என் மலர்
தமிழ்நாடு
ராகி தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானை கூட்டங்கள்- நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
- யானை கூட்டங்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த ராகி பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் தாளவாடி, ஆசனூர், கடம்பூர், திம்பம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
அவ்வபோது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சென்னப்பா. இவர் அவரது தோட்டத்தில் 4 ஏக்கர் ராகி பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் இவரது தோட்டத்தில் புகுந்த 10-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த ராகி பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது. சென்னப்பா இன்று காலை தோட்டத்தில் சென்று பார்த்த போது ராகி பயிரை யானை கூட்டங்கள் சேதப்படுத்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் தோட்டம் முழுக்க யானை சாணங்கள் அதிக அளவில் இருந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட யானை கூட்டம் தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்தில் முகாமிட்டுள்ளன.
இந்த யானை கூட்டங்கள் குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு மலை கிராமமாக சென்று பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாளவாடி அருகே உள்ள கிராமத்தில் சம்பங்கி பூந்தோட்டத்திற்குள் புகுந்த 10-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் பூக்களை சேதப்படுத்தியது. அதே யானை கூட்டங்கள் தான் தற்போதும் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி இருக்கலாம் என கருதுகிறோம்.
எனவே தாளவாடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம மக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றனர்.
இந்நிலையில் விவசாயி சென்னப்பன் மற்றும் விவசாயிகள் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் ஊருக்குள் புகாதவாறு பெரிய அகழி வெட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.