search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    யானையை விரட்ட வீட்டு முன்பு மிளகாய் பொடி கரைசல் துணி கட்டும் வனத்துறையினர்
    X

    வீட்டின் வாசல் முன்பு மிளகாய் பொடி கரைசலில் ஊற வைத்த துணிகளை வனத்துறையினர் கட்டுவதை படத்தில் காணலாம்.

    யானையை விரட்ட வீட்டு முன்பு மிளகாய் பொடி கரைசல் துணி கட்டும் வனத்துறையினர்

    • குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை யானையால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
    • பந்தலூர் பகுதியில் கூடுதல் தலைமை வனபாதுகாவலர் நாகநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சேரம்பாடி, பிதர்காடு வனச்சரகத்தில் சேரங்கோடு டேன்டீ, சின்கோனா, நர்சரி, படச்சேரி, சேரங்கோடு பஜார், தட்டாம்பாறை, அய்யன்கொல்லி, மூலைக்கடை, சேரம்பாடி டேன்டீ உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட வீடுகளையும், விளைநிலங்களையும் புல்லட் என்ற ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தி வருகிறது. அத்துடன் கண்ணில் பட்ட வாகனங்களை தாக்குவது, பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்துகிறது. இப்படி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை யானையால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    புல்லட் யானையை வனத்துறையினர் 75 வனப்பணியாளர்கள் மூலம் 5 குழுக்களாக பிரிந்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கின்றனர். கும்கி யானைகள் உதவியுடனும் அடிக்கடி ரோந்து சென்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். புல்லட் யானை இருக்கும் இடத்தை கண்டறிந்து, அந்த யானை கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புல்லட் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தெப்பக்காடு போன்ற யானைகள் முகாம்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கிளன்ராக் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் புல்லட் யானையை சேரம்பாடி டேன்டீ தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை குறி வைத்து தாக்கி சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் பந்தலூர் பகுதியில் கூடுதல் தலைமை வனபாதுகாவலர் நாகநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

    அத்துடன் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழையாமல் இருக்க மதம் பிடித்த யானைகளின் சாணத்தை கரைத்து வீட்டு முன்பு தெளிக்கவும், மிளகாய் தூளை வேப்ப எண்ணெயில் கலந்து துணிகளில் நனைத்து அதனை வீடுகள் முன்பு கட்டவும் உத்தரவிட்டார்.

    இதையடுத்து வனத்துறையினர் சேரம்பாடி டேன்டீ பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் வீடுகள் மற்றும் கடைகள் முன்புள்ள கதவுகளில் மிளகாய் கரைசலில் ஊற வைத்த துணிகளை தோரணங்களாக கட்டி வருகின்றனர்.

    அத்துடன் வீட்டின் முன்பு மதம் பிடித்த யானை சாணத்தை கரைத்து தெளிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    மதம்பிடித்த ஆண் யானையின் நடமாட்டம் இருக்கும் பகுதிகளை மற்றொரு ஆண் யானை தவிர்க்கும்.

    இதனால் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போது மஸ்தில் இருக்கும் யானைகளின் சாணத்தை சேகரித்து பல பகுதிகளில் தெளித்து வருகிறோம். யானை சாணத்தை நெருப்பில் போட்டு புகை உண்டாக்கப்படுகிறது.

    வீடுகளின் கதவுகள், ஜன்னல்களில் மிளகாய் தூள் தடவப்பட்ட துணிகளால் தோரணம் கட்டியுள்ளோம். இதனால் அந்த யானை ஊருக்குள் நுழையாமல் இருக்கும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    வனத்துறையின் இந்த முயற்சி பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×