என் மலர்
தமிழ்நாடு
குடியிருப்புகளில் தேங்கிய வெள்ளம் வடிகிறது- இயல்பு நிலைக்கு திரும்பும் கடலூர்
- பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
- ஆயிரக்கணக்கான வீடுகள், சிறு பாலங்கள், பாலங்கள், சாலைகள் போன்றவை பெருமளவில் சேதமடைந்து உள்ளன.
கடலூர்:
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது.
இந்த நிலையில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் தண்ணீர் வடிந்து வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீர் தற்போது கணிசமாக வடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தண்ணீர் வடிந்து வரும் நிலையில் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான வீடுகள், சிறு பாலங்கள், பாலங்கள், சாலைகள் போன்றவை பெருமளவில் சேதமடைந்து உள்ளன. மேலும் பல்வேறு கிராமங்களுக்கு சாலை துண்டிக்கப்பட்டு பெரும் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றது.
இது மட்டும் இன்றி பாதுகாப்பு மையங்களில் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் உரிய முறையில் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை எனக் கூறி தொடர்ந்து மறியல் போராட்டமும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மோட்டார்கள் மூலம் தண்ணீரில் வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் வடியாத பகுதிகளில் இருந்து பொதுமக்களை படகு மூலமாக தன்னார்வலர்கள் மீட்டு வருவதையும் காணமுடிந்து வருகின்றது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.