கள் எடுத்து வைத்து சுவிட்சை போட்டு விடுகின்றனர்.
அதன்பிறகு தானாகவே கருவியில் இருந்து குரல்வழிப்பதிவு ஒலிபரப்பாக தொடங்கி விடுகிறது. சேலம், ஈரோடு, கரூர் என பஸ் இயக்கப்படும் ஊர்களின் பெயரை மாறி, மாறி ஒலிபரப்பிக் கொண்டே இருக்கிறது.
இதன் மூலம் பயணிகள் எங்கு நின்றாலும் சத்தம் கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பஸ்சில் ஏறி பயணிப்பதற்கு வசதியாக அமைந்து உள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் நடைமுறைக்கு வந்து உள்ள இந்த குரல் ஒலிபரப்பு சாதனம், கண்டக்டர்களின் பணிப்பளுவை குறைக்கும் வகையில் உள்ளது.
இதுகுறித்து கோவை அரசு பஸ் கண்டக்டர்கள் கூறியதாவது:-
பஸ்சில் ஏறுவோருக்கு டிக்கெட் போடுவது, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, பயணிகளை பத்திரமாக ஏற்றி இறக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் ஏகப்பட்ட சத்தம்-கூச்சல்களுக்கு மத்தியில் ஊர்கள் பெயரைக் கூறி பயணிகளை கூவி கூவி அழைத்து வந்தோம். இதனால் எங்களுக்கு தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன. தற்போது தானியங்கி மைக் ஒலிபரப்பு சாதனம் எங்களின் பணிப்பளுவை வெகுவாக குறைத்து உள்ளது மகிழ்ச்சி தருகிறது. பயணிகளும் மகிழ்ச்சியுடன் பஸ்சில் ஏறி பயணிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.