என் மலர்
தமிழ்நாடு
கடலூர்- புதுச்சேரி- சென்னை சாலை போக்குவரத்து சீரானது
- கிராம மக்கள் அரசூர் கூட்டு சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
- 2 தினங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்ததால், இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாறு, அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை ஆறு, நரி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 1-ந்தேதி இரவு மலட்டாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அதன் கரையோரம் உள்ள திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம், அரசூர், காரப்பட்டு, இருவேல்பட்டு, ஆனத்தூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. நேற்று முன்தினம் இரவுக்கு மேல்தான் வெள்ளம் வடிய தொடங்கியது.
நேற்று காலை வரை குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் அதிகாாிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆத்திரம் அடைந்த அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அரசூர் கூட்டு சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர், அரசூர் கூட்டுசாலையில் துண்டிக்கப்பட்ட இடம், இருவேல்பட்டு குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை நோில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில், கடலூர் - புதுச்சேரி - சென்னை சாலையில் பல இடங்களில் தென்பெண்ணை ஆற்று நீர் சாலைக்கு மேல் சென்றதால் நேற்று முன்தினம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது
2 தினங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்ததால், இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி, வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அப்பகுதியில் இன்று இயல்பு நிலை திரும்பியது.