என் மலர்
தமிழ்நாடு
கள ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் 19-ந்தேதி ஈரோடு பயணம்
- ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
- சோலாரில் ரூ.18 கோடியே 48 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள காய்கறி, பழங்கள், மளிகை என மொத்த சந்தை வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார்.
ஈரோடு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து பேசி வருகிறார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற 19-ந்தேதி, 20-ந் தேதி என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 19-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து காலை 10 மணி அளவில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை வழியாக ஈரோட்டுக்கு அங்கு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணிக்கு முதலச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு விருந்தினர் மாளிகைக்கு சிறிது ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மாலை 5 மணி அளவில் மேட்டுக்கடை பகுதியில் தங்கம் மகாலில் நடக்கும் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மாலை 6 மணி அளவில் தி.மு.க. கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரக்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். இரவில் ஈரோடு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
அதைத்தொடர்ந்து 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட 6 தளங்கள் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகம், ஈரோடு பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்ட வெளிவட்ட சுற்றுச்சாலை (ரிங்ரோடு), ஈரோடு வைராபாளையத்தில் அமைக்கப்பட்ட கூடுதல் உரக்கிடங்கு, சென்னிமலையில் சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சோலாரில் ரூ.18 கோடியே 48 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள காய்கறி, பழங்கள், மளிகை என மொத்த சந்தை வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அதிகாரிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.